தெற்கு காரசேரி எனும் கரிசல்காட்டுப் பகுதியில், ஒரு பனைமரம் இருந்தது. அதன் உடல் கறுப்பாகவும் ஓலைகள் பச்சைப் பசேல் என்றும் இருந்ததால் அந்தப் பனைமரம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
பலவிதமான பறவைகள் அந்தப் பனைமரத்துக்கு வந்து தங்கிச் செல்லும் என்றாலும் ஓர் அழகான பச்சைக்கிளி மட்டும் அந்தப் பனைமரத்துடன் பாசத்தோடு பழகியது.
இரை தேடிச்செல்லும் சமயங்கள் தவிர, மற்ற நேரங்களில் அந்தப் பச்சைக்கிளி அந்தப் பனைமரத்திலேயே தங்கிக் கொண்டது.
பனைமரமும் பச்சைக்கிளியும் மனந்திறந்து பேசி மகிழும். கிளி இரை தேடும்போது ஏற்படும் அனுபவங்களைப் பனைமரத்தோடு பகிர்ந்து கொள்ளும். அந்த அனுபவங்கள் பனை மரத்தை மெய்சிலிர்க்கச் செய்யும்.
ஒருநாள் வேடன் ஒருவன் விரித்த வலையில் சிக்கவேண்டிய நிலையில், பச்சைக்கிளி அதிலிருந்து மயிரிழையில் தப்பித்து வந்தது. அந்த அனுபவத்தைக் கிளி சொல்லக் கேட்டதும் பனைமரம் பதறியது.
“”கிளியே, கிளியே, உனக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இனிமேல் இரை தேடிச் செல்லும்போது கவனமாகப் போய் வரவேண்டும்” என்று ஆலோசனையும் சொன்னது பனைமரம்.
இரை தேடிச் செல்லும்போது கிடைக்கும் அழகிய பழங்களை கிளி பனைமரத்திற்கு கொண்டுவந்து கொடுக்கும். பனைமரமும் அந்தப் பழங்களை ஆசையோடு தின்று மகிழும். “”கடவுள், உன்னைப்போல எனக்கும் இறக்கைகள் கொடுத்திருந்தால் நானும் வானில் பறந்து வட்டமடிப்பேன்” என்ற தன்னுடைய ஆசையை கிளியிடம் அடிக்கடி பனைமரம் சொல்லும். தன் இனிய பதநீரை கிளிக்குத் தந்து மகிழும்.
ஒருநாள் கிளி இரை தேடிச் சென்றபோது தன் அணில் நண்பனை தன்னுடன் அழைத்து வந்து பனைமரத்திடம் அறிமுகம் செய்து வைத்தது. அணிலும் பனைமரமும் நீண்டநேரம் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தன. தன்னிடமுள்ள இளம் நுங்குகளை அணிலுக்குத் தந்து மகிழ்ந்தது பனைமரம்.
அணிலும் நுங்கை ரசித்து ருசித்தது.
“”ருசியான நுங்கை சுமக்கும் நீ உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவன். உன் உடல் கறுப்பு என்றாலும் உள்ளம் வெள்ளை” என்று புகழ்ந்தது அணில்.
அடிக்கடி வந்து தன்னைச் சந்தித்துச் செல்லும்படி அணிலிடம் கேட்டுக்கொள்ள அதுவும் சம்மதித்தது. பின்பு பனைமரத்திடமிருந்து பிரியாவிடை பெற்றது.
ஒருநாள் கிளி, பனைமரத்துக்குத் திரும்ப வெகுநேரமாகிவிட்டது. வெளிச்சம் மங்கி இரவாகத் தொடங்கியது.
கிளியைக் காணாத பனைமரத்துக்கு அழுகை அழுகையாய் அழுதது.
வெகுநேரம் கழித்து வந்த கிளியைப் பார்த்த பின்புதான் வாடியிருந்த அதன் முகம் மலர்ந்தது.
“”ஏன் இவ்வளவு நேரம்?” என கேட்டது பனைமரம்.
“”உனக்காக அத்திப்பழங்களைக் கொண்டுவர வெகுதூரம் போய்விட்டேன். அதனால் நேரமாகிவிட்டது” என்றது கிளி.
“”இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது” என்ற பனைமரம், கிளி கொடுத்த அத்திப்பழங்களை ஆவலோடு உண்டது.
“”நீ வரவில்லை என்றதும் பதறிப்போய் விட்டேன் என்றது” பனை.
மற்றொரு நாள், ஆலமரத்தின் கனிகளைக் கிளி ஆசையோடு கொத்தித் தின்று கொண்டிருந்தபோது மேகம் சூழ்ந்தது. இடி இடித்தது. மின்னல் மின்னியது. மழை வரும் போலிருந்தது. அதற்குமுன் பனை நண்பனிடம் சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் கிளி வேகமாகக் கரிசல் காட்டை நோக்கிப் பறந்தது.
அப்போது சற்றுத் தொலைவில் ஒரு பெரிய இடி விழும் சத்தம் கேட்டது. இடி இடித்த சத்தத்தில் பயந்துபோன கிளி மேலும் வேகமாகப் பறந்தது.
பனைமரத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இடிவிழுந்து பனைமரம் தீயில் எரிந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டது கிளி.
“”ஐயோ… அம்மா வலிக்கிறதே” என்று அலறிக் கொண்டிருந்தது பனைமரம்.
பனை மரத்தின் அழுகுரலைக் கேட்டதும், அதிர்ச்சியில் உறைந்துபோன பச்சைக்கிளி, பனைமரத்தை நெருங்கி, தீயை அணைக்க முயன்றது.
“”கிளியே… வேண்டாம். தீயை அணைக்க முயலாதே. தீ உன்னையும் சுட்டுவிடும். தள்ளிப் போ” என எச்சரித்தது பனைமரம். இருந்தாலும் கிளி தீயை அணைக்க முயன்றது.
அதனால் முடியவில்லை. கிளியின் கால் ஒன்று தீயில் கருகிப் போனது. கிளி நொண்டிக் கிளி ஆனது.
“”கிளியே, என் விதி அவ்வளவுதான். நான் மடிந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பாசக்கார கிளியான உன்னைவிட்டுப் பிரிந்து போவதை நினைத்துத்தான் வேதனைப்படுகிறேன்” என்ற பனைமரம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைவிட்டது. கிளி தேம்பித் தேம்பி அழுதது. அதைத் தேற்ற அங்கு யாரும் இல்லை.
இடி விழுந்த பனைமரம் மொட்டைப்பனை ஆகிப்போனது என்றாலும் பனைமரத்தைப் பிரிய மனமில்லாத பாசக்கார பச்சைக்கிளி மட்டும் மனதில் நம்பிக்கையோடு காத்திருந்தது. பல கடவுள்களை வேண்டியது. எப்படியாவது மீண்டும் என் பனை நண்பனை துளிர்க்கச் செய்து விடுவார் கடவுள் என உறுதியாக நம்பியது.
ஒருநாள் அந்த வழியே முனிவர் ஒருவர் வந்தார். தன் ஞானதிருஷ்டியால் பனைமரத்திற்கு ஏற்பட்ட நிலையையும் அதைக் காப்பாற்ற முனைந்த கிளியின் கால் ஒன்று கருகியதையும் உணர்ந்தார்.
மொட்டைப்பனையில் இருந்த கிளியைப் பார்த்து, தன்னைப் பற்றியும், தன் ஞானதிருஷ்டியைப் பற்றியும் பனைமரத்திற்கு இடியால் ஏற்பட்ட நிலையையும் எடுத்துச்சொல்லி,
“”உனக்கு, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை என் தவ வலிமையால் செய்வேன்” என்றார்.
உடனே கிளி, “”நான் ஒற்றைக்காலோடு அலைந்து திரிந்தால்கூட பரவாயில்லை. என் பனை நண்பன் உயிர்பெற வேண்டும். உதவுங்கள்” என்றது கிளி.
உடனே முனிவர், ”உன்னுடைய நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது. இழந்த காலை கேட்காமல், உன் பனைமர நண்பன் உயிர் பெற உதவக் கேட்டாயே! இதுதான் உனது நல்ல எண்ணத்திற்கு அடையாளம். எனவே உன் பனை நண்பன் என் தவ வலிமையால் மீண்டும் உயிர் பெறுவான். நீயும் இழந்துபோன காலைத் திரும்பப் பெறுவாய்” எனக் கூறி ஏதோ மங்கள வார்த்தை ஒன்றைச் சொல்ல, பனைமரம் மீண்டும் துளிர்க்க கிளியின்
ஒற்றைக் காலும் குணமானது. பனைமரமும் பாசக்காரக் கிளியும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ள, அந்தப் பாச நிகழ்வுகளை ரசித்துக் கொண்டிருந்தார் முனிவர்.
கடவுள்தான் முனிவர் வடிவில் வந்ததாக உணர்ந்தது கிளி.
நீதி: கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள்.
– எஸ்.டேனியல் ஜூலியட் (டிசம்பர் 2013)