புதுமை மருத்துவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,865 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குவளைக்குளம் என்னும் ஒரு சிற்றூரிலே நாகமணி என்னும் பெயருடையவன் ஒருவன் முற்காலத்திலே இருந்தான். அவனுடைய உடலிலே நல்ல ஆற்றல் இருந்தது. இளமையின் துடிப்பும் அவன் உள்ளத்தை அளவுகடந்து ஊக்கிற்று. எல்லோருஞ் செய்கிற காரியங்களுக்கு எதிரிடையாகவே இருக்கும் நாகமணி யின் காரியங்கள்.

நாகமணி இயற்கையறிவோ , கல்வியறிவோ உடையவன் அல்லன். ‘இளங்காளை பயமறியாது’ என்பதற்கேற்ப இளமையின் மிடுக்கால் எதற்கும் அஞ்சாது அறிவற்ற காரியங்களையே அவன் செய்து திரிந்தான். அதனால் ஏற்படுகிற தீமைகளையும் நாகமணி ஒரு பொருட்படுத்துவதில்லை.

நாகமணியின் தந்தைக்குக் கடுமையான காய்ச்சல் நோய் கண்டிருந்தது. பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தும் நோய் தணியவில்லை. காய்ச்சலின் கடுமை மிகக் கொடுமையாக இருந்தது. நாகமணி தந்தையின் உடம்பில் கையை வைத்துப் பார்த்தான். சூடு தாங்க முடியவில்லை. நோயாளியோ பலவாறு புலம்பினான்.

நாகமணி ஒரு கணம் எண்ணமிட்டான். சுடுகிற பொருள்களின் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றினால், குளிர்ச்சியை அடைகிறது. காய்ச்சலைத் தண்ணீரினால் ஏன் நீக்கக்கூடாது என்று எண்ணினான். தந்தையைத் தூக்கிக்கொண்டு போய்க் குளிக்கும் இடத்தில் வைத்து இரண்டு குடந் தண்ணீரைத் தலையில் ஊற்றினான். உலர்ந்த துணியால் ஈரத்தைத் துவட்டிவிட்டான். இந்தப் புதுமையான மருத்துவத்தால் உடலில் குளிர்ச்சி பிறந்தது. நாகமணியின் தந்தை மிக விரைவில் இறந்து விட்டான். ஊரார்கள் பலரும் நாகமணி யைப் பலவாறு இகழ்ந்துரைத்தார்கள். தான் மட்டும் புதுமையாக ஒரு வேலையைச் செய்தால் இகழ்ச்சி நேரிடுவது திண்ணம்.

“நாடொப்பன செய்” (இ – ள்.) நாடு – நாட்டிலே உள்ளவர்கள் பலரும்; ஒப்பன – ஒப்புக்கொள்ளத்தக்க செயல்களை ; செய் – நீ செய்வாயாக!

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *