கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 20,576 
 
 

நரியின் ஆசைஒண்டிபுதர் காட்டில் வசித்த நரிகளில் ஒன்று தந்திரம் மிக்கது; அதன் பெயர் நீலன்.

காட்டில், எல்லையை வகுத்து, சிறிய விலங்குகளை வேட்டையாடும் நரிகள். அது போன்று கிடைக்கும் உணவு, நீலனுக்குப் பிடிப்பதில்லை. அது, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் வேட்டையாடும் மான், எருமை இறைச்சியையே சாப்பிட விரும்பியது.

ஆனால் சிங்கம், புலியை நினைத்தாலே பயம்; அதனால், ஒரு தந்திரம் செய்தது.

ஒரு நாள் –

மரத்தின் மறைவில் நின்றுக் கொண்டது நீலன் நரி. மரத்தின் மறுபக்கம், மான் ஒன்றை வேட்டையாடி ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது சிங்கம்.

அந்த சிங்கத்துக்கு கேட்கும்படி, ‘நீங்க சாப்பிடும் உணவில், விஷம் இருக்கிறது. அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர். வேட்டையாடிய மானை விஷம் தடவிய அம்பால் அடித்து விட்டான் வேடன். சாப்பிட்டு உயிர் விட வேண்டாம்…’ என்றது நரி.

சாப்பிடுவதை உடனே நிறுத்தி, ‘யார் இப்படி பேசுவது… என் எதிரில் வா…’ என்று கூறியது சிங்கம்.

‘பயமாக இருக்கிறது; நான் ஒரு சிறிய நரி; உங்கள் முன் வந்தால் அடித்து சாப்பிட்டு விடுவீர்…’

‘பயப்பட வேண்டாம். எனக்கு நன்மை செய்திருக்கிறாய்; அதனால் உன்னைக் கொல்ல மாட்டேன்…’

இதைக் கேட்டு தைரியமாக சிங்கத்தின் முன் வந்தது நீலன் நரி.

‘உயிரை காப்பாற்றி விட்டாய்… இன்று முதல் என் நண்பன் நீ…’

இதைக் கேட்டு தெம்புடன், ‘சிங்கராஜா… ஒரு யோசனை கூறுகிறேன்; சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்க…’ என்றது நரி.

‘என்ன யோசனை…’

‘தினமும் மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுகிறீர்; அவற்றில் விஷம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது. இனிமேல், வேட்டையாடியவற்றை முதலில் நான் ருசித்து பார்க்கிறேன். விஷம் இருந்தால், உடனே தெரிந்து விடும்; விஷம் இல்லை என்றால் நிம்மதியாக சாப்பிடலாம்…’ என்று கூறியது நரி.

‘அது எப்படி… விஷம் கலந்த உணவை சாப்பிட்டால் நீ இறந்து விட மாட்டாயா…’ என்றது சிங்கம்.

‘முகர்ந்து பார்த்தாலே விஷம் இருப்பது தெரிந்து விடும். நான் சிறிதளவு உண்டு, விஷம் இல்லை என்று தெரிந்த பின், நீங்கள் உண்ணலாமே…’

நரியின் யோசனை சிங்கத்துக்கு பிடித்து விட்டது; தன்னுடன் இருக்கும்படி கூறியது.

மகிழ்ச்சியடைந்தது நரி. அன்று முதல் சரியான வேட்டை தான்.

சிங்கம், வேட்டையாடிய உணவுகளை உண்டு ஆசையை நிறைவேற்றியது.

எல்லா வித உணவுகளும் கிடைத்து வந்தது.

நரிக்கு விபரீதமான ஆசை ஏற்பட்டது.

‘எல்லா மிருகங்களின் மாமிசத்தையும் சாப்பிட்டாயிற்று. சிங்கத்தின் மாமிசம் எப்படி இருக்கும்… அதை கொன்று சாப்பிட்டு பார்த்து விட வேண்டியது தான். அதற்கு என்ன செய்யலாம்’ என யோசிக்க ஆரம்பித்தது.

ஒரு சிந்தனை தோன்றியது.

வெகு துாரத்தில், எலிகளின் காடு இருந்தது; அங்கு பெரிய எலிகள் வசித்து வந்தன. வேறு மிருகங்கள் எதுவும் கிடையாது. எந்த மிருகம் வந்தாலும் கடித்து கொன்று விடும் எலிகள்.

அங்கு, சிங்கத்தை அழைத்துச் செல்ல முடிவு செய்தது. சிங்கத்தை எலிகளால் கடித்து கொல்ல முடியா விட்டாலும், வேறு உணவு கிடைக்காமல் இறந்து போகும் சிங்கம். அதன் இறைச்சியை சாப்பிடலாம் என்று திட்டம் போட்டது நரி.

அதை செயல்படுத்தும் வகையில், ‘சிங்க ராஜா… இந்த காட்டில் இதுவரை உண்ட மிருக உணவுகளை விட, ருசி மிக்க உணவுக் காடு ஒன்று இருக்கிறது; விரும்பினால் அழைத்துப் போகிறேன்…’ என்றது.

ஒப்புக் கொண்டது சிங்கம்.

உடனே எலிக்காட்டுக்கு கூட்டி சென்றது. பின், குகைக்குள் மறைந்து கொண்டது நரி.

சிங்கத்தைப் பார்த்ததும் பயந்து ஓடி, ஒளிந்தன எலிகள்.

ஒன்றை கொன்றது சிங்கம்; ஆனால், துர்நாற்றம் சகிக்க முடியவில்லை.

நரியை அழைத்தது சிங்கம். அதை காணவில்லை. உணவு கிடைக்காததால், பசி, கோபத்துடனும் இருந்தது சிங்கம்.

குகையில் வேவு பார்த்துக் கொண்டிருந்த நரியைக் கண்டது.

‘என்ன நண்பா… இங்கு ஒரு மிருகம் கூட இல்லையே… மிகவும் பசியாக உள்ளது. கோபத்தை கிளறாதே… உடனே உணவு வேண்டும்…’ என்றது.

பயந்து நடுங்கி நின்றது நரி.

‘வேறு வழி இல்லை; பசிக்கு உன்னையே உணவாக சாப்பிடப் போகிறேன்…’ என்று கூறி, கொன்று சாப்பிட்டது சிங்கம்.

குழந்தைகளே… பேராசை, அழிவைத் தரும் என்பதை அறிந்து கொண்டீர்களா… கூடா நட்பு கேடாய் முடியும்.

– இந்தக் கதை தினமலர் சிறுவர் மலரில் 14.11.2020 அன்று வெளியாகி இருந்தது

Print Friendly, PDF & Email

2 thoughts on “நரியின் ஆசை!

  1. How to submit my small stories in Dinamalar magazine. kindly share the email id and rules for submission of small stories.
    S Santhanam
    9422524254
    C 1101 Springfield’s Apartments
    Sarjapur Road
    Bengaluru 560102

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *