கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,652 
 

முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை காந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் மலர்க்கொடி என்ற மகள் இருந்தாள். பேரழகியாக விளங்கிய அவள் திருமணப் பருவம் அடைந்தாள். பல நாட்டு அரசர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டனர். யாருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பது என்று குழம்பினான் மன்னன்.

NaanThaan1

வெகு தொலைவில், மந்திர மலையில் கொடிய அரக்கன் இருந்தான். மாய மந்திரங்களில் வல்லவனான அவன், வான் வழியாகப் பறந்து கொண்டிருந்தான். அரண்மனைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசியை பார்த்து, அவள் அழகில் தன்னை மறந்தான்.

அன்றிரவு அவள் அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். யாரும் அறியாமல் அங்கே வந்த அரக்கன், அவளைத் தூக்கிச் சென்றான். மறுநாள் பொழுது விடிந்தது. இளவரசி காணாமல் போனதை அறிந்து, அரண்மனையே அமளிப்பட்டது. கட்டுக் காவல் நிறைந்த அந்தப்புரத்தில், இளவரசி எப்படி காணாமல் போய் இருப்பாள் என்று திகைத்தான் அரசன்.

வீரர்களாலும், பணிப்பெண்களாலும் எந்த விளக்கமும் தர முடியவில்லை. அவன் தனது குலகுருவிடம் சென்றான். நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னான்.

“”நீங்கள்தான் இளவரசி எங்கே இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும்,” என்று வேண்டினான். ஞானப் பார்வையால் நடந்ததை அறிந்த அவர், “”அரசே! அரக்கன் மூர்க்கடாம்பன் உங்கள் மகளைத் தூக்கிச் சென்று விட்டான்,” என்றார்.

“”மூர்க்கனா… அவன் எல்லையற்ற ஆற்றல் வாய்ந்தவன். மந்திர தந்திரங்களில் வல்லவன். அவனை வெல்ல யாராலும் முடியாதே. என் மகளை நான் பார்க்கவே முடியாதா?” என்று கதறினான்.

“”அரசே! நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அவனை கொல்வது இயலாத செயல் அல்ல. நம்பிக்கை இழக்காமல், முயற்சியில் இறங்கினால் வெற்றி பெறலாம்,” என்றார் .

“”அந்த அரக்கனைக் கொல்ல முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டான் அரசன்.

“”அரசே! அந்த அரக்கனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் அமாவாசையில் இருந்து முழுநிலவு வரை பதினைந்து நாட்கள் தூங்குவான். அதே போல, முழுநிலவில் இருந்து அமாவாசை வரை விழித்திருப்பான்.

விழித்திருக்கும் போது அவனைக் கொல்ல யாராலும் முடியாது; தூங்கும் போதுதான் அவனைக் கொல்ல முடியும்.

மந்திர மலையில் அவன் தங்கி உள்ளான். அங்கே செல்வது மிகவும் கடினம். வழியில் பெரிய மண் மலை, மந்திர மலையை மறைத்துக் கொண்டுள்ளது. அந்த மண் மலையை நிலத்தோடு நிலமாக நிரவ வேண்டும். அந்த மலை இருந்த அடையாளமே தெரியக் கூடாது. அப்பொழுதுதான் மந்திர மலைக்குச் செல்லும் வழி கிடைக்கும்.

அங்கிருந்து சென்றால் அரக்கனின் மந்திர மலை தெரியும். அந்த மலை ஒரே பாறையால் ஆனது. அதற்குள் அரக்கனின் மாளிகை உள்ளது. அங்கேதான் இளவரசி சிறை வைக்கப்பட்டு உள்ளாள். அந்த மலையை இரண்டாகப் பிளக்க வேண்டும். அப்பொழுதுதான் அரக்கனின் மாளிகைக்குள் சென்று, இளவரசியை மீட்க முடியும். இளவரசியை மீட்ட பிறகு அந்த மலையை மீண்டும் ஒன்றாகப் சேர்க்க வேண்டும். யாராலும் அதைப் பிளக்க முடியாதபடி இறுக்க கட்ட வேண்டும்.
முழு நிலவு வருவதற்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும். இதில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால், பிறகு அந்த அரக்கனைக் கொல்லவே முடியாது. அவன் நம் எல்லாரையும் அழித்து விடுவான். விருப்பம் இல்லாத எந்தப் பெண்ணையும் அவன் நெருங்க முடியாது. நெருங்கினால், அழிந்து விடுவான். அப்படி ஒரு சாபம் பெற்றுள்ளான். இளவரசியை அவன் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. நம்மாலான முயற்சி செய்வோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்,” என்றார்.
அரண்மனை வந்த அரசன், முரசு அடிப்பவனை அழைத்தான். குலகுரு சொன்னதை, நாட்டு மக்களுக்கு அறிவிக்கச் சொன்னான்.

“”இளவரசியை யார் மீட்டு வருகிறாரோ அவருக்கும், இளவரசிக்கும் திருமணம்,” என்று நாடு முழுவதும் இந்தச் செய்தியை அறிவித்தான்.

இதைக் கேட்ட மக்கள் அனைவரும், “”அரக்கனை யாரால் கொல்ல முடியும்? யாராவது எமனைத் தேடி வலியப் போவார்களா?” என்று பேசிக் கொண்டனர்.
அந்த நாட்டில் மேஷாக் என்ற இளைஞன் இருந்தான். வீர தீர சாகசச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த அவன், இளவரசியை அரக்கன் தூக்கிச் சென்ற செய்தியைக் கேள்விப்பட்டான்.

“இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் பேரும், புகழும் கிடைக்கும். இளவரசியும் கிடைப்பாள். தோல்வி அடைந்தால் உயிர்தானே போகும்,’ என்று நினைத்தான்.
உயிருக்குத் துணிந்த அவன் இந்த முயற்சியில் இறங்கினான்.

NaanThaan2

அரக்கன் தூங்கத் தொடங்கும் நாளான அமாவாசை வரை காத்திருந்தான். அமாவாசை வந்தது. கையில் வாளுடன் மந்திர மலையை நோக்கிப் புறப்பட்டான்.
நான்கு நாட்கள் தொடர்ந்து பயணம் செய்தான். குறுக்கே மாபெரும் மண் மலை இருந்தது.

“வானளாவ உயர்ந்து இருந்த அந்த மலையைப் பார்த்துத் திகைத்தான். இந்த மலையைக் கடக்கவே முடியாது போல உள்ளதே. எப்படி மண்ணோடு மண்ணாக நிரவ முடியும்? நாட்டு மக்கள் எல்லாரும் நூறு ஆண்டுகள் முயற்சி செய்தாலும் முடியாதே. இதை நிரவினால்தானே மேலே செல்ல முடியும். இன்னும் பத்து நாட்கள்தானே உள்ளன. என்ன செய்வது?’ என்று கவலை கொண்டான் அவன்.
அப்பொழுது தோளில் கலப்பையுடன் உழவன் ஒருவன் அங்கே வந்தான்.
அவனை வணங்கிய மேஷாக், “”ஐயா! அரக்கனை கொன்று, இளவரசியை மீட்கச் செல்கிறேன். இந்த மண் மலை குறுக்கே தடையாக உள்ளது. இதை நிரவினால்தான் என்னால் மேலே செல்ல முடியும். தாமதம் ஏற்பட்டால் என் முயற்சி அனைத்தும், வீணாகி விடும். என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கிறேன்,” என்று வருத்தத்துடன் சொன்னான் .

“”இதற்காகவா கவலைப்படுகிறாய்? இந்த மண் மலையை நான் ஒரே நாளில் நிரவி விடுகிறேன் என்று தன் சுண்டு விரல் நகத்தைப் பிய்த்து எடுத்தான். அந்த நகம் பெரிய மண்வெட்டி போலக் காட்சி தந்தது. நகத்தால் மண் மலையை வெட்டி, நாலா பக்கமும் வீசி எறிந்தான்.”

என்ன வியப்பு! மறுநாள் காலையில் அங்கே மண் மலை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். எங்கும் நிற்காமல் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். ஏழு நாட்களுக்குப் பின், மந்திர மலை அவன் கண்களுக்குத் தெரிந்தது.

அந்த மலையை அடைந்த அவன் அதை சுற்றி வந்தான். உள்ளே செல்ல வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

மலையைப் பிளந்தால்தான் உள்ளே செல்ல முடியும் என்பது அவனுக்குப் புரிந்தது.
“இவ்வளவு பெரிய மலையை எப்படி பிளக்க முடியும்? வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே’ என்று குழம்பினான்.

அங்கிருந்த அரச மரத்தின் அடியில் முதியவர் ஒருவர் இருந்தார். வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த அவர் அவனைப் பார்த்தார்.

“”தம்பி! ஏன் கவலையாக இருக்கிறாய்? என்ன நடந்தது என்று சொல். என்னாலான உதவி செய்கிறேன்,” என்று அன்புடன் சொன்னார். நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னான்.

“”இவ்வளவுதானா? இந்த மலையை நான் ஒரு நொடிக்குள் பிளந்து காட்டுகிறேன்,” என்றார் முதியவர்.

ஆடிக் கொண்டிருந்த தன் முன்பற்களில் ஒன்றைப் பிடுங்கினார். அதை மந்திர மலையின் மேல் வீசி எறிந்தார்.

அந்தப் பல் மலையின் மேல் மோதியது. நூறு இடிகள் ஒன்றாகச் சேர்ந்ததைப் போலப் பேரோசை எழுந்தது.

அந்த மலை அப்படியே இரண்டாகப் பிளந்து விழுந்தது. உள்ளே இருந்த அரக்கனின் மாளிகை தெரிந்தது.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு, அவன் அரக்கனின் மாளிகையை நோக்கிச் சென்றான்.

அந்த மாளிகைக்குள் நுழைந்தான். பெரிய அரண்மனை போல அந்த மாளிகை காட்சி அளித்தது. ஒவ்வொரு இடமாக இளவரசியைத் தேடிச் சென்றான்.
அங்கே ஓர் அறைக்குள் இருந்து இடி போன்ற ஓசை வந்தது. எங்கிருந்து ஓசை வருகிறது என்று அந்த அறைக்குள் பார்த்தான்.

அரக்கன் ஒருவன் அங்கே தூங்கிக் கொண்டிருந்தான். பெரிய மீசையுடன், நீண்ட பற்களுடன் பயங்கரமாக இருந்தான்.

அந்த அரக்கனின் குறட்டை ஒலிதான் இடியோசை என்பது அவனுக்குப் புரிந்தது.
அடுத்த அறையைப் பார்த்தான். அங்கே இளவரசி அழுது புலம்பியபடி இருந்தாள்.
அவள் அருகே சென்ற அவன், “”இளவரசியாரே!” என்று அன்புடன் அழைத்தான்.
தலை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“”உங்களை மீட்டுச் செல்லவே வந்துள்ளேன். அரக்கன் விழிப்பதற்குள் நாம் புறப்பட வேண்டும். விழித்துக் கொண்டால், நமக்கு ஆபத்து. விரைவாகப் புறப்படுங்கள்,” என்றான்.

கண்களைத் துடைத்துக் கொண்ட அவள் அவனுடன் புறப்பட்டாள்.

இருவரும் அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தனர்.

“முழு நிலவு வர இன்னும் நான்கு மணி நேரமே உள்ளது. பிளந்து கிடக்கும் மலைப் பகுதியை அதற்குள் ஒன்று சேர்க்க வேண்டும். யாராலும் பிரிக்க முடியாதபடி இறுகக் கட்ட வேண்டும். இல்லையேல் அரக்கன் விழித்துக் கொள்வான். அரக்கன் விழித்துக் கொண்டால், இத்தனை முயற்சியும் வீணாகி விடும். என்ன செய்வது? வழி ஏதும் தெரிய வில்லையே’ என்று தவித்தான் அவன்.

அங்கே இருந்த ஆல மரத்தின் அடியில் கிழவி ஒருத்தி சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் தலை நிறைய பூ இருந்தது.

அவளிடம் சென்ற அவன் நடந்ததை எல்லாம் சொல்லி, “”பாட்டி! பிளந்து கிடக்கும் இந்த மலையை ஒன்று சேர்க்க வேண்டும். யாராலும் பிளக்க முடியாதபடி இறுகக் கட்ட வேண்டும். இல்லையேல் அரக்கன் விழித்துக் கொள்வான். வழி தெரியாமல் தவிக்கிறேன்,” என்றான்.

“”இவ்வளவுதானா? கவலையை விடு, என்று தன் தலையில் இருந்து தலைமுடியை இழுத்தாள். அந்த முடியின் நடுவில் பெரிதாகச் சுருக்கு ஒன்று போட்டாள். பிளந்து கிடக்கும் மலைப் பகுதிகள் இரண்டையும் சுற்றுமாறு அந்த முடியை வீசினாள்.
அந்தச் சுருக்கு இரண்டு மலைப் பகுதிகளையும் சுற்றிக் கொண்டு நின்றது. கையில் இருந்த முடியின் இரண்டு முனைகளையும் இழுத்தாள் அவள். என்ன வியப்பு! அந்தச் சுருக்கு இரண்டு மலைகளையும் சிறிது சிறிதாக ஒன்று சேர்த்தது. மேலும் இழுத்தாள் பாட்டி.

மலைப் பகுதிகள் இரண்டும் சேர்ந்தன. முன்பு இருந்தது போல மலை அங்கே இருந்தது.

பிறகு அவள் அந்தச் சுருக்கு அவிழாத வண்ணம் நான்கைந்து முடிச்சுகள் போட்டாள்.

“”தம்பி! வலிமையான இந்தச் சுருக்கை அவிழ்க்கவோ, அறுக்கவோ யாராலும் முடியாது. அரக்கன் வெளியே வருவான் என்று நீ அஞ்ச வேண்டாம். இளவரசியுடன் மகிழ்ச்சியாகப் புறப்படு. நீங்கள் நலமாக இருப்பீர்கள்,” என்று வாழ்த்தினாள்.

அவளுக்கு, நன்றி சொல்லிவிட்டு இளவரசியுடன் புறப்பட்டான்.

இளவரசி உயிருடன் திரும்பியதை அறிந்த அரசனும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடே விழாக்கோலம் பூண்டது. அவனுக்கும், இளவரசிக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.

கோலாகலமாக நடந்த அந்த திருமணத்தில் பல நாட்டு அரசர்களும் கலந்து கொண்டனர்.

குட்டீஸ் இந்தக் கதையில் புதிர் ஒன்று உள்ளது. உங்களில் யார் சரியான விடை சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்.

“”இந்தக் கதையில் வருபவர்களில் யார் ஆற்றலில் பெரியவர்? குலகுருவா? அரக்கனா? உழவனா? கிழவியா? அல்லது மேஷாக்கா?”

பிளந்து கிடக்கும் பெரிய மலையை முடி ஒன்றினால், இறுகக் கட்டினாள் கிழவி. அப்படிப்பட்டவள் எவ்வளவு பெரியவளாக இருக்கவேண்டும். அவளோடு குடும்பம் நடத்தும் அவளுடைய கணவர் தான் உண்மையிலேயே பெரியவர்.

Print Friendly, PDF & Email

1 thought on “நான்தான் பெரிசு!

  1. அந்த அரக்கன்தான் பெரியவன். மணலை தாண்டி மலையை பிளந்து உள்ளே சென்ற அவன்தான் பெரியவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *