(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு வண்டும் காகமும் வழியில் சந்தித்துக் கொண்டன.
“வண்டுத் தம்பி! எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டது காகம்.
“சோலையிலிருந்து” என்று பதிலளித்தது. வண்டு.
“சோலையிலிருந்தா? நானும் அங்கிருந்து தானே வருகிறேன். உன்னைக் காணவில்லையே! நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று வினவியது காகம்.
“காக்கையண்ணா, சோலையிலே பூஞ்செடிகள் இருக்கின்றனவே, அந்தப் பக்கம்தான் நான் இருந்தேன். பூக்களிலே இருந்த தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியது. வண்டு.
“தேனா ? அது எப்படியிருக்கும் ?” என்று கேட்டது காகம்.
“தேன் என்றால் உங்களுக்குத் தெரியாதா ? தேன் என்று சொல்லும்போதே இனிப்பாக இருக் கிறதே. அது கூடத் தெரியவில்லையா? தேன் மிக இனிப்பானது. அதன் சுவைக்கு மேலான சுவையுள்ள பொருள் இந்த உலகத்திலேயே கிடையாது!”” என்று கூறியது வண்டு.
“பூ! இவ்வளவுதானா?” என்று அலட்சிய மாகப் பதில் கூறியது காகம்.
“என்ன அண்ணா பூ என்று சொல்லி விட்டீர்கள் ? பூவிலிருந்து கிடைக்கிற தேனுக்குப் பூவுலகிலேயே நிகரான ஒரு பொருள் கிடையாது. அதைக் குடிக்கும் போது வாய்க்குக் கிடைக்கிற சுவையும் வயிற்றுக்குக் கிடைக்கிற நிறைவும் உடலுக்குக் கிடைக்கிற ஊட்டமும் உள்ளத்திற்குக் கிடைக்கிற இன்பமும் அளவிட்டுச் சொல்ல முடியாது அண்ணா!” என்று தேனுண்ட மயக்கத் திலே வெறியோடு பேசியது வண்டு.
“வண்டுத் தம்பி, நீ கண்டது அவ்வளவுதான்! என் வேப்பம் பழத்துக்கு மேலாகவா இதெல்லாம் ? வேப்பம் பழம் கிடைத்தால் இந்த உலகத்தில் வேறு உணவே எனக்கு வேண்டாமே! நான் சோலை யிலே நிறைய வேப்பம் பழம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். என்னிடம் உன் தேனைப் பற்றி அளக்காதே!” என்று கூறி விட்டுப் பறந்தது காகம்.
கருத்துரை :- சோலைக்குச் சென்ற வண்டு தேனைப் பற்றிப் பேசியது. காகமோ வேம்பைப் பற்றிப் பேசியது. உயர்ந்தவர்கள் ஒருவனிடமுள்ள நற்குணங்கண்டு மகிழ்ந்து அவற்றைப் போற்றிப் பேசுவர்; தாழ்ந்தவர்கள் அவரிடமுள்ள தீய குணங்களையே எடுத்துப் பேசுவர்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.