உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டார்.
அப்போது போரிட வேண்டிய எதிரி நாடான பாரசீகத்தின் அரண்மனை வைத்தியரை அழைத்து வந்தனர்.
அலெக்ஸôண்டரைப் பரிசோதித்த வைத்தியர், “”நான் அரண்மனைக்குச் சென்று மூலிகை ரசம் செய்து எடுத்து வருகிறேன்…” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அலெக்ஸôண்டரின் படைத் தளபதிகள் எவ்வளவோ சொல்லி இந்த முயற்சியைத் தடுக்கப் பார்த்தனர்.
ஒற்றர்கள், “”எதிரி நாட்டு வைத்தியர் தரும் மூலிகை ரசத்தில் விஷம் கலந்திருக்க வாய்ப்புள்ளது!” என்று எச்சரித்தனர். ஆனால் அலெக்ஸôண்டர் இதைப் பொருட்படுத்தவில்லை.
அந்த வைத்தியர் மூலிகை ரசம் கொண்டு வந்தார். அலெக்ஸôண்டர் அதைப் பருகினார்.
பின்னர், தனது படைத் தளபதியைப் பார்த்து, “”நன்று, படைத் தளபதியே, இவருக்கு சன்மானம் கொடுத்து அனுப்பு!” என்றார்.
படைத் தளபதியோ, “”மன்னா, ஏன் அந்த மூலிகை ரசத்தைக் குடித்தீர்கள்? விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது? நான் வேறொரு வைத்தியரை அழைத்து வருகிறேன். அவரை வைத்து பரிசோதித்து விடுவோம்” என்றார்.
“”வேண்டாம், வேண்டாம்… பாரசீக மன்னன் சுத்த வீரன்! நம்பிக்கை இல்லாமல் இந்த வைத்தியரைத் தனது அரண்மனையில் வைத்திருக்கவும் மாட்டார். மன்னரையும் நம்புகிறேன்; வைத்தியரையும் நம்புகிறேன்…” என்றார் அலெக்ஸôண்டர்.
அதற்கடுத்த நாளிலேயே அலெக்ஸôண்டரின் காய்ச்சல் நீங்கி, படையெடுப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
இது அலெக்ஸôண்டரின் துணிச்சலை மட்டுமல்ல, சுத்த வீரர்களின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது!
– கலைப்பித்தன், கடலூர். (செப்டம்பர் 2012)