கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,506 
 
 

அந்தக் குறுகலான பாதையில் இளவரசனின் குதிரை காற்றாய்ப் பறந்துகொண்டு இருந்தது. பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. சற்றுத் தொலைவில் ஒரு கிழவர் பெரிய விறகுக் கட்டு ஒன்றைத் தலையில் சுமந்தபடி தள்ளாடி நடந்து போவது இளவரசனின் கண்களில் பட்டது.

அவன் நினைத்திருந்தால் குதிரையின் வேகத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால் இளவரசனோ ‘‘ஏய்! கிழவா, ஒதுங்கிப் போ!’’ என்று கத்தினான்.

இளவரசனின் கூச்சல், அவர் காதுகளில் விழவில்லை. பாதையின் நடுவாகவே நடந்து சென்றார்.

இளவரசனுக்கு சினம் மிகுந்தது. குதிரையின் வேகத்தைக் குறைக்காமலேயே அந்தக் கிழவரை மோதித் தள்ளிவிட்டுச் சென்றான்.

வயலில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து கிழவரைத் தூக்கிவிட்டார்கள்.

‘‘இளவரசனுக்கு இப்போதே இவ்வளவு ஆணவம்! மன்னராக முடிசூட்டிக் கொண்டால் இன்னும் என்னவெல்லாம் நிகழுமோ..!’’ என்று பேசியபடியே மக்கள் கலைந்து போனார்கள்.

அரசர் தனியறையில் அமர்ந்திருக்க, அவர் எதிரே நின்றிருந்தான் ஒற்றர் படைத்தலைவன். ‘‘அரசே, மக்களிடையே இளவரசரின் பெயர் நாளுக்கு நாள் கெட்டுக்கொண்டே போகிறது. நேற்று என்ன நடந்தது தெரியுமா? மாறுவேடமிட்டுக் கொண்டு நகர்வலம் சென்று கொண்டிருந்த இளவரசர் மீது இளம் பெண்ணொருத்தி, அவர் வருவதைக் கவனிக்காமல் அரிசி களைந்த நீரைக் கொட்டி விட்டாள்…

உடனே தம் மாறுவேடத்தைக் கலைத்த இளவரசர், அவளைப் பெண் என்றும் பார்க்காமல் சாட்டையால் அடித்து விட்டார். வருங்காலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய இளவரசர், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.’’

அரசர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை அவர் முகத்தோற்றம் தெரியப்படுத்தியது. ‘‘சரி, நீ போய் படைத் தலைவரை வரச் சொல்’’ என்று அரசர் கூற, ஒற்றர் படைத் தலைவன் அரசரை வணங்கி விட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் படைத்தலைவரோடு இளவரசனின் தம்பியும் வந்தான்.

படைத்தலைவரிடம் அரசர், ‘‘கேட்டீரா மைத்துனரே, உம் தங்கை மகனின் சேட்டைகளைப் பற்றி…’’ என்றார்.

படைத்தலைவரும் இளவரசர்களின் தாய்மாமனுமாகிய இரும்பன், தன் குறுந்தாடியைத் தடவியபடி ‘‘அரசே, என் தங்கை இறந்தபின் தாயில்லாப் பிள்ளை என்று அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டீர்கள்!’’ என்றார்.

‘‘இல்லை மைத்துனரே… இல்லை! குட்டி இளவரசனையும்தான் செல்லமாக வளர்த்தேன். இவன் நல்ல பிள்ளையாக இல்லையா? மூத்தவனுக்கு, தான் வருங்கால அரசன் என்ற ஆணவம். ஒரு நல்ல ஆட்சியாளனுக்கு ஆணவம் கூடாது. அது அவனுக்குப் புரியவில்லை!’’

‘‘அரசே இளவரசனுக்குக் கல்வியும், போர்க்கலையும் கற்பித்த ஆசிரியர் தங்கப்பனாரை அழைத்துப் பேசலாம்.’’

‘‘அடடே! தங்கப்பனாரை மறந்தே போய்விட்டேன். அவர் சொல்லும் அறிவுரைகளைத் தட்டாமல் கேட்பான். வாருங்கள், அவரை நாமே சென்று பார்ப்போம்!’’ என்று அரசர் கூற, அதைத் தொடர்ந்து மூவரும் வெளியேறினார்கள்.

தலைநகரிலிருந்து பன்னிரண்டு காத தொலைவில் இருந்தது குதிரைப் பட்டணம். அங்கே மாதந்தோறும் நடக்கும் குதிரைச் சந்தை அன்று நடந்து கொண்டிருந்தது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூடக் குதிரைகள் அங்கே கொண்டு வரப்பட்டு, ஒரு பெரிய திடலில் காட்சிக்காக வைக்கப்படும். அலங்காரக் குதிரைகள், வண்டிக்குதிரைகள், போர்க்குதிரைகள் என்று வகை வகையாய்ப் பல்வேறு குதிரை இனங்களை அங்கே பார்க்கலாம். நம் முரட்டு இளவரசனுக்கு முரட்டுக் குதிரைகளை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்டில் மூன்று, நான்கு முறையாவது குதிரைச் சந்தைக்கு வந்துவிடுவான். சந்தை முழுக்கச் சுற்றிவந்து இரண்டு, மூன்று குதிரைகளை வாங்கிச் செல்வது இளவரசனின் பொழுதுபோக்கு.

இளவரசன் அன்றும் குதிரைச் சந்தைக்கு வந்திருந்தான். இளவரசன் நகர்வலம் சென்றாலும், வேட்டைக்குச் சென்றாலும், வெளியூர், வெளிநாடு சென்றாலும் தனித்தே தான் செல்வான். வீரர்களை அழைத்துச் செல்வது வீரத்துக்கு இழுக்கு என்பது இளவரசனின் எண்ணம்.

ஒவ்வொரு பந்தலாகச் சென்று குதிரைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. கூட்டத்தைப் பிளந்துகொண்டு நான்கு அரபுக் குதிரைகள் பாய்ந்து வந்தன. அவற்றின் மேல், கறுப்பு அங்கி அணிந்த நால்வர் அமர்ந்திருந்தார்கள். கண்கள் மட்டுமே தெரியும்படியாக முகமூடியும் அணிந்திருந்தார்கள். கைகளில் உருட்டுக் கட்டைகள்…

தன்னைத் தாக்கத்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டான் இளவரசன். வாளை உருவ முயன்றான். அதற்குள் குதிரையில் வந்த ஒருவன் எறிந்த உருட்டுக் கட்டை இளவரசனின் நெற்றியைத் தாக்கவே சுருண்டு விழுந்தான்.

நான்கு பேரும் இளவரசனை மாறிமாறித் தாக்கினார்கள். அந்த நான்கு முகமூடிகளின் முரட்டுத்தனமான தாக்குதல்களின் முன் இளவரசனின் வீரம் எடுபடவில்லை. குருதி பொங்க மயங்கிச் சாய்ந்தான்.

இதை மக்கள் கூட்டம் வேடிக்கைப் பார்த்ததே தவிர ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை.

நான்கு முகமூடிகளும் எப்படித் தோன்றினார்களோ அப்படியே மறைந்து போனார்கள்.

இளவரசன் கண்விழித்தபோது அரண்மனையில் தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். கட்டிலைச் சுற்றி அரசரும், குட்டி இளவரசனும், படைத்தலைவர் தாய்மாமனும், ஆசிரியர் தங்கப்பனாரும் கவலையோடு நிற்பதைப் பார்த்தான்.

அரசர், ‘‘மகனே, எப்படியிருக்கிறாய்? நல்லவேளை, தம்பியும் நேற்று குதிரைச் சந்தை பார்ப்பதற்காக வந்திருந்தான். அவன்தான் அடிபட்டுக் கிடந்த உன்னைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்தான்!’’ என்றார்.

படைத்தலைவர் உறுமினார், ‘‘இளவரசே, உங்களைத் தாக்கிய அந்த முகமூடிக் கும்பலை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். நம் படைவீரர்களும் ஒற்றர்களும் அந்தப் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள்!’’

குட்டி இளவரசன் அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டான், ‘‘ரொம்ப வலிக்கிறதா?’’

இல்லை என்பது போல் தலை ஆட்டிய இளவரசன், ‘‘உடல்வலியைத் தாங்கிக்கொள்வேன். நான் கூடுதல் கவனத்தோடு இருந்திருந்தால் அவர்களிடமிருந்து தப்பியிருக்க முடியும்… ஆனால் என் மனம்தான் மிகவும் வலிக்கிறது. குதிரைச் சந்தையில், நான் நாட்டின் இளவரசன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஒருவர்கூட என்னைக் காப்பாற்றவோ முகமூடிக் கயவர்களைத் தடுக்கவோ முன்வராததைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!’’ என்றான்.

இதைக் கேட்டதும் ஆசிரியர் தங்கப்பனார், ‘‘இளவரசே, மக்களிடையே ஆணவத்தால் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கெட்ட பெயர்தான் அதற்குக் காரணம். ஓர் ஆட்சியாளன் மக்களிடையே நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவன் அவர்களிடம் அன்போடு நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த நாட்டின் வருங்கால மன்னராக இருந்தாலும் அடக்கம், பொறுமை, பணிவெல்லாம் தேவை’’ என்றார்.

இதைக் கேட்ட இளவரசன் சிறிது நேர அமைதிக்குப் பின் கூறினான், ‘‘ஆசிரியரே! தாங்கள் எனக்குக் கல்வி கற்பிக்கையில் இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். நான்தான் உங்கள் அறிவுரைகளைக் கேட்கவில்லை.

நாட்டு மக்கள் என்மேல் எவ்வளவு வெறுப்போடு இருக்கிறார்கள் என்பதை இன்று நான் உணர்ந்து கொண்டேன். இனி அவர்களின் அன்பைப் பெறும்படி நடந்துகொள்வேன். இது உறுதி!’’

சுற்றியிருந்த நால்வரும் இளவரசன் கூறியதைக் கேட்டதும் மகிழ்ந்தார்கள்.

தங்கப்பனாரின் திட்டப்படி இளவரசனுக்குப் பாடம் புகட்ட, அவனை முகமூடியணிந்து தாக்கியது இந்த நான்கு பேர்தான் என்ற ரகசியம் அவர்களைத் தவிர, கதை சொன்ன எனக்கும் கதையைக் கேட்ட உங்களுக்கும் மட்டும்தான் தெரியும்… தயவு செய்து இளவரசனிடம் சொல்லி விடாதீர்கள்!

வெளியான தேதி: 16 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *