தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,165 
 
 

அப்பா, மிகவும் கஷ்டமாக இருக்கிறது! ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று என்று புதுப் பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கல்யாணம் செய்து கொள்ளாமல், குழந்தை குட்டி என்று இல்லாமல் நிம்மதியாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது” கவிதா குறைப்பட்டுக் கொண்டாள்.

அப்பாவோ, கவிதாவின் குறைகளைக் கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் போனார். மூன்று பாத்திரங்களில் நீரை வார்த்து தனித்தனி அடுப்புகளில் கொதிக்க வைத்தார்.

முதல் பாத்திரத்தில் உருளைக் கிழங்கையும், அடுத்த பாத்திரத்தில் முட்டையையும், கடைசிப் பாத்திரத்தில் டீத்தூளையும் போட்டார்.
சற்று நேரம் ஆனது..

உருளைக்கிழங்கும் முட்டையும் வெந்த பிறகு, சூடான டீயை மகளுக்குக் கொடுத்தார்.

“”அப்பா, என் கேள்விக்குப் பதில் என்ன?” கவிதா கேட்டாள்.

“”அம்மா, நீ இப்போது வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவளா? முட்டையைப் போன்றவளா? அல்லது டீத்தூளைப் போன்றவளா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல்..” என்றார் அப்பா.

“”புரியலையே அப்பா” என்றாள் கவிதா.

“”அம்மா, உருளை, முட்டை, டீத்தூள் மூன்றும் ஒரே எதிரியைத்தான் அதாவது கொதிக்கும் நீரைத்தான் சந்தித்தன.

முட்டை தனது கடினமான வெளித் தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும் தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது.
உருளையோ, இளகிப் பலவீனப்பட்டு விட்டது.

ஆனால், டீத்தூளோ வெந்நீரையே மணமுள்ளதாக்கி சுவையானதாக்கிவிட்டது!

இதுபோலத்தான், சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றனர்.
சிலர் வெளியே கஷ்டநஷ்டங்களால் பாதிக்கப்படாதவர்கள், முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றனர்.

வேறு சிலரோ உருளைக்கிழங்கு போலத் துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொள்கின்றனர். உள்ளும் புறமும் கோழைகளாகி விடுகின்றனர்.

இப்போது புரிகிறதா? எப்படி இருக்க வேண்டும் என்று உனக்கே தெரிந்திருக்குமே, புரிந்திருக்குமே…” என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தார் அப்பா.

“”இனி நான் எப்போதும் டீத்தூள் போலவே இருப்பேன் அப்பா! இது
உறுதி!” என்றாள் மகிழ்ச்சியுடன் கவிதா.

– தேனி முருகேசன் (அக்டோபர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *