குப்பை அல்லது ஊர் கூடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,199 
 

குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. குப்பைகளை நடுத்– தெருவிலா கொண்டு வந்துக் கொட்டுவார்கள்?கெட்டுப் போன உணவுகள்,அழுகிப்போன காய்கறிகளும், ,பழ்ங்களும், ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்கள்,, எலும்புத்துண்டுகள்,செத்த எலி,பிளாஸ்டிக் குப்பைகள்,பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட குழந்தைகளின் மலங்கள்,இன்னும் சொல்லக் கூசும் எல்லாக் கழிவுகளும் வீதியோரங்களில். கொட்டப்படுகின்றன. தெருவே நாறுகிறது. நாலு தூறல் போட்டுவிட்டதோ குப்பென்று கிளம்பும் கவிச்சை வாடையில் உவ்வே ! குடலைப் புரட்டும். இதுதான் எட்டாம் வார்டில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் பிரச்சினை.

நகராட்சி எல்லைக்குள் எட்டாம் வார்டுதான் பெரியது. நீள நீளமாய்,ஆனால் குறுகலான நாலு தெருக்களை உள்ளடக்கியது. இது நகராட்சியின் எக்ஸ்டென்ஷன் ஏரியா என்பதால் இதைக் கேட்பாரும் இல்லை மேய்ப்பாரும் இல்லை.. வாரத்திற்கொரு நாள் இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் வருவார்கள் வந்து குப்பைகளைக் கூட்டி காலியிடங்களில் அல்லது முச்சந்திகளில் குவித்து வைத்து நெருப்பு வைத்து விட்டுப்போய்விடுவார்கள்

.இது இன்னும் கொடுமையிலும் கொடுமை.இன்றைக்கு பிரதானமாய் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதால் எரியும் புகையில் தொண்டை கமறலெடுக்க, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இருமல் கொல்லுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும்போது வரும் நச்சுப்புகையானது (கார்ஸினோஜெனிக்). புற்று நோயை உண்டாக்கக் கூடியது. என்று மருத்துவம் சொல்லுகிறது.கழிவுகளை அதிலும் பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் எரிப்பது சட்டப்படி குற்றம் அதைப் பற்றியெல்லாம் யார் கவலைப் படுகிறர்கள் ?. நம் தேசத்தில் இலவசங்களிலேயே பரஸ்பரம் ,மக்களும், ஆள்பவர்களும் திருப்தி அடைந்துவிடுகின்றனர்.

ராமதுரை சார் கமிஷனருக்கும் ,கலெக்டருக்கும் பெட்டிஷன் எழுதிப் போட்டார்..அரசு எந்திரத்தில் ஒரு சின்ன சலனம் கூட ஏற்படவில்லை.. நகராட்சி தலைவரைப் பொறுத்தவரை அவர் ஆளுங்கட்சியில் செல்வாக்குள்ள மனிதர் அத்துடன் அடிதடி, கட்டைப் பஞ்சாயத்து என்று சுத்துகிற ஆள்..வருகிற சட்டமன்றத் தேர்தலில் சாதி அடிப்படையில் இவருக்குத்தான் எம்.எல்.ஏ.சீட்டு என்று வேறு பேச்சு அடிப்படுகிறது. இந்த ஊருக்கு எந்த மந்திரி வந்தாலும் இவர் வீட்டிலதான் சாப்பாடு, தங்குதல் எல்லாம். அப்புறம் அவரை யார் கேள்வி கேட்கமுடியும்?. ஆனாலும் ராமதுரைசார் இதை விடுவதாக இல்லை.. ஒரு ஏழெட்டுப் பேர்களைத் திரட்டிக் கொண்டுப் போய் நகராட்சி தலைவரை நேரிடையாகப் பார்த்தார்

“இதென்னய்யா இருக்கிற ரோதனை போறாதுன்னு உங்க ரோதனை வேற. ஏய்யா! இங்க தோட்டிங்க ஆளு பத்தாக்குறைன்னு சொல்றேன். திரும்பத்திரும்ப சொன்னதையே சொல்றியே இன்னா? டவுன்ல இருக்கிறவன் கதையே காத்துல பறக்குது, டவுன் விரிவுப் பகுதிக்கு எங்க வர்றதாம்?ஆங்!. வாரத்துக்கு ஒரு நாள் அள்றதே பெரிய விசயம். எக்ஸ்ட்ரா போஸ்ட்டு கேட்டிருக்கோம் கவர்மெண்ட்டு சேங்ஷன் பண்ணட்டும், அப்ப குப்பை வண்டிய டெய்லி அனுப்பறேன்.”.

”அதுவரைக்கும் ?”

” நான் வந்து வாரிக் கொட்டட்டுமா ?”

“ஏன்சார்?தினக்கூலியில ஆட்களைப் போட்டு அள்ளச்சொல்லுங்க.அதுக்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கு இல்லே?

“எனுக்கு வெலை கத்துத் தர்றியா?. டாய்! யார்றா நீ? எதிர் கட்சி ஆளா?,பிரச்சினை பண்ண வந்திருக்கியா? சொல்றா!.”

2

அவருடைய அடியாட்கள் ஓடி வந்தனர்.

“ இ..இ…இ.ல்லீங்க தெருவே நாறிக்கிடக்கு. உங்களைத்தானே நாங்க கேக்க முடியும். நீங்க தானே எங்க நகராட்சி தலைவர்?”

”சரி..சரி.. செய்றேன். இப்ப எடத்த காலி பண்ணு.”

இது போன்ற முரட்டு ஆளு கிட்டே வேற என்ன பேசமுடியும்?. அவர் சொன்னதை ஏற்றுத் திரும்பினார்கள். ஆனால் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. இதுபோல் பலமுறை போய்ப் பார்த்தாயிற்று.. பார்த்த அன்றைக்கு ஒரு நாள் மட்டும் குப்பை வண்டி வந்துப் போகும், அத்துடன் சரி. வழக்கம் போல் வாராவாரம் பிளஸ்டிக் குப்பைகள் எரிந்து புகையைக் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன,அப்பிராணி மக்களும் தொண்டைக் கிழிய இருமிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

புகைந்துக் கொண்டிருந்த இந்த விவகாரம் கொஞ்ச நாளில் வலுப் பெற்றது. இளைஞர்கள் வட்டம் ராமதுரைக்கு ஆதரவு கரம் நீட்டியது. பத்திரிகை நிரூபர்களை வரவழைத்துக் காட்டி, போட்டோ எடுத்து, பேட்டி கொடுத்தார்கள். தினசரியில் அரைப் பக்கத்துக்கு பிரசுரமானது. .உபரியாக வார்டு கவுன்சிலரும்,நகராட்சி தலைவரும் சேர்ந்துக்கொண்டு பண்ணிய ஊழல்கள்,கட்டட காண்ட்ராக்ட்டில் அடித்த கொள்ளைகள் பற்றியெல்லாம் கூட பத்திரிகை ஆட்கள் விலாவாரியாக விசாரித்துஆதாரத்தோடு பத்திபத்தியாக வெளியிட்டிருந்தார்கள

அவ்வளவுதான் தலைவர் கொதித்துப்போனார்அடுத்தநாள்.ராமதுரையையும்,,இளைஞ்ர்களையும், ஒரு ரவுடி கும்பல் வந்து செமத்தியாக அடித்து, மிரட்டிவிட்டுச் சென்றது. .போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் எஃப்.ஐ.ஆர்.. போட மறுத்து விட்டார்கள். மறுத்ததோடு இல்லாமல் ஒவ்வொரு பையனையும் தனித்தனியே கூப்பிட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டினார்கள். மக்களின் கோரிக்கை அமுக்கப் பட்டு, நகராட்சி தலைவரைப் பத்தி அவதூராய் பேட்டி கொடுத்தார்கள் என்று செய்திகள் முன்னிலைப் படுத்தப்பட்டன இப்படித்தான் அந்த பிரச்சினையின் முடிச்சு மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்தது.

அதற்கப்புறம் மக்கள் வாய் மூடிக்கொண்டார்கள்.. பிளாஸ்டிக் புகையைச்- சுவாசிக்கவும், அடக்கி இருமிக்கொள்ளவும் கற்றுக் கொண்டார்கள்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நம் மக்களுக்குப் போராட்டக் குணங்கள் இல்லை என்பது,.. இருக்காது சார்! தெரியும். .வரலாறு பாருங்க.வட இந்திய மக்கள் மாதிரி நாம அதிகம் அந்நிய படையெடுப்புகளையோ, போர்களையோ, சந்திச்சதில்லை சார்.! கைபர் கணவாய் வழியாக எத்தனைஎத்தனை படையெடுப்புகள்?. அதில எவன் சார் விந்திய மலையைத் தாண்டி தெற்கே வந்தான்?. ஸோ வீரம் நம்மிடம் குறைவு.. சமயமும், சாத்வீகமும் தான் நம்ம குணம்… இருந்த கொஞ்சநஞ்ச வீரியத்தையும் நாயன்மார்களும், ஆழ்வார்களும்.மழுங்க அடித்து விட்டு, அன்பையும், ஜீவகாருண்யத்தையும் விதைத்து வைத்தார்கள்.. ”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண.”.—.இதுதான் நாம். .

அப்போதுதான் எட்டாம் வார்டில் இருக்கும் காமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவும் வந்தது..பிரசித்திப் பெற்றக் கோயில். பத்து நாள் திருவிழா. விழா ஏற்பாடுகள் சம்பந்தமாய்ப் பேச எட்டாம் வார்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்

நகராட்சித் தலைவர் என்ற முறையில் தலைவரும்,கவுன்சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தம் கைத்தடிகளுடன் ஆஜராகியிருந்தனர். கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் எப்ப எப்ப என்று காத்திருந்த ஒரு இளைஞன் எழுந்தான்.

“ஊர் குப்பையை வார்றதை விட்டுட்டு, புகார் சொன்ன எங்களை அடிச்ச தலைவரை இன்னிக்கு ஊர் விசாரிக்கணும். ஆமாம்.கேளுங்க.”.

தலைவர் அந்த இளைஞனை முறைத்தார் .

”தம்பீ !உட்காருப்பா !.இது திருவிழாவுக்காக கூட்டியக் கூட்டம். அது தனி வெவகாரம்..” –என்றார்..கோயில் நிர்வாகஸ்தர் பெரியவர் மாசிலாமணி. அவர் ரிடையர்டு காலேஜ் -புரபசர். தலைவர் அந்த இளைஞனைப் பார்த்து

3

“டேய் தம்பீ! நீ நம்ம வேணு அண்ணன் பையனில்லே?

“ ஆமாம்!.”

“ஹும்! சொந்த சாதிக்காரப் பசங்கதான்டா மொதல்ல பதம் பார்த்து வெட்றீங்க.”-என்றார் கடுப்புடன்.

“ இரு எல்லாத்துக்கும் சாதி வந்து பல்லக்கு தூக்கும் உனக்கு.”

“சரி தம்பிங்களா! வுடுங்க. மொதல்ல கோவில் வெவகாரத்தப் பேசலாம்.”—என்றார் மாசிலாமணி அய்யா.கூட்டத்திலிருந்து நாலைந்து இளைஞ்ர்கள் எழுந்தார்கள்.

“ஏன் ? எட்டாம் வார்டுவாசிகள் கூட்டம்தானே இது ?.இதுவும் எட்டாம் வார்டின் பொதுப் பிரச்சினைதான்..நாத்தம் புடுங்குது மொதல்ல இதப் பேசுங்க. எங்கப் பிரச்சினையைச் சொன்னதுக்கு ஆளை வெச்சி அடிக்கிறீயே சரியா அது?”.—தலைவரைப் பார்த்து இளைஞர்கள் கோபப் பட்டார்கள்.. அவர் கையை உயர்த்தி அவர்களை அடக்கிவிட்டு எழுந்துவிட்டார்.. காலேஜ் படிக்கிற பசங்க. இள ரத்தம். இவங்க கிட்ட வெச்சிக்கக்கூடாது, இங்கேயிருப்பது தப்பு. என்று தலைவர் தன் சகாக்களுடன் கிளம்பிவிட்டார்.. உடனே பெரியவர் மாசிலாமணி அய்யா

“ஐயா !இந்தத் தம்பிங்க சொல்றது வாஸ்தவம்தான்யா..உங்களுக்குப் புண்ணியமாப் போகும் குப்பைய அள்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.”

சேர்மேன் கடுகடு வென்று பார்த்துவிட்டுச் சீறினார்.

“யோவ்! வாயை மூடுய்யா தெரியும். எனக்கெதிரா பேப்பர்ல பேட்டியெல்லாம் குடுத்து எங்க பேர்ல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கட்சி மேலிடம் வரைக்கும் என் பேர நாற அடிச்சீட்டீங்களேஅது ஞாயமா?. நாளைக்கு எம்.எல்.ஏ. சீட்டு கேக்கலாம்னு இருந்தேன்,அதில மண்ணை போட்டுட்டீங்களேடா பாவிங்களா.. அவன் தீர்த்துடுவான்னுதானே பேப்பர்காரன்கிட்ட போனீங்க? போ! அங்கியே போ! வந்து வாரிக் கொட்டுவான். தோ பாரு! நீங்கள்லாம் எங்க சுத்தினாலும் சரி கடைசியில இங்கதான்டீ வரணும்.”

“வாணாம். அப்படிப் பேசாதீங்க.ஊருக்கு நல்லது நடக்கும்னுதானே உங்களுக்கு ஓட்டுப் போட்டோம்?.

”ஆமாமா! போட்டீங்களே, சும்மாதான போட்டீங்க. இல்ல?. த்தூ ! பெரிய .நாயஸ்தன் மாதிரி பேச வந்துட்டான். . உங்களுக்கெல்லாம் எத்தினி தடவைதான்யா சொல்றது? துப்புரவாளர் போஸ்டிங் போட்டுநாலு வருஷம் ஆவுது.. இங்க ’சிப்காட் ’ வந்ததையொட்டி இந்த ஏழெட்டு வருஷத்தில ஜன நெருக்கடி ஏகத்துக்கு எகிறிப்போயி, கண்டமேனிக்கு ஊரின் நாலாப் பக்கங்களிலும் புதுசுபுதுசா நகர்ங்க வந்துட்டுது. என்னய்யா பண்றது? குப்பையை அள்றதுன்னா எல்லா விரிவுப் பகுதிகளுக்குந்தான் போவணும். உங்க ஏரியாவில மட்டும் ஸ்பெஷலா அள்ள முடியாது.மத்தவன் சும்மா இருப்பானா?. அதுக்கு முப்பது தோட்டிங்க தேவை. ஆனால் .இருக்கிறது பதிமூணு பேர்தான்..இது நடைமுறை சிக்கல்.பொறுங்க இன்னும் பதினேழு போஸ்ட்டு கேட்டு கவர்மெண்ட்டுக்கு பிரஷர் கொடுத்திருக்கோம்.போட்டவுடன் எல்லாம் சரியாய் போயிடும்”

“அதுவரைக்கும் ?”.

“எல்லாத்தையும் நமக்கு அரசாங்கம்தான் செய்யணும், நாம ஒரு துரும்பையும் எடுத்துப் போடமாட்டோம்னா இந்த நாடு எப்படிய்யா உருப்படும் ? நம்ம வீட்டையும், நம்ம தெருவையும் நாமதான் சுத்தமாக வெச்சிக்கணும்.. “

பெரியவருக்கு ஆத்திரத்தில் மூச்சிரைத்தது.

“அப்புறம் இந்த நகராட்சி ஆஃபீஸ் எதுக்கு? இல்லே நீங்கதான் எதுக்கு?.வாணாம். சால்ஜாப்பு சொல்லாதீங்கய்யா. .செய்யுங்க.”

தலைவரின் அடியாட்கள் டாய்!…டாய்!..என்று குரலெழுப்பிக்கொண்டே வேகமாய் எழுந்தார்கள்.. தலைவர் அவர்களை அடக்கி விட்டு

4

“ ஒரு நகராட்சி நிர்வாகம்னா அது குப்பைய அள்றது மட்டுமில்லய்யா. ஆயிரத்தெட்டு பிரச்சினைகளைப் பார்க்க வேண்டியிருக்கு. அதான் வாரத்துக்கு ஒருக்கா அள்றாங்க இல்லே?எக்ஸ்டென்ஷன் ஏரியாவுல இப்பத்திக்கு இவ்வளவுதான்யா முடியும். சும்மா சும்மா பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க . இல்லன்னா ஒண்ணு செய்யுங்க மறுபடியும் போய் வேற ஒரு பேப்பர்காரனைப் புடிச்சி சொல்லிப் பாரு வந்து கிழிப்பான்.” அவர் நக்கலாய் சொல்லிவிட்டு எழுந்தார். ஒரு இளைஞன் எழுந்து

“ இது எக்ஸ்டென்ஷன் ஏரியான்னாலும் முழு வளர்ச்சியடைந்த பகுதிங்க.. இங்க குப்பைய அள்ளாம இங்கியே போட்டுக் கொளுத்தறாங்களே, அதுதாங்க எங்க பிரச்சினையே. “

“ தோ பாரு! பிரச்சினையைச் சொல்லிட்டேன் நீங்கள்ளாம் இம்மாந்தூரம் கேட்டும் என்னால செய்யமுடியலப்பா.. கொஞ்ச நாளைக்கு எல்லாரும் ஒத்துழைப்புக் கொடுங்க..புகை வரக்கூடாதுன்னா நீங்களே குப்பையை ஊருக்கு ஒதுக்குப் புரமாய்க் கொண்டுப் போய் கொட்டுங்க.. எங்காளுங்களை அங்க போய் கொளுத்தச் சொல்றேன் ..என்ன சரிதானே?.”

ஒரு இளைஞன் கோபமாய் எழுந்தான்.

“எல்லாரும் நல்லா கேளுங்கய்யா!.நாம எல்லொரும் நகராட்சிக்கு ஒழுங்காத்தான் வரி கட்றோம். நம்ம சுகாதாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நகராட்சி தலைவர்அய்யாவும், கவுன்சிலரும் குப்பையை வாரமுடியாதுன்னு தீர்த்துச் சொல்லிட்டாங்க.. அதனால தலைவர் அய்யா சொன்ன மாதிரி கொஞ்ச நாளைக்கு, நம்ம ஏரியாவில நகராட்சி வண்டி வந்து குப்பைய அள்ற வரைக்கும், நம்ம குப்பைகளை நாமளே வாருவோம். வாரி அதை எங்கக் கொட்டணுமோ அங்க கொண்டுப் போய் கொட்டுவோம்.. “

“உங்க ஒத்துழைப்புக்கு நன்றி தம்பிங்களா! நீங்கள்லாம் படிச்சவங்களா இருக்கவும் விஷயத்தை சொன்ன உடனே புரிஞ்சிக்கிட்டீங்க.”—தலைவர் அரசியல் கும்பிடு போட்டு விட்டு நகர்ந்தார்.

“நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை. நாளைக்கே ஆரம்பிப்போம்.மதியம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கொருத்தர் வந்துடுங்க. .இனிமே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அள்ளூவோம்..”— என்றார் மசிலாமணி அய்யா, திருவிழா நடத்துவதைப்பற்றிஎதுவுமேபேசாமல்..தலைவர்கிளம்பிச்சென்றுவிட்டார். ஒருகல்லூரிமாணவன் பொறுக்கமாட்டாமல்

“ஆள் பற்றாக்குறைக்குத் தினக்கூலி அடிப்படையில ஆள் போட்டு வேலை செய்ய நகராட்சி தலைவருக்கு அதிகாரம் இருக்குதுங்க.. இருந்தும் அதைச் செய்யாம, தொழிற்பேட்டை, ஜனப்பெருக்கம், நகர் விரிவுன்னு சொல்லி நம்மளை திசைத் திருப்புறான். எவ்வளவு அசட்டைத்தனம்? ஒரேயொரு வார்டுஜனங்கதானே, இவன்களால நம்மளை இன்னா பண்ண முடியும்ன்ற எண்ணம்,.,கட்சி செல்வாக்கு,. சே! நகரத்தின் சுத்தம்ன்றது அடிப்படைத் தேவை.ங்க இந்த ஜனநாயக நாட்ல அதுக்கே இவ்வளவு போராடியும் நடக்கல. உதை வாங்கனதுதான் மிச்சம். ”—அந்த மாணவனிடம் இயலாமையின் நிஜமான ஆத்திரமும், வருத்தமும் வெளிப்பட்டன.

பெரியவர் ஆழ்ந்து பார்த்தார்

”தம்பீ! அவன் மந்திரியாகக்கூட இருக்கட்டுமே, ஊர் ஒண்ணுகூடிட்டா என்ன பண்ணமுடியும்? ஆனால்

அதுக்கு நமக்குள்ள ஒத்துமை இருக்கணுமில்லே?. நல்லது கெட்டதை யோசிக்காம நகராட்சி தலைவர்

என்னசெஞ்சாலும் சரி அதை,இங்கபாதிபேருக்குமேலகண்ணைமூடிக்கிட்டு சப்போர்ட் பண்றானுங்கப்பா…ஏன்? .சாதி..

.இப்பல்லாமசாதிஅடிப்படையில தானே நியாய அநியாயங்களை தீர்மானிக்கிறோம்?.சாதி, மத

பிரிவினைகள் நம்மளைவிட அரசாள்பவனுக்குத் தான் அவசியம் தேவைன்னு சொல்வாங்க அது.

உண்மைதான். பாரேன் இந்த பொதுப் பிரச்சினைக்குக் கூடசேர்ந்து போராடாம சாதிதானே நம்மளை

பிரிச்சி வெச்சி பலவீனப் படுத்துது

“அய்யா! .இன்றைக்குப் .படித்த எங்கள மாதிரி பசங்களோட எண்ணம் என்ன தெரியுங்களா? சாதிய கல்யாணத்தோடவும், மதத்தை கோவிலோடவும் நிறுத்திக்கணும் பொதுப் பிரச்சினை என்று வந்துவிட்டால்,

ஒருத்தன் போய் கேட்டால் நியாயம் கிடைக்காது, எல்லோரும் திரண்டு நின்று போராடணும். ”

5

”ஆரோக்கியமான சிந்தனைதான், சந்தோஷம். என்ன கடைசி வரை இந்த எண்ணம் நீடிக்கணும்..’

மறுநாள் மதியம் வீட்டுக்கு ஒருத்தர் என்று சுமார் ஒரு நூறு பேருக்கு மேல் திரண்டுவிட்டார்கள். உற்சாகத்துடன் .நிறைய இளைஞர்கள், விஷயம் இப்போது இளைஞர்களின் கைகளுக்குப் போய்விட்டதை உணர முடிந்தது.அந்தந்தவீட்டுப்பெரியவர்களும்,நடுத்தரவயதுஆட்களும்,கூடபெருமளவில்உற்சாகமாய்கலந்துக்கொண்டிருந்தார்கள்..வேலைஆரம்பித்தது..வயது,,படிப்பு,,செல்வம், என்ற எந்தவித சலுகைகளையும் யாரும்எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சமமாய் குப்பையை அள்ளினார்கள், சாக்கடையை தூர் வாரினார்கள்.

