முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி.
ஒருநாள், அவன் தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது பாம்பு ஒன்று ஒரு சிலந்தியைப் பிடித்து உண்ண முயற்சித்துக் கொண்டிருந்தது. யோஸôகோவுக்கு சிலந்தி மீது இரக்கம் ஏற்பட்டது. உடனே அவன் தனது தடியை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்று அந்தப் பாம்பை விரட்டியடித்தான். உயிர் தப்பிய சிலந்தி விவசாயிக்கு நன்றிக்கடன் பட்டதாய், தனது தலையைச் சாய்த்து அவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, சென்று மறைந்தது.
இது நடந்து சில நாட்கள் ஆகியிருக்கும். ஒருநாள் யோஸôகோவின் வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அத்துடன் யாரோ மெல்லிய குரலில் “ஐயா’ என்று அழைப்பதும்கேட்டது.
கதவைத் திறந்து பார்த்தவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அங்கே ஓர் அழகிய பெண் நின்று கொண்டிருந்தாள்.
அவள், “”உங்களுக்கு ஆடை நெய்ய ஆள் தேவைன்னு கேள்விப்பட்டேன். தயவு செய்து நான் உங்கள் வீட்டில் இருக்க அனுமதி கொடுங்கள். நான் உங்களுக்குத் துணி நெய்து கொடுப்பேன்” என்றாள்.
யோஸôகோவுக்கு அவனுடைய தறியில் ஆடை நெய்ய உண்மையிலேயே ஆள் தேவை இருந்தது. அதனால் அவன் மிகுந்த சந்தோஷத்துடன் அந்தப் பெண்ணைத் தனது வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்தான்.
தறி இருந்த அறைக்கு அவளை அழைத்துச் சென்று காட்டினான். அவளும் உடனே ஆடை நெய்ய ஆரம்பித்தாள்.
அன்று இரவு தறி இருந்த அறைக்கு யோஸôகோ சென்றான். எவ்வளவு துணி நெய்திருக்கிறாள் பார்க்கலாம் என்று யோசித்தபடி சென்றவனுக்கு வியப்பு காத்திருந்தது.
அவன் வைத்திருந்த நூல்கள் எல்லாவற்றையும் நெய்து முடித்திருந்தாள் அந்தப் பெண்.
ஒரே நாளில் இவ்வளவு துணியை நெய்து முடிக்க யாராலும் முடியாது என்பது அவனுக்குத் தெரியும்.
அதனால் அந்தப் பெண்ணை விசாரித்தான்.
அந்தப் பெண் அவன் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் விந்தையாக இருந்தது.
“”நீங்கள் என்கிட்ட இந்த மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக்கூடாது. இனிமேல் இந்தத் தறி அறைக்குள் என் அனுமதியில்லாமல் நீங்கள் வரக்கூடாது” என்றும் கூறினாள்.
இதைக் கேட்டு, சரியென்று தலையாட்டினான் யோஸôகோ. இருந்தாலும் அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்ற எண்ணம் அவனுக்குள் சுழன்று கொண்டேயிருந்தது.
ஒருநாள், அவளுக்குத் தெரியாமல் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
அங்கே அவன் பார்த்த காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது.
அங்கே அந்தப் பெண்ணுக்குப் பதிலாக ஒரு பெரிய சிலந்தி துணி நெய்து கொண்டிருந்தது. அது பஞ்சை விழுங்கி நூலாக்கித் தனது வாயிலிருந்து வெளிக்கொண்டு வந்து, தறியில் நுழைத்து துணி நெய்து கொண்டிருந்தது. மளமளவென்று துணிகள் தயாராகிக் கொண்டிருந்தன.
அவன் அந்தச் சிலந்தியை நன்றாக உற்றுப் பார்த்தான்.
அப்போதுதான் தெரிந்தது – அந்தச் சிலந்தி இவனால் பாம்பிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிலந்தி என்பது.
அவன் செய்த உதவிக்கு, அது தனது நன்றிக்கடனை இப்படிச் செய்துகொண்டிருந்தது போல. அதனால்தான் அது பெண் வேடம் எடுத்துத் தனது வீட்டுக்கு வந்திருக்கிறது என்பதும் அவனுக்குப் புரிந்தது.
யோஸôகோ மிகவும் ஆச்சரியமடைந்தாலும் அது தனக்குச் செய்யும் கைம்மாறை எண்ணி மகிழ்வடைந்தான். அறையில் பஞ்சும் நூலும் காலியாகியிருந்ததைக் கவனித்தான்.
மறுநாள், அதிகாலையிலேயே யோஸôகோ நகருக்குச் சென்றான். பெருமளவில் பஞ்சை வாங்கிய அவன், அதன் மூலம் நிறையத் துணி கிடைக்கும், அதன் மூலம் தனது வருமானமும் அதிகரிக்கும் என்று எண்ணிக்கொண்டே பஞ்சு மூட்டையைச் சுமந்து கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்.
வழியில் ஓரிடத்தில் ஓய்வு எடுக்க எண்ணி, மூட்டைய இறக்கி வைத்துவிட்டு, சற்றே அமர்ந்தான். அப்படியே தூங்கிப் போனான். அப்போது, சிலந்தியைக் காப்பாற்றியபோது அவனால் விரட்டியடிக்கப்பட்ட பாம்பு அங்கே வந்தது.
அது அந்தப் பஞ்சு மூட்டைக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது.
விழித்தெழுந்த யோஸôகோ, இதைப் பற்றி ஒன்றும் தெரியாதவனாக, தனது மூட்டையைத் தூக்கிக் கொண்டு, வீடு நோக்கி நடந்தான்.
அளவுக்கதிகமாக பஞ்சு வந்ததைப் பார்த்த அந்தப் பெண் மகிழ்ந்து போனாள்.
உடனே தனது அறைக்குள் சென்று துணி நெய்யத் தொடங்கிவிட்டாள்.
அறைக்குள் சென்றதும் சிலந்தியாக மாறினாள். பஞ்சை எடுத்து மளமளவென்று விழுங்கியது. பிறகு நூலாக்கி, துணி நெய்ய ஆரம்பித்தது அந்தச் சிலந்தி.
அப்போது திடீரென மூட்டைக்குள்ளிருந்த பாம்பு வெளியே வந்து அந்தச் சிலந்தியைப் பிடித்து விழுங்குவதற்காகத் தனது வாயைத் திறந்தது.
இதைக் கவனித்து, திடுக்கிட்ட சிலந்தி, செய்வதறியாமல், ஜன்னல் வழியே வெளியில் குதித்து ஓடியது. பாம்பு அதனைத் துரத்திக்கொண்டே சென்றது. வயிற்றுக்குள் நிறையப் பஞ்சு இருந்ததால் சிலந்தியால் வேகமாக ஓட முடியவில்லை. பாம்பின் வேகத்துக்கு ஈடு
கொடுக்க முடியவில்லை.
வெகு சீக்கிரமே சிலந்தியை நெருங்கிய பாம்பு, தனது வாயைத் திறந்து அதை விழுங்கப் போகும்போது, மேலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சூரியனுக்கு அந்தச் சிலந்தி மீது இரக்கம் பிறந்தது. (யோஸôகோ சிலந்தியைக் காப்பாற்றியதும், சிலந்தி துணி நெய்து கைம்மாறு செய்து கொண்டிருப்பதும் சூரியனுக்குத் தெரியும்).
உடனே சூரியன் தனது ஒளிக்கற்றை ஒன்றை அனுப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் சிலந்தியைத் தூக்கி, விண்ணுக்குக் கொண்டு சென்றது. பாம்பால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
தனக்கு உதவி செய்த சூரியனுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்ட சிலந்தி ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்று நினைத்தது.
தான் உட்கொண்ட பஞ்சினைக் கொண்டு விண்வெளியில் அழகிய மெத்தை போல பறக்கவிட்டு அழகு பார்த்தது. வானமெங்கும் சிலந்தியின் வாயிலிருந்து வெளிவந்த பஞ்சு, மேகங்களாக உலாவி, வானமே அழகாக மாறியது.
இந்த மேகங்களைப் பார்த்த மக்கள், அவை பஞ்சு போல மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன என்று கூற ஆரம்பித்தார்கள்.
இதனால்தான் ஜப்பானிய மக்கள் சிலந்தியையும் மேகத்தையும் “கோ மு’ என்று ஒரே பெயரிட்டு அழைக்கின்றனர்.
– தமிழில்: உம்மு மைமூனா (ஜூன் 2013)