தாய் சொல்லைத் தட்டாதே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 9,064 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தசாமியின் வீட்டுக் கூட்டிலே ஒரு கோழியும் ஆறு குஞ்சுகளும் வசித்து வந்தன.

தாய்க் கோழியானது ஆறு குஞ்சுகளையும் அன்போடு பராமரித்து வந்தது. பகல் முழுவதும் குப்பை மேடுகளில் கிளறிக் கிளறி உணவைக் கொடுக்கும். இரவு நேரங்களில் குஞ்சுகளை இறக்கையினுள்ளே வைத்து குளிர்படாமல் கண்ணை இமை காப்பது போல காக்கும்.

கோழிக் குஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தன. கோழிக் குஞ்சுகள் வளர வளர அதன் எண்ணங்களும் கொஞ்சம் கொஞ்சம் மாற ஆரம்பித்தன.

அதில் நான்கு கோழிக்குஞ்சுகள் தாயின் சொல்லைக் கேட்டு நடந்து வந்தன. அடுத்த இரண்டு குஞ்சுகளும் தாயின் சொல்லைக் கேட்பதில்லை. தாயை எதிர்த்துக் கதைப்பதிலும் எதற்கெடுத்தாலும் சண்டை பிடிப்பதுமாக இருந்து வந்தன.

இந்த இரண்டு கோழிக்குஞ்சுகளின் செய்கைகளை அவதானித்த தாய்க்கோழி எதிர்காலத்தில் என்ன விபரீதம் நடக்குமோ என்று கலங்கியது.

ஒருநாள் இரவு எல்லாக் கோழிக்குஞ்சுகளையும் சிறகினுள் அரவணைத்துக் கொண்டு படுத்தபடி, சில புத்திமதிகளைக் கூறியது.

“பிள்ளைகளே! நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் அன்பு கொண்டு வாழ வேண்டும். ஒருவருடன் ஒருவர் சண்டை பிடிக்கக் கூடாது. நீங்கள் சண்டை பிடித்தால் அது எதிரிக்குத்தான் சாதகமாக அமையும். உங்கள் ஒற்றுமையின்மையை எதிரி பயன்படுத்துவான். நஷ்டமடைவது நீங்கள்தான்.

கிடைக்கும் உணவை எல்லோருமாகப் பகிர்ந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். எள் ஆனாலும் ஆறாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு தாய் புத்தி சொன்னால் எப்பொழுதும் உங்களின் நன்மைக்காகவே இருக்கும். அதனால் ஒரு தாயின் புத்தியைக் கேட்டு நடக்க வேண்டும்.”

தாயின் அறிவுரைகளின் பின்பும் நான்கு குஞ்சுகளே சொல் கேட்டு நடந்தன. இரண்டு குஞ்சுகளும் தொடர்ந்து சொற்கேளாதவையாகவே நடந்தன.

ஒருநாள் ஆறு கோழிக் குஞ்சுகளுக்கும் குப்பை மேட்டைக் கிளறி உணவு கொடுத்துக் கொண்டிருந்தது.

தாய்க் கோழி குப்பையைக் கிளறிய போது குப்பைக்குள்ளிலிருந்து பெரியதொரு மண்புழு வெளியே வந்தது.

அதைக் கண்ட தாய்க்கோழி பிள்ளைகளே! இன்று உங்களுக்கு நல்லதொரு உணவு கிடைத்திருக்கின்றது. ஆறு பேருமாகப் பகிர்ந்து சாப்பிடுங்கள்” என்றது.

அதற்கு நான்கு கோழிக்குஞ்சுகளும் இசைந்தன. ஆனால், இரண்டு குஞ்சுகளில் ஒன்று

“எனக்குப் பசிக்கிறது, நான் மட்டும் சாப்பிடப் போகிறேன்” என்றது.

உடனே அடுத்த குஞ்சு “அதை நான்தான் முதலில் கண்டேன். அது எனக்குத்தான் சொந்தம்” என்று கூறியது.

அவ்வார்த்தைக்கு எதிர் வார்த்தையாக அடுத்த குஞ்சு, “இல்லை எனக்குத்தான் சொந்தம்” என்றது.

இப்படியாக இரண்டு குஞ்சுகளுக்குமிடையே வாக்குவாதம் மூண்டது.

இந்த வாக்குவாதத்தை தாய்க்கோழியும் மற்ற நான்கு கோழிக் குஞ்சுகளும் மௌனமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அவ்வேளையில் திடீரென இரண்டு குஞ்சுகளும் சண்டையில் ஈடுபட ஆரம்பித்தன.

இதனைச் சகிக்க முடியாத தாய்க்கோழி சொல்லுக் கேட்காத பிள்ளைகளுடன் கதைத்துப் பிரயோசனமில்லை என்ற எண்ணத்தில் வேதனையுடன் மற்ற நான்கு குஞ்சுகளுக்கும் உணவு தேடிக் குப்பைபைக் கிளறத் தொடங்கியது.

ஒன்றை ஒன்று கொத்தி சண்டையில் ஈடுபட்ட இரண்டு குஞ்சுகளும் தங்களையறியாமலேயே தாய்க் கோழியிலிருந்து வெகுதூரம் சென்று விட்டன.

அப்பொழுது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேம்பு மரத்தில் பார்த்துக் கொண்டு இருந்த காகம் ஒன்று பறந்து வந்து குப்பையில் கிடந்த மண்புழுவைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது.

இதனைக் கண்ட இரண்டு குஞ்சுகளும் சண்டையை நிறுத்தி விட்டு மண்புழு இருந்த இடத்திற்கு ஓடி வந்தன. ஆனால், அவர்களால் மண்புழுவைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

தாய் சொல்லைக் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று கண்ணீர் விட்டழுதபடி தாயை நோக்கி நடந்தன.

– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *