ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும் நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாட ஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதை அடித்து வீழ்த்தியது.
“”இந்த மானை பங்குப் போடு!” என்று கரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.
கரடி மிகவும் சிரமப்பட்டு அந்த மானை மூன்று பங்காக்கியது. “”இதோ பங்குகள் தயார்!” என்றது. சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது.
“”சமமா? எது சமம்? யாருக்கு யார் சமம்?” என்று கேட்டு, கரடி மீது பாய்நது குதறியது சிங்கம். ராஜ மரியாதை தெரியாத உனக்கு இந்தக் கதிதான்,” என்றது சிங்கம்.
பின்னர் நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம். “”இதைப் பங்கு போடு!”
நரி சிரமப்படவில்லை. எல்லாப் பங்கையும் சிங்கத்தின் முன்பே குவித்தது. தனக்கு முன்பு ஒரு மிகச் சிறிய துண்டை மட்டும் வைத்துக் கொண்டது. “”அரசே! இதோ தங்கள் பங்கு!” என்றது நரி.
சிங்கத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “”சபாஷ் நரியே! உன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறேன். என்ன பணிவு. ராஜ மரியாதை என்ன என்பது உனக்குத் தான் தெரிந்திருக்கிறது. நீ மகா மகா புத்திசாலிடா… இந்த பாடத்தை எல்லாம் எங்கேடா கத்துக்கிட்ட!” என்று சிங்கம் பாராட்டு மழை பொழிந்தது.
நரி பணிவுடன் சொன்னது! “”அரசே! நான் பிறவியிலேயே புத்திசாலி இல்லை. இப்போதுதான் நான் புத்திசாலியானேன். தங்கள் பாராட்டுகளையும் பெறுகிறேன்.”
“”அதெப்படி திடீரென்று இப்பொழுதே புத்திசாலியானாய்?”
“”பிரபுவே! சற்று முன்பு தான் புத்திசாலியானேன். இதோ செத்துக் கிடக்கிறதே, இந்தக் கரடிதான் என் ஞான குரு!” என்றது நரி.
“ஹ… ஹ… ஹா…’ என்று சிரித்தது சிங்கம்.
– ஆகஸ்ட் 13,2010