(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பஞ்சபாண்டவர் காலத்திலே அத்தினபுரியை அடுத்து ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டிலே ஒரு முனிவர் இருந்தார். அவருடைய பெயர் காளமுனிவர். அவர் முனிவராக விளங்கியிருந்தும் தீச்செயல்கள் பல வற்றைச் செய்து திரிந்தார்.
தீவினை செய்தலையே தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்த துரியோதனன் அம்முனிவரைக் கொண்டு பாண்டவர்களைக் கொல்ல விரும்பினான். முனிவரை அழைத்தான். தன்னுடைய எண்ணத்தை அவரிடம் கூறினான். அம்முனிவர் முதலில் மறுத்தார்; பிறகு துரியோதனன் விரும்பியவாறே செய்வதாக ஒப்புக்கொண்டார். காட்டையடைந்து கொடிய வேள்வி ஒன்றைச் செய்தார்.
வேள்வியிலிருந்து நெடிய பூதம் ஒன்று எழுந்தது. அப்பூதத்தைப் பார்த்து “ஐவரையும் கொன்று வா” என்று கட்டளையிட்டார். பூதம் விரைந்து சென்றது. பாண்டவர்களில் நால்வர் மாயவனருளால் மாண்டு கிடந்தார்கள். தருமர் ஒருவர் மட்டும் இறவாதிருந்தார். இறந்தவர்களைக் கண்ட பூதம் மிகுந்த சினமடைந்தது. தன்னை அனுப்பிய காளமுனிவர்பால் மீளவுஞ் சென்றது. “ஓ அறிவற்றவனே! இறந்தவர்கள் மீது என்னை யனுப்பினாயே; மனிதர்கள் பல முறை சாவார்களோ?” என்று கூறிக் காளமுனிவர் மாளுமாறு அறைந்துவிட்டுச் சென்றது; ஐவரை யழிக்க நினைந்த முனிவர் தாமே அழிந்தொழிந்தார். பிறருக்குத் தீமை செய்ய எண்ணினால், அத்தீமை தனக்கே வரும். ஆகையால் மற்றவர்களுக்குத் தீமை செய்தற்குச் சிறிதும் எண்ணுதல் கூடாது.
“தீவினை யகற்று” (இ – ள்.) தீவினை – தீயசெயல்களை, அகற்று – செய்யாமல் ஒழிப்பாயாக!
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,