மிக மிக நீண்ட காலத்துக்கு முன் ஆல்ப்ஸ் மலையின் சாரலில் ஒரு சின்ன நாடு இருந்தது. அது ஓர் பனி படர்ந்த நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் ஒருவன். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் அழகே வடிவானவள். அவளுடைய அழகு, உலகம் பூராவும் பேசப்படத் தக்க அழகாக இருந்தது. ஆகவே அவளை எப்படியாவது மணந்து கொள்ள வேண்டும் என்று பன்னாட்டு இளவரசர்களும் போட்டியிட்டனர்.
எனவே, தன்னை மணக்க வருபவர்களுக்கு அவள் போட்டி ஒன்றை வைத்தாள். அந்தப் போட்டியில் வெல்பவர்களை மணந்து கொள்வதாக அறிவித்தாள்.
தன்னை மணக்க வரும் இளவரசனுக்கு முதலில் ஒரு விருந்து தருவாள். அப்போது அவனுடன் அவளும் அந்த விருந்தில் கலந்து கொள்வாள். அதன் பிறகு ஒரு தட்டில் ஒரு பனிக் கட்டியைக் கொணரச் செய்து அவள் முன் வைப்பாள். அவனுடைய கையில் கெட்டியான நூல் ஒன்றினைக் கொடுத்து அதன் உதவியினால் பனிக் கட்டியை உயரத் தூக்கிக் காட்டச் சொல்வாள். அப்போது அந்தக் கயிற்றைப் பனிக் கட்டியைச் சுற்றிக் கொண்டு போகக் கூடாது என்று நிபந்தனையும் விதிப்பாள்.
அதாவது நூலின் ஒரு முனையானது பனிக் கட்டியின் மேல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். வேண்டுமானால் அதைப் பனிக்கட்டியில் ஒட்டிக் கொள்ளலாம். ஆனால் அதை ஒட்ட பனிப் பொடியைத் தான் உபயோகிக்க வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்று.
ஒவ்வொரு நாளும் பலப்பல ராஜ குமாரர்கள் வந்தனர். அவர்கள் காலை, மதியம், இரவுச் சாப்பாட்டு வேளையில் அழைக்கப்பட்டனர். தோற்றவர்களைச் சிறையில் பிடித்து அடைக்கும்படி கட்டளையிட்டாள்.
ஏன், இவ்வளவு பேசும் நீ அதைச் செய்து காட்டு என்று எவராவது துடுக்காகக் கேட்டால் அவள் அதைச் செய்தும் காட்டுவாள். இது ஏமாற்றும் வேலை அல்ல, எளிதில் வெல்லும் ஒரு சிறு தேர்வுதான் என்பாள். எனவே முகம் வாடி, அவமானப்பட்டு சிறைப் பட்டனர் இளவரசர்கள்! அவர்களை வழக்கமான குற்றவாளிகளை அடைக்கும் சிறைச் சாலையிலே அடைக்காமல் தன் அரண்மனையின் ஒரு பக்கத்திலுள்ள பெரிய மாளிகையிலேயே அடைத்து வைத்தாள்.
நாட்கள் ஓடின. ஓராண்டு விளையாட்டுப் போல ஓடி மறைந்தது. அந்த நாட்டுக்கு அருகிலே இன்னொரு பெரிய நாடு இருந்தது. அந்த நாட்டின் இளவரசனின் பெயர் ஜான். அவன் மேரியாவின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். எனவே, மேரியாவின் நாட்டில் இருந்த முதல் அமைச்சருக்கு அவன் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினான். தான் மேரியாவை மணந்து கொள்ள ஆசைப்படுவதாகவும், ஆகவே மேரியா வைக்கும் போட்டியில் கலந்து கொள்ளக் கிளம்பி வரப் போவதாகவும், எப்போது வர வேண்டும் என்றும் கேட்டிருந்தான்.
அந்த முதலமைச்சர் ஆபத்து ஒன்றில் மாட்டிக் கொண்டிருந்தார். அவர் அங்குள்ள இயற்கைக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது ஒரு புலி பாய்ந்தது.
அந்த வேளையில் நிலை தடுமாறிய அவர் அங்குள்ள பள்ளத் தாக்கிலே உருண்டார். அது மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. அதில் விழுந்தவர் இதவரை உயிர் பிழைத்ததே இல்லை. எனவே, அவர் கைக்குக் கிடைத்த மரக் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்கினார்.
அவர் ஒரு வேளை தப்பி மேலே வரக் கூடும் என்பதை உணர்ந்த புலி மேலேயே உட்கார்ந்து இருந்தது. இதை அருகில் இருந்த மரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பரண் ஒன்றில் அமர்ந்திருந்த ஜான் கவனித்தான்.
ஆகவே, அவன் விரைந்து செயலாற்றினான். புலியை அம்புகள் எய்து கொன்றான். கால தாமதம் இல்லாமல் காட்டுக் கொடிகளை முறுக்கி பள்ளத் தாக்கில் தொங்கிக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப் பிடித்து வெளியே வந்து முதல் உதவிகளைச் செய்தான்.
அன்றைய தினத்திலிருந்து ஜானைத் தன் மகன் போல நேசித்தார். எனவே, தான் அவருக்குக் கடிதம் எழுதி இருந்தான் ஜான். முதல் அமைச்சர் அதற்கு உடனடியாகப் பதில் எழுதினார்.
“”அவசரப்படாதே! போட்டியில் வெற்றி பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.அதன் பின் போட்டியில் கலந்து கொள்ளலாம்!”
இதற்கிடையே அமைச்சர், மேரியா போட்டியில் எப்படி வென்று காட்டுகிறாள் என்று கண்ணும் கருத்துமாக கண்காணித்தார். ஒரு நாள் அவர் அதைக் கண்டு பிடித்தும் விட்டார்.
அதை அவனுக்குத் தெரியப் படுத்தினார் அமைச்சர்.””உடனே புறப்பட்டு வா…” என்று அழைப்பும் அனுப்பினார். ஜான் புறப்பட்டு வந்தான். மேரியாவைச் சந்தித்தான். போட்டியில் கலந்து கொள்ளப் போகிறேன் என்றான்.
“”போட்டியில் தோற்றால் சிறைச்சாலை!” என்று கூறினாள் மேரியா. ஜான் சம்மதித்தான். முதலில் விருந்தளிக்கப்பட்டது. பின் ஒரு தட்டிலே பனிக் கட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஓர் உறுதியான நூலும் அவனிடம் தரப்பட்டது.
மேரியா கூறினாள்.
“”இந்த நூலை உபயோகித்து இந்தப் பனிக் கட்டியினைத் தூக்குங்கள்!”
உடனே ஜான் நூலை எடுத்துப் பனிக்கட்டியின் அடியில் விட்டு சுற்றிலும் கட்டப் போனான். அப்போது மேரியா கூறினாள்.
“”இளவரசே! நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. அது சிறு பிள்ளைக் கூடச் செய்யும், பிள்ளை விளையாட்டு. நூலின் ஒரு நுனி மட்டுமே பனிக் கட்டியின் மேலே இருக்க வேண்டும். அந்த நுனியானது பனிக் கட்டியைப் பற்றிக் கொள்ள,
இன்னொரு நுனியைக் கொண்டு தூக்க வேண்டும்.
அதை ஒட்ட வைக்க இங்கு இருக்கும் பனித் தூளை வேண்டுமானால் உபயோகிக்கலாம்!”
இவ்வாறு, கூறிய அவள் ஒரு கிண்ணத்தில் பனித் தூளைப் போட்டு அவனிடம் தந்தாள்.
“”ஓஹோ, இதை முன்பே சொல்லி இருக்கலாமே! இந்தப் பனிப் பொடியைக் கொண்டு இந்தப் பனிக் கட்டியை எளிதில் தூக்கி இருக்க முடியுமே!” என்று கூறினான் அவன்.
அவள் கிண்ணத்தைத் தரும் போதே அவளுக்குத் தெரியாமல் தன் வலது கையினால் தன் மடியில் உள்ள ஏதோ ஒன்றை எடுத்துச் சட்டென்று அக்கிண்ணத்தில் விட்டு விட்டு நூலின் ஒரு நுனியினை எடுத்துப் பனிக்கட்டி மீது வைத்துப் பனித் தூளை எடுத்து அதில் நன்றாக அமுக்கினான்.
பின் மேலும், சிறிதளவு பனிப் பொடியை எடுத்து அதில் போட்டு நன்றாக அமுக்கினான்.
“”இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால் நீ என்னை மணந்து தான் தீர வேண்டும், இல்லையா?” என்று கேட்டான்.
“”ஆம். நிபந்தனையே அதுதான்! தோற்று விட்டால் உங்களுக்குச் சிறைவாசம்தான்!” என்று சொல்லிச் சிரித்தாள் அவள். இவ்வாறு அவர்களுக்குள் உரையாடல் ஒரு சில நிமிடங்கள் நடந்தன. அவன் நூலில் மற்ற நுனியைப் பிடித்துத் தூக்கினான். மெதுவாக அவன் அதைத் தூக்க அந்தப் பனிக் கட்டி உயரக் கிளம்பிச் சென்றது.
மேரியா ஆச்சரியமடைந்தாள். மறுகணமே அவள் மிகவும் கோபத்தையும் அடைந்தாள். இருவருக்கும் கார சாரமான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் ஜானே வென்றான். அவள் ஆத்திரத்துடன் தன் அந்தப்புரம் சென்றாள்.
ஜான் அதன் பின் எல்லா இளவரசர்களையும் விடுதலை செய்தான். அவரவர் நாட்டுக்கு மரியாதையுடன் அனுப்பி வைத்தான்.
– செப்டம்பர் 17,2010