(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
5. இருளில் | 6. நாடகம் நடந்தது | 7. ஊர் திரும்புகிறான்
“அடேடே, நம்ம எதிர்வீட்டுக் குழந்தையா? நான் யாரோன்னுல்லே பயந்து போய்த் தடியைத் தூக்கிக்கிட்டு ஓடியாரேன்?” என்றான் தோட்டக்காரன்.
ஜக்குவுக்கு அப்பொழுது தான் நல்ல மூச்சு வந்தது. “நல்ல காலம். யாரோ என்னமோன்னு ஓங்கின தடியை மண்டையிலே பாடாமெ இருந்தாயே!” என்று சொல்லிவிட்டு மாடியை அடைந் தான். ஒரே இருட்டாய் இருக்கவே விளக்கைப் போட்டான்.
தலையணை ஒரு பக்கம், தலை ஒரு பக்கமாய்ப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் நந்து. ஜக்கு அவனை எழுப்பவில்லை. படபடவென்று காற்றில் ஏதோ பறக்கவே அவன் பார்வை மேஜை மீது சென்றது. ஜக்கு உடனே அதைக் கையில் எடுத்துப் பார்த்தான்.
நாடகத்தின் கையெழுத்துப் பிரதி அது. நந்து நடிக்க வேண்டிய பகுதிகள் அதில் அடங்கியிருந்தன. அந்த ஹாஸ்ய நாடகத்திலே நந்துவுக்கு ஒரு பட்டிக்காட்டுப் பையனாக நடிக்க வேண்டிய பாகம். ஜக்கு சுற்றுமுற்றும் நன்றாகப் பார்த்தான்; ஏனென்றால் அந்தக் கையெழுத்துப் பிரதியை நந்து பார்த்திருக்க மாட்டான் என்ற சந்தேகம் அவனுக்கு உடனே உண்டாயிற்று. கையெழுத்துப் பிரதியைச் சுருட்டிக் கொண்டுவந்து வைத்திருப்பதால் அது பிரியாமல் அப்படியே இருந்தது. கை வேர்வைகூடக் காயவில்லை.
ஜக்குவுக்கு மின் வெட்டென ஒரு யோசனை உதித்தது. ‘எப்படியிருந்தாலும் இருக்கட்டும் – நந்து பார்த்திருந்தாலும் சரி, பார்க்காமல் இருந்தாலும் சரிதான்!’ என்று சொல்லிக் கொண்டான். அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்தான். மடமடவென்று வந்த வழியே திரும்பிவிட்டான்.
வரும்போது தெருவிளக்கடியில் நின்றுகொண் டிருந்தவனை இப்போது காணவில்லை. மெதுவாக வீட்டுக்குள் நுழையப்போகும் சமயம். பங்களா காம்பவுண்டுக்கு வெளியே கசமுச என்று பேச்சுக்குரல் கேட்டது. ஜக்கு ஓரமாய்ப் போய் நின்று காதைத் தீட்டிக்கொண்டான்.
“டேய் உல்ப், அவன் மேஜைமேலே வச்சுட்டு வந்துட்டேனடா!” என்றான் சோனிக் கபாலி.
“அது சரிடா; யாரோ நீ போன பிறகு அங்கே வந்தாப்பலே இருந்ததே, அது யாரு?” என்று கேட்டான் உல்ப்.
“நல்ல வேளை! நீ தோட்டக்காரன்கிட்டே பேச்சுக் கொடுக்காமெ இருந்திருந்தால் நான் தெரியாமெ திரும்பியிருக்க முடியாது!” என்றான் சோனி.
“அட சீ! நான் எங்கேடா தோட்டக்காரன் கிட்டே போய்ப் பேசினேன்? நான் அதோ அந்த விளக்குக் கம்பத்துக்குக் கிட்டேன்னா நின்னேன்!”
“அப்போ நீ இல்லையா பேசினது?”
“ஊஹும்?”
“சரி; யாராய் இருந்தா நமக்கென்ன? எப்படியோ வந்துவிட்டோம் வெளியிலே. ஆமாம்; நந்து படிக்காமல் இருந்துட்டு, நடிக்கமாட்டேன்னு சொன்னா?” என்று கேட்டான் சோனி.
“அட, உனக்கேண்டா அந்தக் கவலை? நாளைக்குப் பள்ளிக் கூடம் திறந்தா அந்தப் பயல் கிளாஸுக்கு வந்து தானே ஆகணும். அதனாலே நிச்சயம் அவன் ‘ஆக்ட்’ பண்றானா இல்லையான்னு நீயே பார்! கதறிண்டு ‘ஆக்ட்’ பண்ணச் சொல்றேன் ” என்றான் உல்ப்.
அவ்வளவுதான் ஜக்குவுக்குக் கேட்டது. பிறகு அவர்கள் போய்விட்டார்கள். ஜக்கு தன் அறைக்குள் நுழைந்தான். முதலில் போட்ட பிளான்படியே விளக்கைப் போட்டுக்கொண்டு ஒரு தடவை எல்லாவற்றையும் படித்தான். அதை நந்து நடித்தானோ, அவவளவுதான்; எல்லாரும் அவனைப் பட்டிக்காட்டு ஏமாளி என்று பரிகாசம் செய்வார்கள். அதுகூடப் பரவாயில்லை. அந்த ஏமாளியாக ஜக்குவையே வைத்துக்கொண்டுதான் எழுதியிருக்கிறார்கள்.
‘நந்துவைப் போய்ச் சந்தேகித்தேனே, பாவம்! அவனுக்கும் எனக்கும் மன ஸ்தாபம் ஏற்படுத்த இந்தப் பயலுகள் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்திருக்கிறார்கள்! இவர்களைப் பதிலுக்குப் பதில் அவமானப் படுத்தாவிட்டால் நான் ஜக்கு இல்லை’ என்று மார்பைத் தட்டிக்கொண்டான். பேனாவும் காகிதமும் எடுத்து வைத்துக்கொண்டு எதையோ எழுதுவதில் ஒரே மூச்சாக ஈடுபட்டான். அவன் அன்று தூங்க ஆரம்பித்தபோது சரியாகக் கிழக்கு வெளுத்துவிட்டது.
காலையில் நந்து அவனைப் புரட்டி எழுப்பி, “என்னடா, இன்னும் தூங்குகிறாய்?” என்றான். ஜக்கு கண் விழித்ததும் நந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீதாண்டா உண்மைச் சினேகிதன். உன்னைப் போய் நான் சந்தேகப்பட்டேனே. என்னை மன்னிச்சுட மாட்டாயா?” என்று கேட்டான்.
நந்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஜக்கு அவனிடம் இரவு நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொனனான். கடைசியாக, “நந்து, நந்து! நான் சொல்கிறபடி கேட்டாயோ, அவனுக முகத்தில் கரியைப் பூசலாம்! என்ன சொல்றே?” என்றான் ஜக்கு.
“ஓ, நான் ரெடி!” என்றான் நந்து.
ஜக்கு குதி குதியென்று குதித்தான். பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அரைமணி நேரம்போலத் திட்டம் போட்டார்கள். நந்து எழுந்து போகும்போது, ‘நீ கவலைப் படாதேடா, ஜக்கு! நான் பார்த்துக்கறேன்!” என்று சொல்லி விட்டு ஜக்கு கொடுத்த கையெழுத்துப் பிரதிகளுடன் வீட்டுக்குச் சென்றான்.
மத்தியான்னம் ஜக்கு வாசற்படியில் உட்கார்ந்து மாமிக்கு விளையாட்டுச் சினிமா காட்டிக்கொண் டிருந்தான். ஒரு சேமியா அட்டைப் பெட்டியின் நடுவில் ரூபாய் அளவுள்ள பூதக் கண்ணாடியைச் செருகியிருந்தான். பின்புறத்து அட்டையில் ஒரு பிலிம் அளவுக்குச் சதுரமாய் வெட்டிப் பிலிம் சுருளை மாட்டி யிருந்தான். எதிரே நாலுபுறமும் நீலத் துணியால் மறைத்த இருட்டறை. நடுவில் படம் விழும்படி ஒரு வெள்ளைத் துணி. பூதக் கண்ணாடியில் சூரிய பிம்பம் விழும்படி வெயிலில் ஒரு கண்ணாடியைச் சாய்த்து வைத்தான். அவ்வளவுதான்; எதிரே படம் பெரிதாகத் தெரிந்தது. ஆனால் சிறிது மங்கலாகத்தான் இருந்தது.
மாமி இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். “என்னடா ஜக்கு! பிலிமைத் தலைகீழாக வச்சிருக்கயே?” என்றாள்.
“இல்லாட்டா படம் தலைகீழாக விழும், மாமி!” என்றான் ஜக்கு. அவன் திரும்பிப் பார்ததபோது உல்பும் சோனியும் நந்துவின் வீட்டுக்குள நுழைவது தெரிந்தது. நந்து மாடியில் தன் அறையில் நின்று கொண்டு, ஜன்னல் வழியாக ஜக்குவுக்கு மட்டும் தெரியும்படி கையை வீசிக காட்டினான். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘எல்லாம் ரெடியாகிவிட்டது’ எனபதுதான். ஜக்கு மறுபடி விளையாட்டுச் சினிமாக் காட்டுவதில் ஈடுபட்டான். மாமிக்கு அவன் ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டினான். “பாட்டரி விளக்கை எடுத்துக்கொள்ளேன்” என்றாள் மாமி. “அந்த வெளிச்சம் போதாது மாமி” என்றான் ஜக்கு.
அப்போது மணி மூன்று. நந்து, உல்ப், சோனி மூவரும் ஜக்குவைப் பார்க்க வந்தார்கள்.
“அடே ஜக்கு! நாங்கள் எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு எங்க கிளப்பிலே ஒரு டிராமா போடப்போகிறோம். நீ அதற்கு அவசியம் வரணும். வரதோடு மட்டுமல்ல; கொஞ்சம் ‘ஹெல்ப்பும் செய்யணும்” என்றான் நந்து.
ஜக்கு ஒன்றுமே தெரியா தவனைப் போல, “டிராமாவா? அடேடே! நீயும் அதிலே ‘ஆக்ட்’ பண்ணப் போறயா? டேய். சொல்லவே யில்லையே நீ!” என்றான்.
“ஆக்ட் பண்ணப்போறானா? அவனுடைய பாகத்தையெல் லாம் தலைகீழாக்கூடச் சித்தே முந்தி ‘ஆகட்’ பண்ணிக் காட்டிப்பிட்டான். இல்லையாடா, உல்ப்?” என்று கூவினான் சோனி.
“உனக்குக்கூட ஒரு பார்ட் கொடுத்திருப்போம். ஆனா நீ ஊருக்குப் போயிடுவியோ என்னமோன்னு கொடுக்கல்லை” என்றான் உல்ப்.
‘உல்ப்’ என்றால் அசல் ‘உல்ப்’ மாதிரிதான் அவன் இருந் தான். அவன் செம்பட்டை மயிரும் பூனைக் கண்ணும் புலிப் பல்லும்…அசல் ஓநாய்தான்!
ஜக்கு அவனை மனசுக்குள் கறுவிக்கொண்டே, “நான் அவசியம் வரேன், அஞ்சு மணிக்குத்தானே? நாலரை மணிக்கே வந்துடறேன்! போதுமா!” என்றான்.
மணி நாலரை என்றால் டாண் என்று நாலரை மணிக்கெல்லாம் ஜக்கு கிளப்பில் ஆஜரானான்.
சிறிசும் பொடிசுகளுமாக முன்வரிசையில் பத்துப் பதினைந்து குழந்தைகள் மட்டுந்தான் இருந்தார்கள். நந்து ‘கிரீன் ரூ’மிலிருந்து வெளியே எட்டிப் பார்த்து, “அடேய் ஜக்கு! அடேய்! இங்கே வாயேன்!” என்று கூப்பிட்டான். அப்போது அவனோடு உல்பும் இருந்தான்.
“வந்து நீ ‘ஹெல்ப்’ பண்ணணும்னு மத்தியான்னமே சொன்னேனோல்லியோ? நீ பாட்டுக்கு நின்றுகொண் டிருந்தால் என்னடா அர்த்தம்?” என்று கோபித்துக்கொண்டான் நந்து. கோபத்தினால் அவன் முகம் நிஜமாகவே சிவந்து கொடுத்தது.
“பின்னே என்னடா பண்றது? ஒரு வேலையும் எனக்கு இல்லையே?” என்றான் ஜக்கு.
“என்னடா இது? வேலையா இல்லை? இதோ பார், டிக்கெட் விற்கிறது! அதுவே வேண்டாம்; ‘கேட்’டிலே நில்லேன். பிரஸ், காம்ப்ளிமென்டரி பார்த்து உள்ளே விட்டு டிக்கெட்டைச் சோதனை பண்ணி அனுப்பக் கூடாதா? இதுலே என்னடா அகௌரவம் வந்துடும் நமக்கு?” என்றான் நந்து.
“சரி; இவ்வளவுதானே? அகௌரவத்துக்காகச் சொல்லல் லேடா. ஏதாவது தப்பு வந்துட்டா?”
“அப்படி வந்தா வந்துட்டுப் போகட்டும். இந்த வசூலை எல்லாம் நாம்பதானே எடுத்துக்கப் போறோம். ஒண்ணு ரெண்டு போனாத்தான் போயிட்டுப் போகட்டுமே” என்றான் நந்து.
உல்ப் பேசுவதற்கே அவர்கள் இடம் கொடுக்கவில்லை. முதல் மணி அடித்தாகிவிட்டது! ஜக்கு ‘கேட்’டுக்கு ஓடினான்.
ஒரு பத்துப் பதினைந்து பத்துப்பைசா டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. வெளியில் பையன்களுடைய கூட்டம். ஒன்றிரண்டு பெரியவர்கள், குழந்தைகள் நடிக்கப் போவதைப் பார்க்க வந்தார்கள்.
இரண்டாவது மணி அடித்தாகிவிட்டது!
புக்கிங் கவுன்டரில் டிக்கெட்டே விற்பனை ஆகவில்லை. ‘உல்ப்’ மட்டும் உள்ளே போய் விநாடிக்கு ஒரு தடவை, ‘எவ்வளவடா விற்றது?’ என்று கேட்டுக்கொண் டிருந்தான். விற்பனை முதலில் ஆனது தான். பிறகு ஆகவேயில்லை. ஆனால் உள்ளே நேரம் ஆக ஆகக் கூட்டம் மட்டும் அதிகரித்துக் கொண்டே யிருந்தது.
“என்னடா விற்பனை இல்லேங்கறே? இடமே போறாது போல் இருக்கேடா கூட்டம்?” என்று ‘புக்கிங் கிளார்க்’ பையனிடம் வந்து உறுமினான் உல்ப்.
“என்னமோ தெரியல்லியே!” என்று அந்தப் பையன் கையை விரித்துவிட்டான்.
டண், டண், டண்… மூன்றாவது மணி!
உல்ப், கிரீன் ரூமூக்குப் போய்விட்டான், வேஷம் போட்டுக் கொள்ள. அவனுக்கு ஹெட்மாஸ்டர் வேஷம்! மணி ஐந்தேகால் ஆகியும் ஸீன் இழுக்கவில்லை. கூட்டம் நெரிசலாய் இருந்தது. ஒரே விசில் சத்தமும் சிரிப்பும் கை தட்டலும் ரகளைப் பட்டன.
இதற்குள் ‘கோரஸ்’ ஆரம்பமாயிற்று. இருந்தாற்போல் இருந்து வாசல் கதவு அப்படியே திறந்துகொண்டது. அணை உடைந்து வரும் வெள்ளம்போல வெளியில் நின்ற அத்தனை பேரும் டிக்கெட்டே வாங்காமல் உள்ளே நுழைந்துவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட உல்ப் தன்னை மறந்து பாதி வேஷத்துடன் வெளியில் வந்து, “ஜக்கு, ஏ ஜக்கூ!” என்று கர்ஜித்தான். பையன்கள் எல்லாரும் ‘கொல்’ என்று சிரித்துக் கேலி செய்யவே அவமானம் தாங்காமல் அவன் உள்ளே போய்விட்டான். ஜக்குவோ கதவைத் திறந்துவிட்டு ஒரு கோடியில் நின்று சிரித்துக் கொண் டிருந்தான். இதற்குள் ஸீன் இழுத்தாயிற்று.
முதல் ஸீனில் பட்டிக்காட்டு ஏமாளியைக் கூப்பிட்டு ஹெட்மாஸ்டர், “அடே ஏமாளி, எந்த ஊரடா உனக்கு?” என்று கேட்கவேண்டும். பட்டிக்காட்டுப் பையன், “அடைஞ்சான் மடம், ஸார்” என்பான். உடனே இந்தப் பதிலைக் கேட்டுத் தந்திரக்காரப் பையனாக நடிக்கும் சோனியும் அவன் கோஷ்டியும் கைதட்டிக் கேலி செய்யவேண்டும். பட்டிக்காட்டான் தலையைச் சொறிந்து கொள்வான்.
முதல் ஸீன் ஆரம்பமாயிற்று.
ஹெட்மாஸ்டர் : அடே ஏமாளி, எந்த ஊரடா உனக்கு?
பட்டிக்காட்டு ஏமாளி: நீங்க பிறந்த ஊருதான், ஸார்!
ஹெட்மாஸ்டர் இதைக் கேட்டுத் திருதிருவென்று விழித்தார். தந்திரக்காரப் பையன் தலையைச் சொறிந்துகொண்டான். இரு வரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள். சபை கலகலத் துப் போய்விட்டது. “அடே ஹெட்மாஸ்டர் ‘டயலாக்’ கைக் கோட்டை விட்டுட்டாருடோய்!” என்று ஒரு மூலையிலிருந்து சத்தம் வந்தது. “ஆமாண்டோய்!” என்று பதில் ஆரவாரம் எழுந்தது. ஒரே கலாட்டாத்தான்! ஸீனை அத்துடன் மூடிவிடும் படி யாகிவிட்டது.
ஸீனுக்குப் பின்புறம் உல்ப் ஆத்திரத்துடன் நந்துவிடம் உறுமினான். “என்னடா இது! நாங்க கொடுத்த பாடத்தைப் பேசாமல் வேறு என்னவோ வந்து பேசறே?”
சோனி நடுவில் குறுக்கிட்டு, “மத்தியான்னம் நடந்த ஒத்திகையில் சரியாய்ச் சொன்னாயே; இப்ப மட்டும் என்ன தம்பி? இது என்ன ரிஹர்ஸலா?” என்றான்.
“டேய், எனக்கு மறந்து போயிடுத்துடா! சரி சரி; அடுத்த ஸீனிலே பாரேன்” என்றான் நந்து.
அடுத்த ஸீன் என்ன? இரவு முழுவதும் விழித்து ஜக்கு எழுதியதை நந்து பேசலானான். எல்லாமே தலைகீழ்ப் பாடமாய் இருந்தது. சோனியும் உல்பும் ஆத்திரம் தாங்கமாட்டாமல் குதித்தார்கள். ‘போடா போ! டிராமா நன்னாயிருக்க வேண்டி யது தானே? நான் என்ன பேசினா உனக்கென்ன?” என்றான் நநது.
“டிராமா ரொம்ப ஜோராய் இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிறாடா. நீ உன் இஷ்டப்படியே பேசுடா!” என்றான் ஜக்கு, உள்ளே வந்து. அவன் முகத்தில் குறும்புத்தனம் கூத்தாடியது.
உல்ப் ஒரே பாய்ச்சலாக மேடையில் ஸீனுக்கு முன்பாக வந்தான். “சகோதரர்களே! இத்துடன் ஹாஸ்ய நாடகம் முடிந்து விட்டது” என்று கூறிவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விசித்து விசித்து அழுதான். வெளியே தாங்கமுடியாத கூச்சலும் அட்டகாசமும் மேடையைப் பிளந்தன. “டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடு!” என்ற கூக்குரல்!
பிறகு என்ன நடந்தது தெரியுமோ? ஜக்கு மேடையில் தோன்றினான். “அந்த ஹெட்மாஸ்டருக்கு மாற்றலாகிவிட்டது. இனி அடுத்த ஸீன் முதல் புது ஹெட்மாஸ்டர் வரப்போகிறார்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். சபை ஓய்ந்தது.
டிராமா அன்றைக்குப் பிரமாதத்திலும் பிரமாதமாக நடந்து முடிந்தது என்பதற்குக் கேட்பானேன்!
‘ஜக்குவுக்கு-ஜே!’
‘நந்துவுக்கு-ஜே!’ என்ற கோஷங்களுடன் நாடகம் இனிது முடிந்தது.
– தொடரும்…
– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.