கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,750 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேற்கே போகும் மூன்றாவது பஸ்ஸும் போய்விட்டது.

இப்பொழுதுதான் அச்சம் மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. ஒரு பஸ்ஸிலாவது இடம் கிடைக்க வேண்டுமே! எல்லாம் ஏமாற்றந்தான். மணி நான்குக்கு மேலாகி விட்டது. இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும். அப்புறம் இருட்டு! ஐந்து மணிக்குப் பிறகு அடுத்த பஸ். அந்த வண்டியில் இடம் கிடைத்தால் ஊர் போய்ச் சேர்ந்து விடலாம். இல்லாவிட்டால்…? அதிகப் பழக்கமில்லாத இந்தப் பகுதியில் இந்த மரத்தடியில் இரவைக் கழிக்க வேண்டியதுதான்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை. சோர்ந்துபோய் அந்தச் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது என்றாலும் மனசிலே சாந்தி இல்லை. ஆறு மணிக்குள் ஊர் போய்ச் சேராவிட்டால் அப்பா குதிக்க ஆரம்பித்து விடுவார். அம்மா அழ ஆரம்பித்து விடுவாள். ஏன் இப்படித் தொல்லையில் மாட்டிக் கொண்டேன்?

அரை மைலுக்கு அப்பால்தான் அந்தக் கிராமம். அப்பாவுக்குத் தெரிந்த மனிதரைப் பார்த்து அவரிடமிருந்து வர வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு வந்துதான் இப்படிப் பஸ்ஸுக்குக் காத்திருக்கிறேன். “அப்பனே, வெள்ளி விநாயகா! எனக்கு வழி காட்டு. அடுத்த பஸ்ஸிலாவது எனக்கு இடம் பிடித்துக் கொடு!” என்று முணுமுணுக்கத் தொடங்கியது என் மனம். காரணம் சற்றுத் தள்ளியமைந்திருந்த பிள்ளையார் கோயில் கண்ணில் பட்டுவிட்டதால்! ஆனை முகத்தோன் மேல் பொறுப்பைப் போட்டு அக்கம் பக்கத்துக் காட்சிகளைக் காணத் தொடங்கினேன்.

அருகே நாலைந்து வீடுகள். இரண்டு கடைகள். சுற்றுப்புறமெங்கும் வயல்வெளிகள். அந்த இடத்தைக் கிராமம் என்று சொல்வதற்கில்லை. அரை மைல் தாண்டி யிருக்கும் கிராமத்திலுள்ளவர்கள் பஸ் ஏற வேண்டுமானால் இந்தச் சாலைக்குத்தான் வரவேண்டும். எதிரேயிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையைப் பார்த்தேன். இரண்டு மூன்று வாழைப்பழச் சீப்புகள்: சோடாக் கலர் புட்டிகள்: கொஞ்சம் கடைக்கார ஆசாமி வாட்ட சாட்டமானவன்; மீசைக்காரன். அவனுக்கும் மற்றொருவனுக்கும் ஏதோ பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது. சோடாவை உடைக்கச் சொல்லிவிட்டு வேண்டாம் என்று அந்த ஆள் தண்டுமுண்டுத்தனம் செய்தான்.

“எக்கச் சக்கமாக எதனாச்சும் பேசினே சோடாப் புட்டியாலேயே உன்னைத் தீர்த்துக் கட்டிப்பிடுவேன்!” கடைக்காரன் சவால் விட்டான்.

கவனத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். இரண்டு மூன்று குறச் சிறுவர்கள் சற்று எட்டத்தில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கண் கொட்டாமல் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண் டிருந்தேன். கழுத்தில் பாசி மணி மாலைகள்; வளர்ந்து வாரி முடிக்காத தலைமயிர்: இடையில் கோவணம். விளங்காத பரிவு அந்தக் குறக் குஞ்சுகளின்மேல் எனக்கு ஏற்பட்டது. அழகான முயல்குட்டியொன்று அவர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு விழித்த வண்ணமிருந்தது. அடுத்த கணம் என் நினைவில் காளிகோடனின் உருவம் உதித்தது. யார் அவன்…?

அன்று காளிகோடனும் இவர்களைப் போல் சிறியவனாகத்தான் இருந்தான். நெஞ்சிலிருந்து நீங்காத வண்ணம் அல்லவா அவன் உருவத்தை என்னுள்ளே படம் பிடித்துக் கொண்டேன்! பத்து வயது குறச் சிறுவன்தான் அவன். அப்பொழுது மூன்று வருஷங் களுக்கு முன் -நரிக் குறவர்கள் எங்கள் ஊர்ப் பக்கம் குடிசை போட்டிருந்தார்கள் பதினைந்து இருபது குடிசைகள் இருக்கும். ஊசியும் மணியும் விற்கத் தெரு முழுவதும் குறவர்கள் அலைந்து கொண்டிருந்த காட்சி இன்று பார்த்தாற்போலிருக்கிறது. நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான் கூட்டம் குடிசையைக் கிளப்பிக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்றது.

‘போர்’ அடிக்கும் பொழுதைக் கழிக்கச் சங்கத்திற்குப் போயிருந்தேன். அங்கே இருக்கும் பத்திரிகைகளைப் படிக்கலாம். இல்லாவிட்டால் மற்ற யாரேனும் வந்திருந்தால் வம்பளந்து கொண்டிருக்கலாம். சங்கக் கட்டடத்தின் முன் வாசலில் உட்கார்ந்து, கதைப் புத்தகம் ஒன்றைச் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது –

“சாமி” மெல்லிய குரல் கேட்டுத் தலையை நிமிர்த்தினேன். எதிரே நின்றிருந்தான் ஒரு குறச் சிறுவன். அவன் முகம் வாடியிருந்தது. ஒட்டிப் போயிருந்தன கன்னங்கள். கழுத்தில் மூன்று நான்கு மணிச்சரங்கள் போட்டிருந்தான். எண்ணெய் கண்டிராத பரட்டைத்தலை!

“சாமி!” மீண்டும் உணர்வற்ற அதே குரல்.

“என்ன வேண்டும்?” சாந்தமாகக் கேட்டேன்.

“சனங்களைக் காணோமுங்க… வுட்டுட்டுப் போயிட்டாங்க… புதருப் பக்கம் நேத்து போனேன். தூங்கிப் போயிட்டேன்… பசிக்கிதுங்க… ஸாமி!”

தாழ்ந்த குரலில் தமிழில்தான் பேசினான். அவர்கள் தாம் இடத்திற்கேற்ப பேசுவார்களே!

கண் கலங்க அவன் நின்றிருந்தான். கூட்டம் அறியாது அவனை விட்டுச் சென்றுவிட்டது. பாவம் சின்னவன்! அவன் என்ன செய்வான்? அவனைப் பார்க்க இரக்கமாக இருந்தது எனக்கு.

“உன் பேரு…?”

“காளிகோடனுங்க!”

உங்க கூட்டம் தெற்கே போனதைப் பார்த்தேனே!’ என்றேன். சட்டைப் பையில் கையை விட்டேன். கையில் வந்த நாலணாக் காசை அவனிடம் நீட்டினேன். அவன் முகம் மலர்ந்தது. கண்ணிலே ஒளி மின்னியது. நன்றியைத் தெரிவித்து விட்டு அவன் நகர்ந்தான். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி! என்னுள்ளே அவன் பேச்சு எதிரொலித்தது. கள்ளமில்லாத உள்ளம்; கபடு அறியாத நெஞ்சம்.

அந்தக் காளிகோடன் இப்பொழுது பெரியவனாக வளர்ந்திருப்பான். வேட்டையாடக் கற்றிருப்பான். நரி பிடிக்க வெல்லாம் போய் வருவான். என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்தேன்.

சோடாக் கடை கலவரம் அடங்கி விட்டிருந்தது. புள்ளினத் தின் கீச்சுக் குரல் சுற்றுப் புறத்திலே ஒலித்துக் கொண்டிருந்தது. குறச் சிறுவர்கள் கொம்மாளமடித்துக் கொண்டுதான் இருந்தனர். கிழக்கே பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூரத்தே பஸ் வரும் ஓசை கேட்டது. ஆமாம், பஸ்தான் வந்து கொண்டிருந்தது. இந்தப் பஸ்ஸிலாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற துடிதுடிப்பு| வண்டி நெருங்கி வந்தது. பெஞ்சில் வைத்திருந்த பை! அவசரம்! பையின் அடிப்பாகத்தைப் பற்றி இழுத்தது கை. பஸ்ஸில் தாவினேன்.. பொழுதுக்குள் வீட்டிற்குப் போய் விடலாம் என்ற மகிழ்ச்சி மனத்தில் நிலைத்தது.

ஆனால்…?

அரை மைல்கூட பஸ் கடக்கவில்லை. கடக்கவில்லை. அதற்குள், சில்லறையை எடு. தம்பி” என்றார் கண்டக்டர் பையில் கையை விட்டேன். பணம் அந்தக் கைப்பையிலல்லவா இருந்தது? துழாவினேன்! பர்ஸ் கையில் தட்டுப்பட வில்லை.

அப்படியானால்…?

பர்ஸ் எங்கே? பையில்தானே பத்திரமாக இருந்தது தப்பித்தவறி எங்கேயாவது விழுந்திருக்குமோ? விழித்துப் பார்த்தார் கண்டக்டர்.

“என்ன தம்பி…?’)

“பர்ஸைக் காணோம்!”

“அதற்கு?”

“இறங்கிக் கொள்கிறேன். எங்கேயாவது விழுந்திருக்கும் தேடிப் பார்க்கிறேன்!”

ஒரு முறைப்பு முறைத்தார் கண்டக்டர் வேதனையோடு இறங்கி நடந்தேன். ஒரு கால் பர்ஸ் பெஞ்சியில்தான் விழுந்து கிடக்குமோ? ஜாக்கிரதைக் குறைவாக அவசரப்பட்டுப் பையை இழுத்தேனே. அதனால் வந்த விளைவுதானோ! அப்பா சும்மா விடமாட்டாரே! அவருக்கு என்ன பதில் சொல்லுவேன். பேசாமல் இப்படியே எங்கேயாவது ஓடிப் போய் விடுவதுதான் மேல்…!

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கியது இதயம். நானூறு ரூபாய்க்கு மேல் அல்லவா பணம் போய் விட்டது! ஒருவேளை குறச் சிறுவர்கள் எடுத்திருப்பார்களோ? சோடாக் கடைக்காரன் தான் யோக்கியனா? குறவர்கள் திருட்டுப் பழக்கம் இல்லாதவர்களெனப் படித்திருக்கிறேனே! சிந்தை நொந்தது.

மீண்டும் அதே இடம்! அந்தச் சிமெண்ட் பெஞ்சு; சோடாக்கடை பிள்ளையார் கோயில், வயல் வெளிகள்! குறச் சிறுவர்களைத்தான் காணவில்லை. சுற்றுப்புறமெங் கும் தேடினேன் பர்ஸை. கண்கள்தாம் அலுப்படைந்தன. பீதியால் ஏதும் புரியவில்லை.

“அப்பனே, ஆனை முகனே. உன்னை நம்பினேன்! நட்டாற்றில் விட்டுவிடாதே! பணமில்லாமல் நான் எப்படி வீட்டில் நுழைவேன்?”

மீண்டும் வேண்டுகோள்! பிரார்த்தனை!

சுற்றுப்புறமே விளங்கவில்லை. நிற்கும் இடம்: கப்பிப்பாதை; மரம்! மரத்து நிழல்; மென்காற்று: காற்றின் தண்மை; கடைகள்; வீடுகள்; வயல்கள்: வரப்புகள்.. எதுவும் புலப்படவில்லை நேரம் நெளிவதுகூடப் புலனாகவில்லை. வெயில் இன்னும் மறையவில்லை. கிழக்கேதான் பார்வை!

கீழ்த்திசையில் வேகமாக யாரோ ஓடிவருவது தெரிந்தது. ஆமாம், என்னைவிடச் சிறிய உருவந்தான். உற்றுப் பார்த்தேன். நரிக்குற மகன்! நொடிகள் ஓடின.

என்னை நோக்கித்தான் வந்தான் அவன். இரைக்க இரைக்க ஓடி வந்ததால் மூச்சு வாங்கியது அவனுக்கு. அவன் யார்? எங்கோ பார்த்த முகம்; முகத்திலே புன்சிரிப்பு.

“ஸாமி…!” அந்தக் குரல்! அதே ஒலி

“காளிதானே நீ…!”

“ஆமாம். ஸாமி!”

காளிகோடன் முன்னைவிட வளர்ந்திருந்தான். உடம்பும் மொழுமொழு வென்றிருந்தது.

“பார்க்கணும்னு ஓடியாந்தேன், ஸாமி…!”

“எப்படித் தெரியும் நான் வந்தது?”

“இதைப் பாருங்க, ஸாமி!”

பார்த்தேன்: ஆனந்தம் அலையாகப் புரண்டது. என் பர்ஸ் அவன் கையில் இருந்தது.

“சின்னவனுங்க கொண்டாந்தானுங்க! விசாரிச்சேன் விசயம் தெரிஞ்சி ஓடியாந்தேனுங்க… அதிலேயிருக்குதே உங்க படம்… உங்க முகத்தைப் பார்த்தவுடனே தெரிஞ்சுக்கிட்டேனுங்க…!”

பர்ஸை என்னிடம் கொடுத்தான். அதிலிருந்து என் ‘போட்டோ’வைக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொண்டுவிட்டான் காளி! தலைகால் புரியாத மகிழ்ச்சி எனக்கு!

“கூட்டம் இங்கேயா இருக்கு, காளி!”

“ஆமாமுங்க; ரெண்டு நாளாச்சு வந்து!” அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. என்மேல் எத்தனை அன்பு அவனுக்கு பர்ஸைத் திறந்து பார்த்தேன். பணம் அப்படியே இருந்தது.

இத்தனை நாட்களுக்குப் பிறகும் என் நினைவு காளிக்கு இருக்கிறதே என்ற பெருமிதம் என்னுள்ளே ஏற்பட்டது. வெள்ளி விநாயகனை நினைத்தேன். அன்று காளிக்கு சின்ன உதவி செய்தேன். இன்று அவன் எனக்கு உதவி செய்து விட்டான். நன்றி மிக்கவன் அவன் அவனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்; மஞ்சள் வெயில் மறையுமுன் கிழக்கே பஸ்ஸும் வந்து சேர்ந்தது.

– 1958 – ‘கணணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை – ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *