அல்லிபுரி என்ற நாட்டை சந்திரசேகரன் என்ற மன்னர் ஆட்சி செய்துவந்தார். அவர் மிகவும் நல்லவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். தன் ஆட்சியில் மக்கள் சிறு துன்பம்கூட அனுபவிக்க கூடாது என்று நினைப்பவர். அதற்காக எந்த நேரமும் ஓயாமல் உழைத்துகொண்டு இருப்பவர். அதே நேரம் குற்றம் செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவும் தயங்கமாட்டார்.
சந்திரசேகரனின் இந்த நடவடிக்கையால் நாட்டில் குற்றங்கள் மிகவும் குறைந்திருந்தன. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய பிரச்னை. அதுவும் அரண்மனைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தது. சமையலறையில் செய்து வைக்கிற இனிப்பு மற்றும் பலகாரங்கள் அடிக்கடி காணாமல் போயின.
சமையல்காரர் முதல்முறையாகச் சொன்னபோது இளவரசனோ அல்லது இளவரசியோ எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் என்று எண்ணி, பேசாமல் இருந்துவிட்டார். அடுத்தடுத்துப் புகார்கள் வந்ததும் கவலை ஏற்பட்டது. தன் பிள்ளைகள் எடுக்கிறார்களா, அல்லது வேறு யாராவது எடுக்கிறார்களா? ‘சாப்பிடும் பொருள்தான் என்றாலும் தெரியாமல் எடுப்பது குற்றம்தானே? அரண்மனைக்கு உள்ளேயே இருக்கும் அந்தத் திருடன் யார்’ என்கிற கேள்வி அவரைக் குடைந்தது.
அன்று அரச சபை கூடியதும் அங்கே பணிபுரிபவர்களையும், இளவரசன் மற்றும் இளவரசியையும் வரவழைத்து விசாரணையைத் தொடங்கினார்.
‘‘அரண்மைக்குள்ளேயே இப்படி நடப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். யாருக்கு எவ்வளவு பலகாரம் வேண்டுமென்றாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். அதை விட்டு இப்படி திருட்டுத்தனமாக எடுப்பது தவறு. யார் அப்படிச் செய்தது? நீங்களாக ஒப்புக்கொள்ளுங்கள். மன்னித்து விட்டுவிடுகிறேன்’’ என்றார்.
யாரும் வாயைத் திறக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள். இளவரசனும் இளவரசியும்கூட பதில் பேசவில்லை.
‘‘முத்தழகி, மதிசேகரா! எனக்கு மற்றவர்களைவிட உங்கள் மீதுதான் அதிக சந்தேகம். ஏனென்றால் நீங்கள்தான் சிறுவர்கள். அரண்மனைக்குள் எங்கும் செல்லும் உரிமையுள்ளவர்கள். சொல்லுங்கள் உங்களில் யார் இந்த தவறைச் செய்வது? அல்லது இருவருமே சேர்ந்துச் செய்கிறீர்களா?’’ என்று கேட்டார் சந்திரசேகரன்.
‘‘தந்தையே! பலகாரத்தைத் திருடிச் சாப்பிட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. போதும் போதும் என்று சொல்கிற அளவிற்கு கிடைக்கிறது. பிறகு எதற்கு திருட வேண்டும்?’’ என்றாள் இளவரசி முத்தழகி.
‘‘அதுதானே? உங்களின் பிள்ளைகளான நாங்கள் தவறு செய்வோமா..? இது வேறு யாரோ செய்கிற காரியம்’’ என்றான் இளவரசன் மதிசேகர்.
‘‘அதுதான் யார் செய்வது?’’ என்று சற்றே கோபத்துடன் கேட்டார் சந்திரசேகரன்.
கூட்டத்தில் மீண்டும் அமைதி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அமைச்சர் அறிவழகன் எழுந்தார். அரசரை வணங்கிவிட்டுப் பேசினார்.
‘‘அரசே! இப்படி விசாரிப்பதால் உண்மை தெரியாது. குற்றத்தை ஒப்புக்கொள்ள நினைத்தாலும் இத்தனை பேருக்கு மத்தியில், அதுவும் சாதாரண பலகாரத் திருட்டை எப்படி ஒப்புக்கொள்வார்கள்? மற்றவர்கள் கேலியாகச் சிரிப்பார்களே? அதனால் பிரச்னையை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.
‘‘சரி உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன், அதற்குள் கண்டுபிடியுங்கள்’’ என்றார் சந்திரசேகரன்.
அத்துடன் அந்தப் பிரச்னையை நிறுத்தி விட்டு வேறு வேலையைத் தொடங்கினார்கள். அறிவழகன் ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் கச்சிதமாக முடித்து விடுவார் என்பதால் சந்திரசேகரன் கவலை இல்லாமல் இருந்தார்.
மூன்றாவது நாள் அவர் ஓய்வறையில் தனியாக இருந்தபோது அமைச்சர் அறிவழகன் வந்தார்.
‘‘என்ன அமைச்சரே, பலகாரத் திருடனைக் கண்டுபிடிக்கக் கொடுத்திருந்த அவகாசம் இன்றோடு முடியப் போகிறதே நினைவு இருக்கிறதா?’’ என்று கேட்டார்.
‘‘இருக்கிறது அரசே! அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன். திருடனைக் கண்டுபிடித்து விட்டேன்’’ என்றார் அறிவழகன்.
‘‘சபாஷ்! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? யார் அவன்?’’
‘‘அரசே! அன்று நீங்கள் எல்லாரையும் அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கும்போது நான் ஒவ்வொருவர் முகத்தையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு காவலாளி மட்டும் ‘திரு! திரு’வென விழித்துக்கொண்டு இருந்தான். இரவில் சமையலறைப் பக்கம் காவல் இருப்பவன் அவன்தான்…’’
‘‘ஓகோ! அப்படியென்றால் அவன்தான் திருடியவனா?’’
‘‘நானும் அப்படி சந்தேகப்பட்டுத்தான் அவனை வீட்டில் சந்தித்து விசாரித்தேன். அவன் சொன்ன விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்கள் இரவில் சமையலறையில் ஒளிந்து கண்காணித்தேன். பிறகுதான் அவன் சொல்வது உண்மைதான் என்பது தெரிந்தது.’’
‘‘புதிர் போடாதீர்கள் அமைச்சரே, நேரடியாகச் சொல்லுங்கள். யார் அந்தத் திருடன்?’’
‘‘தாங்கள்தான் அரசே’’ என்றார் அறிவழகன்.
சந்திரசேகரன் திடுக்கிட்டார். ‘‘அமைச்சரே என்ன உளறுகிறீர்கள்?’’ என்று சீறினார்.
‘‘கோபப்படாமல் சொல்லுவதைக் கேளுங்கள் அரசே. பெரிய மகாராணியாகிய தங்கள் தாயாரிடமும், அரண்மனை வைத்தியரிடமும் கலந்து பேசிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். தங்களுக்கு சிறு வயதில் பலகாரம் சாப்பிடுவது என்றால் மிகவும் உயிராம். கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள் என்று பெரிய மகாராணியார் சொன்னார். உண்மைதானே?’’
‘‘ஆமாம்…’’
‘‘பிறகு வளர்ந்து அரசராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் பலகாரம் சாப்பிடும் ஆசை போகவில்லை. ஆனால் அரசனாக இருந்துகொண்டு அதிகமாக பலகாரங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே, மக்களைப் பற்றிக் கவலை இல்லாதவர் என நினைப்பார்களே என்றெல்லாம் நினைத்து ஆசையை அடக்கிக்கொண்டீர்கள். மற்றவர்கள் சாதாரணமாக இரண்டு, மூன்று என்று சாப்பிட்டாலும் நீங்கள் ஒன்றுதான் சாப்பிடுவீர்கள். இது உண்மைதானே?’’
‘‘எல்லாம் சரிதான். அதற்கும் இதற்கும்…’’
‘‘சொல்கிறேன் அரசே. அந்த வீரனை விசாரித்தபோது சில நாட்களில் நள்ளிரவில் நீங்கள் சமையலறைக்கு வருவீர்களாம். பலகாரங்களை எடுத்துச் சாப்பிடுவீர்களாம். அன்று விசாரிக்கும்போது அவன் விழித்தது அதனால்தான். அவ்வளவு கூட்டத்தில் உங்களைப் பற்றி உங்களிடமே எப்படிப் புகார் கூற முடியும்? இதை அவன் சொன்னபோது நம்பாமல் நானே கண்காணித்தேன். நேற்று இரவு நீங்கள் சமையலறைக்கு வந்து சாப்பிட்டீர்கள்’’ என்றவர் தொடர்ந்து, ‘‘நமது வைத்தியரிடம் பேசினேன். மனிதன் தன் மனதில் தொடர்ந்து அடக்கி வைக்கும் ஆசைகள் இப்படி வெளிப்படுமாம். நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியாதாம். உறக்க நிலையில் இதைச் செய்தீர்களாம்’’ என்றார்.
‘‘ஓகோ… இதை எப்படி மாற்றிக் கொள்வது? என்று கேட்டார் சந்திரசேகரன்.
‘‘இரண்டே வழிகள். கூச்சப்படாமல் ஆசைப்பட்டதை வெளிப்படையாகச் சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிட்டால் யாராவது தவறாக நினைபார்களோ என்ற எண்ணம் வேண்டாம். நமது கடமைகளை நாம் சரியாகச் செய்யும்போது நமக்கென்று இருக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் தவறேதும் இல்லை. இது ஒரு வழி. இன்னொரு வழி, ஆசையிலிருந்து விலகுவது. இதையெல்லாம் சாப்பிடும் காலத்தை, வயதை நான் தாண்டி விட்டேன். இனி இது எனக்குத் தேவையில்லை. வேறு விஷயங்களை கவனிப்போம் என்று உங்கள் மனதிடம் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள்’’ என்றார் அறிவழகன்.
‘‘இனிப்புத் திருடனை அடையாளம் காட்டியதற்கு நன்றி அமைச்சரே. இனி அவன் திருடமாட்டான்…’’ என்று கூறிச் சிரித்தார் சந்திரசேகரன்.
– வெளியான தேதி: 16 ஜூன் 2006