முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன் இறந்துவிட, அண்ணன், தம்பி இருவரும் வறுமையில் வாடினர்.
“”தம்பி! நாம் இருவரும் இந்த ஊரில் கடினமாக உழைக்கிறோம். இருந்தும் வயிறார உண்ண முடியவில்லை. நான் வெளியூர் சென்று பொருள் ஈட்டித் திரும்புகிறேன். நீ அதுவரை நம் வீட்டைப் பார்த்துக்கொள். அதன்பிறகு, வளமாக வாழலாம்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
நெடுந்தொலைவு நடந்து ஓர் ஊரை அடைந்தான். அந்த ஊர் பண்ணையாரிடம் வேலை கேட்கச் சென்றான். அவரை பண்ணையார் என்று அறிந்துகொண்ட அவன், “”ஐயா! வேலை தேடி ஊருக்கு வந்தேன். எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள்,” என்று வேண்டினான்.
“”நல்ல இடத்திற்குத்தான் வந்துள்ளாய். எனக்கு ஒரு வேலையாள் தேவை. நல்ல ஊதியம் தருவேன். ஆனால்…” என்று இழுத்தார் அவர்.
“”எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடந்து கொள்வேன்!” என்றான் அவன்.
“”நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் மூன்று பொற்காசுகள் கூலியாகத் தருவேன். நான் என்ன வேலை சொன்னாலும் நீ செய்து முடிக்க வேண்டும். அப்படி உன்னால் முடிக்க முடியாத ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு பொற்காசுகளைக் குறைத்துக் கொள்வேன்!” என்றார் அவர்.
சூழ்ச்சியை அறியாத அவன், “”இன்றே வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்து முடிக்கிறேன்!” என்றான். அவரிடம் வேலைக்குச் சேர்ந்த அவன் உண்மையாக உழைத்தான். நாட்கள் ஓடின. ஓராண்டு முடிய இன்னும் ஒருநாள் தான் இருந்தது.
“மூன்று பொற்காசுகள் நாளை கிடைக்கும்; ஊருக்குச் சென்று தம்பியுடன் வளமாக வாழலாம்’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் அவன். பொழுது விடிந்தது.
பண்ணையாரிடம் சென்ற அவன், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது. நீங்கள் சொல்லிய கூலியைக் கொடுத்தால் நான் ஊருக்குச் செல்வேன்!” என்று இழுத்தான்.
“”இன்று மாலை தான் நான் சொன்ன ஓராண்டு முடிகிறது. உனக்கு மூன்று எளிய வேலைகள் வைக்கிறேன். மாலைக்குள் அவற்றை முடித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொள். பிறகு மகிழ்ச்சியுடன் உன் ஊருக்குச் செல்,” என்றார் அவர்.
“”முதல் வேலை என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டான் அவன்.
“”அதோ பார்… அங்கே இரண்டு விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரிய ஜாடி; இன்னொன்று சிறிய ஜாடி. அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,” என்றார் அவர்.
“”ஐயா! எப்படி சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க முடியும். யாராலும் செய்ய முடியாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே! இது என்ன அநியாயம்!” என்று அலறினான் அவன்.
“”செய்ய முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் சொன்ன இந்த வேலையைச் செய்யாவிட்டால், உன் கூலியில் ஒரு பொற்காசைக் குறைத்துக் கொள்வேன்!” என்று சொன்னார் அவர். வேறு வழியில்லாமல், “”ஐயா! அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லுங்கள்,” என்று கேட்டான்.
“”அந்த அறைக்குள், ஈரமான நெல் உள்ளது. நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும். அதுதான் இரண்டாவது வேலை,” என்றார் அவர். திடுக்கிட்ட அவன், “”ஈர நெல்லை வெளியே எடுத்துச் செல்லாமல் எப்படிக் காய வைக்க முடியும்? நீங்களே வழி சொல்லுங்கள்!” என்று கோபத்துடன் கேட்டான்.
“”வழி எல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன சொல்கிறேனோ அதை நீ செய்ய வேண்டும்!” என்றார் அவர்.
இரண்டு பொற்காசுகள் போய்விட்டன. ஒரு பொற்காசாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில், மூன்றாவது வேலை என்ன என்று சோகத்துடன் கேட்டான் அவன்.
“”இந்த வேலை மிக எளிய வேலை. என் தலையின் எடையை மட்டும் நீ சரியாக அளந்து சொல்ல வேண்டும்; அவ்வளவுதான்!” என்றார் அவர்.
“”ஐயா! உங்கள் தலையின் எடையை மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? ஓராண்டு உங்களிடம் உண்மையாக உழைத்தேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,” என்று கெஞ்சினான் அவன்.
“”நான் சொன்ன மூன்று வேலைகளை நீ செய்யவில்லை. ஒப்பந்தப்படி உனக்குத் தர வேண்டிய மூன்று பொற்காசுகளை நான் தர வேண்டாம். போய் வா. இனி நீ கெஞ்சுவதாலோ, அழுவதாலோ என் உள்ளம் இரங்காது!” என்று கண்டிப்புடன் சொன்னார் அவர்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தள்ளாடியபடி தன் ஊர் வந்து சேர்ந்தான் அவன். தம்பியிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான்.
“”அண்ணா! உன்னை ஏமாற்றிய அந்தப் பண்ணையாரைப் பழிக்குப் பழி வாங்குகிறேன்!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தம்பி. அண்ணன் வேலை பார்த்த அதே ஊரை அடைந்தான்.
பண்ணையாரைச் சந்தித்த அவன், “”ஐயா! நான் வெளியூர். வேலை தேடி இங்கு வந்தேன். ஏதேனும் வேலை கிடைக்குமா?” என்று பணிவுடன் கேட்டான்.
“ஏமாளிக்கு உலகில் பஞ்சமே இல்லை. புதிதாக ஓர் ஏமாளி கிடைத்திருக்கிறான். இவனை ஏமாற்றி வேலை வாங்க வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.
“”எனக்கும் உன்னைப் போல ஒரு வேலையாள் தேவை. நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்து முடிந்ததும், உன் கூலி மூன்று பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம்,” என்றார்.
ஓராண்டு முடிவடைந்தது. ஏதும் அறியாதவன் போல், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது…” என்றான்.
“”உனக்கு மூன்று எளிய வேலைகள் வைத்திருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு உன் கூலியை வாங்கிக்கொள்,” என்றார் பண்ணையார்.
“”இதோ! இங்கே விலை உயர்ந்த இரண்டு பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. நீ செய்ய வேண்டிய வேலை, அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். செய்துவிட்டு வா!” என்றார் அவர்.
“”எளிய வேலை தான்!” என்ற அவன், அங்கே ஒரு மூலையில் இருந்த தடி ஒன்றை எடுத்தான். அந்தத் தடியால் அவன் கண் எதிரிலேயே பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். விலை உயர்ந்த அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது.
பதைபதைத்த அவர், “”டேய்! நான் என்ன சொன்னேன். நீ என்ன செய்கிறாய்?” என்று அலறினார்.
“”ஐயா! பெரிய ஜாடியை உடைத்தால் தான் அதைச் சிறிய ஜாடிக்குள் வைக்க முடியும். அதனால்தான் அந்த ஜாடியை உடைத்தேன்,” என்றான் அவன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் பண்ணையார்.
“”ஐயா! நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?” என்று பணிவுடன் கேட்டான் அவன்.
“என்னிடமா உன் திறமையைக் காட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தனக்குள் கறுவினார் அவர்.
“”அந்த அறைக்குள் ஈர நெல் உள்ளது. அந்த நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும்,” என்றார்.
“”இதுவும் எளிய வேலைதான்,” என்ற அவன், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி, கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான். இதைக்கண்டு பதறிய அவர், “”டேய்! கூரையைப் பிரித்து என் வீட்டையே நாசம் ஆக்குகிறாயே! கீழே இறங்கு,” என்று கோபத்துடன் கத்தினார்.
“”ஐயா! அறைக்குள் இருக்கும் நெல்லைக் காய வைக்கச் சொன்னீர்கள். கூரையைப் பிரித்தால் தானே கதிரவன் ஒளி நேராக அறைக்குள் படும். அங்கிருக்கும் நெல் காயும். அதனால்தான் கூரையைப் பிரித்து எறிகிறேன். ஒவ்வொரு முறையும் வேலை இடுகிறீர்கள். அதை நான் செய்து முடிப்பதற்குள் நீங்களே தடுத்து விடுகிறீர்கள். இந்த முறையாவது முழுமையாகச் செய்ய விடுங்கள்!” என்றபடியே, மேலும் கூரையைப் பிரித்து எறிந்தான். அந்த வீடு, கூரை இல்லாமல் குட்டிச் சுவரைப்போல் காட்சியளித்தது. சரியான அறிவாளியிடம் மாட்டிக் கொண்டோம் என்ற உண்மை அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
“நான் இடும் மூன்றாவது வேலையை எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது. இவன் ஏமாற்றம் அடைவதைப் பார்த்து மகிழ வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.
“”என் தலையின் எடை என்ன? நீ அதைச் சரியாகச் சொல்ல வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,” என்றார் அவர்.
“”கடினமான வேலையாக இருக்கும் என்று நினைத்தேன். எளிய வேலைதான் தந்திருக்கிறீர்கள்!” என்ற அவன், தோட்டத்திற்குச் சென்றான். பெரிய பூசணிக்காய் ஒன்றைப் பறித்தான். அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த அவன், “”உங்கள் தலையின் எடையும், இந்தப் பூசணிக்காயின் எடையும் ஒன்றுதான். இதோ தராசு உள்ளது. இதில் ஒரு தட்டில் பூசணிக்காயை வைக்கிறேன். இன்னொரு தட்டில் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன். இரண்டும் சமமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்!” என்று சொல்லிக்கொண்டே, கையில் கத்தியுடன் அவர் தலையை வெட்டுவதற்காக வந்தான்.
“”ஐயோ! இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டேனே. என் தலையை எடுக்காமல் விட மாட்டான் போல இருக்கிறதே!” என்று நடுங்கினார் அவர். இரக்கப்பட்ட அவன், “”இனிமேலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டுவிடுங்கள். எனக்குரிய மூன்று பொற்காசுகளுடன், என் அண்ணனை ஏமாற்றி எடுத்துக்கொண்ட மூன்று பொற்காசுகளையும் சேர்த்துக் கொடுங்கள். உங்களை உயிருடன் விடுகிறேன்,” என்றான் அவன். ஆறு பொற்காசுகளை அவனிடம் தந்தார் அவர். வெற்றியுடன் அங்கிருந்து புறப்பட்டான் அவன். பண்ணையாரும், அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.
– ஜூன் 04,2010