ஆயிற்று மக்கள் எல்லாவற்றையும் வாரி ஒரு இடத்தில் மலையாய் சேர்த்து முடிக்கும்போது

இருட்டிவிட்டது.. மாசிலாமணி பெரியவர் உரத்த குரலில்

“தம்பிகளா! இந்த வாரம் இது போதும். நாளைக்கு காலையில ஒரு வண்டியப் பேசி இதை வாரிக் கொண்டுபோய் நகராட்சி குப்பை கொட்ற இடத்தில கொட்ட ஏற்பாடு செஞ்சிட்றேன் .”

“அய்யா! அதை நாங்க பார்த்துக்கறோம் விட்ருங்க அப்படிக் கொண்டுப் போய் கொட்றதுக்காக சாதி மத வித்தியாசம் இல்லாம, நாங்க எல்லாரும் ஒண்ணு கூடி இந்த வேலையைச் செய்யல.”.

“பின்னே? பத்திரிகைக்காரனை கூட்டிவந்து காட்டணுமா?..”

“கேளுங்க அந்த தலைவர் இன்னிக்கு நகராட்சி ஆபீஸ்ல போயி. எட்டாம் வார்டு ஆளுங்க நம்மளப் பத்தி பேப்பர்ல கன்னா பின்னான்னு எழுதினான்களே, இப்பப் போய்ப் பாரு, அவன்களையே குப்பைய வார வெச்சிட்டேன். வாரட்டும் ,அப்பத்தான் புத்தி வரும்..”- அப்படீன்னு சொல்லி சிரிக்கிறாராம்.

”அடப்பாவி!”.

இதில்உங்களுக்குத் தெரியாத இன்னொரு விஷயம் இருக்கு. தினசரி எல்லா விரிவுப் பகுதிகளிலிருந்தும் தினக் கூலிக்கு முப்பது ஆட்களை அமர்த்தி குப்பைய அள்ற மாதிரி ரெண்டு வருஷமா பில் போட்டு சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்காங்கய்யா…கண்டுபிடிச்சிட்டோம்.(மஸ்டர் ரோல் ஊழல்}. இவ்வளவு கேட்டும் தலைவர் ஏன் செய்யலேன்னு இப்ப தெரியுதா? .தின்ற ருசி. நம்ம வேலைய நாமதான் செய்யணும்னு நமக்கு புத்தி சொன்னாரே, அவர் வேலையை யார் செய்யறதாம்? அந்தாளை செய்ய வெப்போம். பார்த்துக்கிட்டேயிருங்க..”

இளைஞர்கள் ஆத்திரத்துடன் இருந்தார்கள்

” அய்யா! நாளைக்கு நடக்கப் போற விஷயம் எல்லாருக்கும் ஒரு முன் மாதிரி பாடமா இருக்கணும்..அதனால என்ன வந்தாலும் சரி. இந்த ஏரியா முழுக்க இருக்கும் எங்க ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் இந்த விஷயத்தில ஒண்ணா கூடியிருக்கோம்.பார்த்துடலாம். பெரியவங்க எல்லாம் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க போதும்.

“நாங்க கூடயிருக்கோம்பா…என்னென்னமோ சொல்றீங்களேப்பா!. பயமாயிருக்கே எட்டாம் வார்ட்டுல இருக்கிற நாம மட்டுந்தான் போராடிக்கிட்டு இருக்கோம். பெருசா கும்பல் கிடையாது.எதுவும் அடாதுடியாச் செஞ்சிடாதீங்கப்பா. பார்த்து நடந்துக்கோங்க.சரி அப்படி என்னதான் பண்ணப்போறீங்க ? “

“..அய்யா! பயப்படாதீங்க. நாமமட்டும் தனியா நிக்கல நம்ம பின்னால எங்களுடைய நண்பர்கள் படையே நிக்கிது.. சில சமயங்கள்ல தற்காப்பை விட வெச்சித் தாக்கிப்புடணும். அது நல்ல பலன் தரும்..”

“சரி! அதுக்கு/?.

“குப்பைய வார ஏற்பாடு பண்ண வேண்டியது அவங்க கடமைதானே?.”

“ஆமாம்.”

..

” ஸோ இந்த குப்பைகள் முழுசையும் தன் கடமையைச் செய்யாத தலைவர் வீட்டு வாசல்ல கொண்டு போய் கொட்டப்போறோம்.,அதுவும் விடியறதுக்குள்ள ..—இதுதான் எங்க முடிவு…

6

.அது மட்டுமில்ல குப்பை வண்டி நம்ம ஏரியாவுக்கு ஒழுங்கா வர்ற வரைக்கும் வாராவாரம் குப்பைகளை அந்தாளு வீட்டுக்கு எதிர்லதான் கொட்டப் போறோம். அதுக்கு வீட்டுக்கொரு பெண்கள் இப்பவே ரெடி. பார்த்திடலாம் அந்தாளு எவ்வளவு பேரைதான் ஆளைவெச்சி அடிப்பாருன்னு?.”

“ஐயய்யோ! பயமாயிருக்கே. போலீஸ் கேஸாயிடப்போதுப்பா.! வம்பு எதுக்கு?..”

“அய்யா! பயப்படாதீங்க. ஒத்தையா செஞ்சா குத்தம், கும்பலா செஞ்சா போராட்டம். சட்டப்படி கிடைக்க வேண்டியவைகளுக்காகத்தான் நாம போராட்றோம்.”.

அன்றைக்கு நடுஇரவுக்கு மேலே இளைஞர்கள் கூட்டம் திரண்டது, சேர்த்து வெச்சிருக்கிற குப்பையை வாருவதற்குப் போனபோது பெரிய அதிர்ச்சி., திகைத்து நின்றுவிட்டார்கள். அங்கே ஏற்கனவே இரண்டு மூன்று துப்புரவு தொழிலாளிகள் அந்த நடுராத்திரியில் குப்பைகளை, வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பாதிக்குமேல் குப்பைகள் காலியாகியிருந்தன.

“ தினக்கூலியா எங்களை போட்டு கீறாங்கபா. .இனிமேஇந்தப் பக்கம் ஏழு,, எட்டாம் வார்டுகளுக்கு. டெய்லி குப்பை வண்டி வரும்பா. அதுக்கு. நாங்கதான் பொறுப்பு.. இத்த தலைவரு உங்க எல்லார்கிட்டயும் சொல்லச் சொன்னார்பா.” –என்றான் துப்புரவு தொழிலாளி.

ஓ! இந்த ஏரியாவில் காற்றுக்குக் கூட காது உண்டுபோல, அல்லது இங்கியே யாரோஒரு எட்டப்பன் இருக்கான். ஹும்! இனிமேல் மக்கள்சக்தி வெகுண்டெழும்பொழுதெல்லாந்தான் அரசியல்வாதிகள் சரியாய் தங்கள் கடமையைச் செய்வார்கள் என்பது தவறான முன் உதாரணம்தான் என்னசெய்ய?.நாடு இப்போது அதை நோக்கித்தானே போய்க்கிட்டு இருக்கு?. முதல் கட்டமாய் இப்ப அங்கங்கே சாலை மறியல்கள்.

“எங்களின் அடுத்த இலக்கு மஸ்டர் ரோல் ஊழல்.”—-என்று தொடை தட்டுகிறது இளைஞர் படை..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *