தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 18,137 
 

கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது, அரட்டை அடிப்பது, பணத்தை வைத்துக்கொண்டு கண்டபடி செலவு செய்வது எனத் திரிந்து கொண்டிருந்தான்.

அதே வகுப்பில்தான் நரேன் என்ற ஏழை மாணவனும் இருந்தான். எல்லோரிடமும் இனிமையாகப் பழகினாலும் மற்ற எந்த விஷயங்களிலும் அவர்களுடன் இணையாமல் பிரிந்து சென்றுவிடுவான். தான் உண்டு தன் கடமை உண்டு என்று இருப்பான். எல்லோரும் அவனை தனிப்பிறவி, புத்தர் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். அதற்கெல்லாம் அவன் கவலைப்படுவது இல்லை.

நல்ல குணம்கணேஷும் அவனை அடிக்கடி கிண்டல் செய்வான். “பெரிய புத்தர் மாதிரி வந்து நிப்பான் பாருடா… அவங்க வீட்ல சாப்பாட்டுக்கே வழியில்லை… பணம் வேணும்னா என்ன செய்வான்? நம்மள மாதிரி நாலு பணக்காரப் பசங்க தயவு வேணும்ல… ஒரு நாள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுங்கடா, காலேஜுக்கு பீஸ் கட்டணும்னு வந்து கெஞ்சுவான் பாருடா’ என்றெல்லாம் கிண்டல் செய்து தன் நண்பர்களுடன் சிரித்து மகிழ்வான்.

கணேஷ் மற்றும் அவன் நண்பர்கள், அடிக்கடி வீட்டில் பணம் வாங்கி கண்டபடி செலவு செய்வதை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்கள். எனவே அவர்கள் பணம் கொடுப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார்கள். ஆனால் கணேஷ் மற்றும் நண்பர்கள் அதற்கெல்லாம் அசருவதாக இல்லை. அவர்கள் வழக்கம் போலத் தங்களின் செயல்களைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

இந்நிலையில் ஒருநாள், கணேஷுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய தொகையை பெற்றோர்கள் அவனிடம் கொடுத்தார்கள். வெகு நாட்களாகக் கையில் பணம் இல்லாமல் இருந்த கணேஷுக்கு இந்த பணத்தைக் கண்டதும் செலவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. உடனே நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்தான். தேர்வுக்கட்டணம் செலுத்த ஒரு வாரம் உள்ளது… அதற்குள் பணத்தை எப்படியாவது தயார் செய்துவிடலாம் என நினைத்தான்.

ஆனால் அவன் நினைத்ததுபோல நடக்கவில்லை. “இன்று தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிநாள்’ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. வீட்டிலும் கேட்க முடியாது. கட்டணம் செலுத்தவில்லை என்றால் தேர்வு எழுத முடியாது. அவன் நண்பர்கள் எல்லோரும் கையில் உள்ள பணம் முழுவதையும் போட்டாலும் பணம் பத்தாது என்ற நிலை ஏற்பட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்தப்பக்கம் நரேன் வந்து கொண்டிருந்தான்.

“”டேய், புத்தர் வாரன்டா” என்றான் சூரஜ்.

“”அவனும் தேர்வுக்கட்டணம் செலுத்த பணம் கேட்டுதான் வருவான் போல” என்றான் சிவா.

“”பாவம்டா… அவனுக்கு பிச்சை போடக்கூட முடியாத நிலைல நாம் இருக்கோம்” என்றான் வினோத்.

“”அவன் ஏழைடா… பணம் கட்ட முடியாத நிலை ஏற்படுவது சகஜம். நம்ம கணேஷுக்கு என்ன குறைச்சல்? நாமெல்லாம் சேர்ந்து வீணாகச் செலவு செஞ்சிருக்கக் கூடாதுடா” என்றான் விஜய்.

“”ஆளாளுக்கு கொஞ்சம் பேசாம இருங்கடா… நானே செம டென்ஷன்ல இருக்கேன்” என்றான் கணேஷ்.

அதற்குள் அவர்கள் அருகில் அமைதியாக வந்த நரேன், கணேஷின் கவலையான முகத்தைக் கவனித்தான்.

“”என்ன கணேஷ்… ஏன் கவலையா இருக்கே?” என்றான் நரேன்.

“”இவரு பெரிய பில்கேட்ஸ் தம்பி… எங்க பணப்பிரச்னையத் தீர்த்து வைக்கப்போறாரா என்ன?” என்றான் கேலியாக வினோத்.

அவர்களின் கிண்டல் பேச்சுகளை காதில் வாங்கிக்கொள்ளாத நரேன், கணேஷைப் பார்த்து, தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“”கணேஷ்… இன்றுதான் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள். இப்ப உனக்கு பணப்பிரச்னைனா அது இந்த கட்டணத்துக்குதான்னு நினைக்கிறேன்… சரியா?” என்றான்.

ஆமாம் என்பது போலத் தலையசைத்தான் கணேஷ்.

“”நீ கவலைப்படாதே கணேஷ்… நான் இப்பதான் எனக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தப் போய்கிட்டு இருக்கேன். நீயும் வாடா… இரண்டு பேருக்கும் சேர்த்துக் கட்டிடலாம். என்கிட்ட பணம் இருக்கு” என்றான் நரேன்.

“”உன்கிட்ட ஏதுடா இவ்ளோ பணம்?”

என்று கேட்டான் கணேஷ்.

“”நான் கல்லூரியில் சேர்ந்ததுல இருந்து பகுதி நேர வேலைக்குப் போறேண்டா… நான் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து உள்ள முழுத் தொகையையும் சேர்த்து, நேத்துதான் சம்பளம் வாங்கினேன்” என்றான் நரேன்.

கணேஷ் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

நரேன் மேலும் தொடர்ந்தான், “”கணேஷ் நீ கவலைப்படாதடா. இரண்டு பேருக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்தியும் மீதிப் பணம் என்கிட்ட இருக்கும். அதை அப்படியே வங்கியில போடணும்டா” என்றான்.

“”எப்படிடா நரேன், உன்னால இப்படி எல்லாம் இருக்க முடியுது? நானும் என் நண்பர்களுடன் சேர்ந்துக்கிட்டு உன்னை எப்படியெல்லாம் கேலி கிண்டல்லாம் செஞ்சிருக்கோம்…” என்றான் கண்கலங்க கணேஷ்.

“”அதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன் கணேஷ். என்னப் பொருத்தவரை யார்கிட்ட போயும் யாசகம் கேட்கக்கூடாது… தன்மானத்தோட வாழணும்” என்றான் நரேன்.

“”நானும் இந்த உதவியை மறக்க மாட்டேன் நரேன்… எனக்கும் பகுதிநேர வேலை இருந்தா சொல்லு, உன்கிட்ட வாங்கிய கடனைத் திருப்பித் தரணும்” என்றான் கணேஷ்.

“”சரி” எனத் தலையசைத்தான் நரேன்.

இருவரும் தேர்வுக்கட்டணம் செலுத்தச் சென்றார்கள்.

– வெற்றிபிரியன் (ஆகஸ்ட் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *