ஜிம்போவைக் காப்பாற்று!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,703 
 
 

தேன் மல்லிச் சோலையின் ஓரமாக ஓர் ஓடை பாய்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் தேவர் மலைக் காடு. காட்டிலிருந்து விலங்குகள் வந்து ஓடையில் தண்ணீர் குடிக்கும்.

ஜிம்போ, தேவர் மலையில் வாழ்ந்து வரும் ஒரு யானைக் குட்டி. அந்தக் காட்டில் எல்லாருக்கும் பிரியமானது அது. எல்லா விலங்குகளும் ஒற்றுமையோடு வாழ்வது தேவர் மலைக் காட்டின் சிறப்பு.

ஒரு நாள் ஜிம்போ தண்ணீர் குடிப்பதற்காக ஓடைக்கு வந்தது. தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தது. பிறகு தண்ணீரை உறிஞ்சி தன் தலைமேல் ஊற்றிக்கொண்டது. தலையை உயர்த்தி எதிரே பார்த்தபோது தேன்மல்லிச் சோலையின் கரும்புத் தோட்டம் தெரிந்தது.

சில நாட்களுக்கு முன் அப்பா, அம்மாவுடன் ஓடையைத் தாண்டி கரும்பு தின்றது ஜிம்போவின் நினைவுக்கு வந்தது.இன்றைக்கும் கரும்பு தின்ன முடிவு செய்தது. ஆவலாக கரும்புத் தோட்டத்தை நோக்கி ஓடியது.

ஓர் இடத்தில் புதர் மண்டிக் கிடந்தது. அதன் மீது கால் வைத்துத் தாண்டியபோது,

‘டமார்…. சடசட’ என்று சத்தம்! மரக்கிளைகள் முறிந்து ஒரு பெரிய குழியில் விழுந்தது ஜிம்போ. ‘அம்மா’ என்று அலறியது. விழுந்த வேகத்தில் காலில் அடிபட்டு விட்டது. அப்போது தான் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. யானைகளைப் பிடிப்பதற்காக பெரிய குழிகள் வெட்டி அதன் மேல் கிளைகளைப் பரப்பி இலைகளையும் புதர்களையும் போட்டு வைப்பார்கள். அது தெரியாமல் அதன் மீது நடக்கும் யானைகள் குழியில் விழுந்துவிடும். மனிதர்கள் வந்து விழுந்து கிடக்கும் யானையைக் கட்டி இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

‘‘ஐயோ… யோசிக்காமல் இப்படி வந்து விழுந்து விட்டேனே..’’ என்று ஜிம்போ வேதனைப்பட்டது.

குழியிலிருந்து வெளியே வர முயன்றது. கிணறு போல ஆழமாக இருந்தது அது! ஜிம்போவின் சத்தம் கேட்டு அந்தப் பக்கமாக வந்த சிம்பு முயல் குழிக்குள் எட்டிப் பார்த்தது.

‘‘சிம்பு முயலே, குழியில தெரியாம விழுந்திட்டேன். என்னைக் காப்பாத்து…’’ என்றது ஜிம்போ.

‘‘இந்தாங்க, என் கையை உங்க தும்பிக்கையால இறுக்கமாப் பிடிச்சுட்டு மேலே வந்திடுங்க!’’ என்று தன் கையைக் குழிக்குள் நீட்டியது சிம்பு.

‘‘இது முடியற காரியமா? எவ்வளவு சிறிய உருவம் நீ! உன் கையைப் பிடிச்சுட்டு எப்பிடி வரமுடியும்?’’

‘‘சரி, பலமான யாரையாவது கூட்டிட்டு வரேன்…’’ என்று சிம்பு முயல் காட்டுக்குள் ஓடியது.

‘‘யாராவது வாங்க… ஜிம்போவைக் காப்பாத்துங்க…’’ என்று கத்திக்கொண்டே ஓடியது.

வழியில் டிங்கு கரடி வந்துகொண்டிருந்தது.

‘‘டிங்கு அண்ணே! நம்ம ஜிம்போ குழியில விழுந்திடுச்சு. வந்து காப்பாத்துங்க’’ சிம்பு சொன்னதைப் பதற்றத்தோடு கேட்டது டிங்கு.

‘‘கவலைப்படாதே சிம்பு.. வா, ரெண்டு பேரும் சேர்ந்து காப்பாத்தலாம்…’’

டிங்கு கரடியும், சிம்பு முயலும் குழியை நோக்கிப் புறப்பட்டன!

வழியில் ஒரு கொடியை நீளமாகப் பிய்த்து எடுத்துக்கொண்டது டிங்கு கரடி!

‘‘முன்னே ஒரு நாள் நம்ம மஞ்சு மான் குழியில விழுந்தப்ப இப்படித்தான் ஒரு கொடியைப் போட்டு மஞ்சுவைக் காப்பாத்தினோம்!’’

டிங்கு இதைச் சொன்னதும் சிம்பு முயலின் பதற்றம் தணிந்தது!

குழியை நெருங்கியதும் கொடியின் ஒரு நுனியை ஒரு பெரிய மரத்தில் இறுகக் கட்டியது டிங்கு. மற்ற நுனியைக் குழி அருகில் எடுத்துச் சென்றது.

‘‘ஜிம்போ, கவலைப்படாதே! இந்தக் கொடியின் நுனியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ. நாங்க கொடியை இழுக்கறோம்…’’

‘‘டிங்கு, என் எடைக்கு கொடியைப் பிடித்துக்கொண்டு மேலே வரமுடியாது. கொடிதான் அறுந்து போகும்…’’

அந்த சமயத்தில் அங்கே முன்னா குரங்கு வந்தது.

‘‘முன்னா, நம்ம ஜிம்போ குழியில விழுந்திடுச்சு. அதைக் காப்பாத்தணும்…’’

குழியை நெருங்கிய முன்னா குரங்கு ஜிம்போவிடம், ‘‘ஜிம்போ அண்ணே, என் வாலை கெட்டியா பிடிச்சுக்குங்க.. நாங்க மூணு பேரும் உங்களை இழுக்கறோம். நீங்களும் கொஞ்சம் முயற்சி செஞ்சா வெளியில வந்திடலாம்…’’ என்று சொல்லி தன் நீண்ட வாலை குழிக்குள் இறக்கியது.

‘‘உங்களால என்னை இழுக்க முடியாது. சீக்கிரம் காட்டுக்குள்ளே போய் யானைங்ககிட்ட விஷயத்தைச் சொல்லுங்க…’’

இதைக் கேட்ட முன்னா குரங்கும் சிம்பு முயலும் வேகமாகக் காட்டுக்குள் பாய்ந்து ஓடின. டிங்கு கரடி துணைக்காக குழிக்கு அருகே நின்றது.

தகவல் கேட்டதும் ஐந்து யானைகள் புறப்பட்டு வந்தன.

குழியை நெருங்கியதும் அவை ஒன்றன்பின் ஒன்றாக நின்றன. ஜிம்போவின் தும்பிக்கையை முன்னால் நின்ற யானை பிடித்தது. அந்த யானையின் வாலை இரண்டாவதாக நின்ற யானை தன் தும்பிக்கையால் பிடித்தது.

பலம் தாங்காமல் குழியின் ஒரு பகுதி இடிந்தது ஜிம்போவுக்குக் கொஞ்சம் வசதியாக அமைந்தது. எளிதாக மேலே வந்து விட்டது ஜிம்போ.

சரியான நேரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு தன்னைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி சொன்னது ஜிம்போ!

வெளியான தேதி: 16 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *