அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது.
“பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” என்று புன்னகையோடு கேட்டது அம்மா அணில்.
“அம்மா, இந்தக் காட்டுக்குச் சுற்றுலா வரும் மனிதக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல இட்லி, தோசை, நூடுல்ஸ் என்று எனக்கும் செய்து கொடுக்கக் கூடாதா?
“என்னது? இட்லி, தோசை, நூடுல்ஸா? அவர்கள் எல்லாம் மனிதர்கள். இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். நாம் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடக்கூடியவர்கள். அவரவர் உணவுப் பழக்கப்படிதான் அவரவர் சாப்பிடணும். இயற்கையில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவது நம் கடமை” என்றது அம்மா அணில்.
“என்னது! இயற்கை உணவு சாப்பிடுவது நம் கடமையா?” என்று பதில் கேள்வி கேட்டது குட்டி அணில்.
“ஆமாம். நீ இப்பவே பழங்கள் வேண்டாம் என்று மனிதர்கள் சாப்பிடுகிற உணவு வகையைக் கேட்கறே! இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, எனக்கு இந்த மரப் பொந்து வேணாம். மாடி வீடு வேணும்னு கூடக் கேட்பே” என்று சிரித்தது அம்மா அணில்.
“ஆமாம் கேட்பேன். அதுல என்ன தப்பு?”
“என்னது மாடி வீடா? உலகம் புரியாதவனா இருக்கே! மனிதர்கள் உணவுப் பழக்கத்தை விட நம் உணவுப் பழக்கம் ஒரு படி உயர்ந்தது தெரியுமா?”
“உயர்ந்ததா? எப்படி அம்மா?”
“நாம சாப்பிடற ஒவ்வொரு பழத்துக்குள்ளும் ஒரு மரம் இருக்கு!”
“என்னது, பழத்துக்குள்ள மரமா?” என்று அதிர்ச்சி அடைந்தது குட்டி அணில்.
“ஆமாம். நாம சாப்பிடுற பழங்களில் விதை இருக்கும். அந்த விதையை பூமிக்குள்ளே புதைத்தால் மீண்டும் முளைத்து, செடியாகி, மரமாகிவிடும்” என்றது அணில் அம்மா.
“ஓ! இப்படிதான் மரங்கள் உருவாகுதா?” என்று ஆச்சரியப்பட்டது குட்டி அணில்.
“ஆமாம். இதுபோல மரங்கள் உருவாக, பறவைகளும் நம்மைப் போன்ற விலங்குகளும் பேருதவி புரிகிறோம்.”
“நான் இதுவரை பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, விதைகளைப் போட்டு மரமாக்கினது இல்லையே?” என்று கேட்டது குட்டி அணில்.
மீண்டும் சிரித்தது அம்மா அணில்.
“என்னம்மா இதுக்கும் சிரிக்கிறீங்க?”
“உன்னோட கேள்வி எனக்குச் சிரிப்பை வரவழைக்குது. நீ சாப்பிடும் பழங்களின் விதைகளைப் பிறகு சாப்பிடலாம் என்று நிலத்தில் புதைத்து வைக்கிறே இல்லையா?”
“ஆமாம்மா! நிறைய இடத்தில் புதைச்சிருக்கேன். ஆனால் எங்கே புதைச்சேன்னு தெரியாமல் தேடிட்டு விட்டுடுவேன்” என்றது குட்டி அணில்.
“நீ புதைத்து வைக்கிற விதைகள் மண்ணுக்குள்ளதான் இருக்கும். கொஞ்சம் மழை வந்த பின்னாடி முளைக்கும். செடியாகத் துளிர்க்கும். அந்தச் செடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இதோ நாம வசிக்கிறோமே இதுபோல மரமாகிடும்“ என்றது அணில் அம்மா.
“அட! அப்படியா? அப்ப நானும் மரம் வளர உதவியா இருந்திருக்கேனா!” என்று ஆச்சரியத்தில் வாலை வேகமாக அசைத்தது குட்டி அணில்.
“ஆமாம். நமக்கு உதவி செய்யற இந்த இயற்கைக்கு நாம தெரிந்தோ தெரியாமலோ நம்மால் ஆன சிறு உதவியைச் செய்கிறோம். இது மனிதர்களால் கூட முடியுமான்னு தெரியலை. இதை நாம பல நூற்றாண்டுகளாகச் செய்கிறோம். அப்படிப் பார்த்தால் இங்கே இருக்கிற பல மரங்கள் நம்ம தாத்தா பாட்டி போட்ட விதையாகக்கூட இருக்கலாம். அதை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கு” என்றது அம்மா அணில்.
“ஓஹோ… நான் இதுவரை என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியாது. ஆனால் இனிமேல் இந்தப் பூமிக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வேன். எனக்குக் கிடைக்கும் விதைகளைப் பூமியில் புதைப்பதே என்னுடைய பெரிய வேலையா செய்யப் போறேன்” என்று பெருமிதத்துடன் சொன்னது குட்டி அணில்.
“நீ இதை முழுநேரமா செய்யணும்னு அவசியம் இல்லை. உன்னோட கடமையைச் செய்தாலே போதுமானது. அதாவது நாம் என்ன உணவைச் சாப்பிட முடியுமோ அதைச் சாப்பிட்டாலே போதுமானது. நம்மைப் போலவே பறவைகளும் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, எச்சத்தின் மூலம் விதைகளை வெளியேற்றுகின்றன. அதிலிருந்து புதிய மரங்கள் உருவாகின்றன“ என்றது அம்மா அணில்.
“அம்மா, நம்ம உணவையும் உணவின் மூலம் கிடைக்கும் பலனையும் அழகாக எடுத்துச் சொல்லிட்டீங்க!“ என்ற குட்டி அணில், அடுத்த மரத்துக்குத் தாவியது.
சிறிது நேரத்தில ஒரு பெரிய மாம்பழத்தைக் கொண்டுவந்தது. மெதுவாகச் சாப்பிட்டு முடித்து, மாங்கொட்டையைக் குழி தோண்டிப் புதைத்து வைத்தது.
எங்காவது புதிய மாஞ்செடி தென்பட்டால் அது குட்டி அணில் புதைத்த விதையாகக்கூட இருக்கலாம்!
– நன்றி: தி இந்து
வெரி நைஸ்