கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 9,762 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1. பட்டணம் போகிறான் | 2. பட்டணத்தில் | 3. மேலே பறக்கிறான்

ஜக்கு மயிலாப்பூரிலுள்ள தன் மாமாவின் வீட்டில் மாடி அறையில் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தபோது டெலிபோன் மணி கிணு கிணு என்று ஒலித்தது. ஜக்கு எழுந்து உட்கார்ந்தான். இதுவரையில் அவன் டெலிபோனில் பேசியதே இல்லை. பட்டணத்தில் பெரிய பெரிய ஆபீஸ்களிலும் பெரிய பங்களாக் களிலும் வியாபார ஸ்தலங்களிலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள இந்த டெலிபோன் உபயோகப்படுகிறது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் பேசினது மட்டும் இல்லை. டெலிபோன் மணி விடாமல் கிணுகிணுக்கவே அவன் எழுந்திருந்து Kஸீவரைக் கையில் எடுத்தான். எடுத்ததும், “யாரது?” என்று கணீரென்று கேட்டான்.

“ஹல்லோ ! பேசுகிறது யார், ஜக்குதானே?” என்று பதில் வந்தது.

ஜக்குவுக்குத் தன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும் ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.

“ஆமாம், ஜக்குதான் பேசறேன். அங்கே பேசறது யார்?” என்று திருப்பிக் கேட்டான்.

“ஊரிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வந்ததற்காக உன் னிடம் உன் அப்பா பேசவில்லை; சரிதானே!”

ஜக்கு பதில் சொல்லாமல் திகைத்தான். பேசினது ஏதோ தெரிந்த குரல்போல இருந்தது. யாராக இருக்கும் என்று அவன் யோசித்தான்.

“ஹல்லோ ஜக்கு! உன்னுடைய அப்பா இன்றைக்கு ராத்திரி ஊருக்குப் போகப் போகிறார். இல்லையா?”

“ஆமாம்” என்றான் ஜக்கு, சுருக்கமாய்.

“நீ ஒரு வாரம் கழித்துத்தான் தனியாகப் போகப் போகிறாய். அதுவும் உண்மைதானே?”

“ஆமாம்.”

“உன்னிடம் பேசாவிட்டாலும் உன் செலவுக்காக உன் அப்பா உனக்குப் பணம் கொடுத்தாரே, எவ்வளவு?”

ஜக்கு சட்டென்று, “பத்து ரூபாய்” என்றான். இதைக் கேட்டதும் அந்தப் பக்கத்தில் பேசிய குரல், கடகடவென்று சிரித்தது.

“அடேய் ஜக்கு, பொய்யா சொல்கிறாய்? நான் சொல்லட்டுமா எவ்வளவு என்று? ரூ.25/53! சரியாக இருக்கிறதா?”

ஜக்குவுக்குப் பேச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அப்பா முதலில் இருபத்தைந்துதான் கொடுத்தார். எல்லாம் ரூபாய் நோட்டுக்கள். அதனால் எதற்கும் அவனிடம் சில்லறை இருக் கட்டும் என்று கையிலிருந்த ஐம்பத்து மூன்று காசையும் கொடுத்து விட்டார். இதெல்லாம் இந்தக் குரலுக்கு எப்படித் தெரிந்தது. ஜக்கு ரிஸீவரைக் கீழே வைத்துவிடலாமா என்று நினைத்தான். அவனுடைய /தைரியமெல்லாம் பறந்துவிட்டது. என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்று அசட்டுத் துணிச்சலுடன், “நீங்கள் சொன்னது சரியாய் இருக்கு. நான் முதல்லே எண்ணிப் பார்க்கலே” என்றான். மறுபடியும் கடகடவென்று சிரிப்பு.

“டேய் ஜக்கு, ஜாக்கிரதை! இது பட்டணம். ஏதாவது இங்கே வந்து உன் தஞ்சாவூர் வாலைக் காட்டினாயோ, பார்த்துக் கொள், மரியாதையாக அவசியமான இடங்களைப் பார்தது விட்டு நல்ல பையனாக ஊருக்குப் போய்ச் சேர வேண்டும்” என்றது குரல்.

“சரி-ரொம்ப சரி; நீங்க யாரு தெரியலியே?” என்றான் ஜக்கு. அடுத்த நிமிஷம் டெலிபோன் சத்தம் டப்பென்று நின்றுவிட்டது; பதில் இல்லை. ஜக்கு ரீஸிவரைக கீழே வைத்து விட்டு வாசலை ஒட்டிய ஜன்னல் பக்கம் வந்து நின்றான். எதிர்ப் பங்களா வாசலில் நின்று இந்த ஜன்னலையே பார்ததுக்கொண் டிருந்தான் ஒரு பையன். காலை முதல் அவன் இப்படி அடிக்கடி தன்னையே பாாப்பதைக் கவனித்து வந்தான் ஜக்கு. அந்தப் பையன் ஜக்குவைக் கீழே வரும்படி கை ஜாடை காட்டி அழைத்தான்.

ஜக்குவுக்கு இது வித்தியாசமாகப் படவில்லை. ஏனென்றால் அந்தப் பையனுக்கும் அவன் வயசு தான் இருக்கும். அவன் சின்னதாக ஒரு சைக்கிள் வைத்திருந்தான். அவன் வீட்டு வாசலில் ஓா ஊஞ்சல் பலகை தொங்கிக்கொண் டிருந்தது. பந்து விளையாட விசாலமாய் இடம் இருந்தது. இப்படி ஒரு பையனுடைய சிநேகம் இருந்தால் எவ்வளவு நல்லது என்று அவன் எண்ணி யிருந்தான். இப்பொழுது அவனாக வலுவில் கூப்பிட்டதும் ஆனந்தப்பட்டுக் கீழே இறங்கி ஓடினான்.

அவன் வாசலில் இறங்குவதும் அவனுடைய மாமா மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்ததும் ஒன்றாய் இருந்தன.

“எங்கேடா ஓடுகிறாய்?” என்று கேட்டார் மாமா. ஜக்கு பதில் சொல்லவில்லை. அதற்குள் அந்தப் பையன் வந்து, “நான் தான் ஸார், அவனைக் கூப்பிட்டேன்” என்றான்.

ஜக்குவின் மாமா சிரித்துக்கொண்டே, “அடே, நல்ல ஜோடி தாண்டா நீங்கள்! ஜக்கு, இவன் நந்து! பேஷ், பேஷ், பெயர்கூட இரண்டு பேருக்கும் மூன்று எழுத்துக்கள் தாண்டா! ஜக்கு! இனிமே உன் பாடு வேட்டைதான். நீ பார்க்க வேண்டிய இடமெல்லாம் வந்து சுற்றிக் காட்ட நந்து இருக்கான். அடி சக்கை!” என்றார்.

ஜக்குவும் நந்துவும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள். இதையெல்லாம் பின்புற வராந்தாவில் நின்ற ஜக்குவின் அப்பாவும் பார்த்துக்கொண் டிருந்தார்.

வெகு சீக்கிரமே நந்துவும் ஜக்குவும் தோள்மேல் கை போட்டுக்கொண்டு ஊஞ்சலாட ஆரம்பித்தனர். இரவு அப்பா ஊருக்குக் கிளம்புகிற சமயத்தில் ஜக்கு வந்துவிட்டான். சாப்பிட்டு விட்டு அவர் போனதும் ஜக்குவும் படுத்துக்கொண்டான். டெலிபோன் பேச்சு, அந்தக் கடகடச் சிரிப்பு. அப்புறம் நந்து வுடன் ஒரு நிமிஷத்தில் சிநேகமானது’, ஊஞ்சல் ஆட்டம் இவற்றையெல்லாம் மாறி மாறி எண்ணிக்கொண்டே தூங்கிப் போனான்.

மறுநாள் காலையில் ஜக்கு காபி சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்ததும் நந்து எங்கோ புறப்படத் தயாராய் டிரஸ் பண்ணிக் கொண்டு நின்றதைப் பார்த்தான்.

“என்னடா ஜக்கு! இன்னிக்குக் குடியரசு நாள். தெரியாதா உனக்கு? வருவதானால் என்னோடு நீயும் டிரஸ் பண்ணிக் கொண்டு கிளம்பு. ஒரு சுத்துச் சுத்திவிட்டு வரலாம்” என்றான்.

ஒரே நொடி தான். மாமியிடம் நந்துவோடு போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்துவிட்டான் ஜக்கு.

“முதல்லே எங்கே போகலாம்?” என்று கேட்டான் நந்து.

“முதல்லே டவுனுக்குப் போய் அப்படியே ஹார்பருக்குப் போ வோமடா!” என்றான் ஜச்கு. முதல் காரியமாய் இதுவரை பார்க்காத ஹார்பனரயும், அங்கே வரும் கட்டலையும் பார்க்க வேண்டும் என்பது தான் அவன் ஆசை.

“சரி; ஆனால் அங்கே நம்மையெல்லாம் உள்ளே விட மாட்டானடா!” என்றான் நந்து.

“ஓஹோ! அதையுந்தான் ஒரு கை பார்த்துடலாமே! எப்படியாவது உள்ளே போறதா ஒரு பிரமாதம்?” என்றான் ஜக்கு, கன அலட்சியமாய். சொல்லும்போது அலட்சியமாய்ச் சொல்லி விட்டானே தவிரச் சொன்னவுடன் திடீரென்று, ‘தஞ்சாவூர் வாலைக் காட்டினாயோ, பார்த்துக்கொள்’ என்று யாரோ டெலி போனில் கூறிய விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அச்சத்தை நந்துவிடம் காட்டிக்கொள்ளாமல், “சரி, புறப்படு வோமா?” என்று சொல்லிக் கிளம்பினான்.

பஸ்ஸில் ஏறி ஹார் பருக்கு வந்து சேர்ந்தார்கள். ஊரில் பையன்களிடம் வெறும் சவடால் அடித்துவிட்டு வந்திருந்தான். ஆனால் இன்றைக்கு உண்மையாகவே அவன் ஹார்பருக்கு வந்து விட்டான். இதை நினைக்கும்போது அவனுக்கு ரொம்பப் பெருமையாய் இருந்தது.

ஆனால் நந்துவையும் அவனையும் அங்கே நின்ற காவற்காரன் உள்ளேவிட மறுத்துவிட்டான்.

ஜக்குவின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. பார்க்காமல் திரும்புவதா என்ற எண்ணத்தினால் மூளை பரபரவென்று வேலை செய்தது.

டக்கென்று மணிபர்ஸைத் திறந்தான். பிறகு டைரியை எடுத்தான். இதையெல்லாம் அந்தக் காவற்காரன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

“ஏம்பா, டெலிபோன் எங்கே இருக்கு?” என்று ஜக்கு அவனைப் பார்த்துக் கேட்டான்.

காவற்காரனுக்கு யோசனையாகி விட்டது. பையன்கள் யாரோ உத்தியோகஸ்தர் வீட்டுப் பிள்ளைகள் போல் இருந்தார்கள். டெலிபோனில் இருக்கிறவர்களைக் கூப்பிட்டு ஏதாவது சொன்னால் என்ன செய்வது என்று நினைத்து, “தம்பிகளா! உள்ளே யாரைப் பார்க்கப் போறீங்க?” என்று கேட்டான்.

“அதெல்லாம் உனக்கென்ன? நீதான் உள்ளே விடமாட்டேன் என்கிறாயே!” என்றான் ஜக்கு ஜம்பமாய்.

“நான் எப்போ சொன்னேன்?” என்றான் காவற்காரன்.

“அப்போ உள்ளே விடு; நாங்கள் போய் எங்கப்பாவைப் பார்த்துவிட்டு உடனே வந்து விடுகிறோம்” என்றான் ஜக்கு. நந்து ஒன்றும் பேசாமல் நின்றுகொண் டிருந்தான்.

காவற்காரன் பார்த்தான். ‘சரி, சிறு பிள்ளைகள்! அப்புறம் ஒன்று கிடக்க ஒன்று வந்துவிடப் போகிறது’ என்று ஜக்குவைப் பார்த்து, “ஜல்தியாய்த் திரும்பிடணும், தெரியுமா?” என்றான்.

ஜக்கு, “ஓ! ஜல்தியாய்த் திரும்பிடுவோம்” என்றான்.

அடுத்த நிமிஷம் கப்பல் நிற்குமிடத்துக்கு வந்து நின்றார்கள். அப்பொழுது ‘ஜல்-ஜல்’ என்ற பிரயாணிக் கப்பல் கரையோரத் தில் நின்றுகொண் டிருந்தது. ஒரே மூவர்ணக் கொடிகளாலும் தோரணங்களாலும் கப்பலை அலங்கரித்திருந்தார்கள். அடே யப்பா, எவ்வளவு பெரிய கப்பல்! எவ்வளவு உயரம்!

ஜக்குவும் நந்துவும் பிரமித்துப் போய் நின்றார்கள். ‘இந்தக் கப்பலை யார் கட்டினார்களோ! எங்கேயிருந்து இது வந்ததோ! எங்கே போகப் போகிறதோ!’ – ஜக்குவுக்கு இந்த மாதிரி நினைவு கள் எழுந்தன. கொஞ்ச தூரமாவது இந்தக் கப்பலில் பிரயாணம் செய்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

அடுத்த கணம் கப்பலின் தட்டுக்கு ஏறும் படிகளில் கால் வைத்து நின்றான் ஜக்கு.

“டேய், யார் அது?” என்று ஒரு குரல் அவனைப் பார்த்து அதட்டியது.

ஜக்கு திரும்பிப் பார்த்தான். “இறங்கு கீழே!” என்றான் அங்கே வந்த ஆள்.

“ஏன்?” என்றான், ஜக்கு பயப்படாமல்.

அதற்குள் பளபளவென்று பொத்தான்களும், சமுத்திர நீலத்தைத் தோற்கடிக்கும் நீலக் கோட்டும், அழகான தொப்பி யும் அணிந்த ஓர் உத்தியோகஸ்தர் அவன் எதிரே வந்து நின்றார். இவர்தான் கப்பல் காப்டன் போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு தைரியமாய், ”காப்டன், பாருங்க காப்டன், ஏறப் படாது என்கிறான் இவன்!” என்றான் ஜக்கு. நந்து கீழே போய் விட்டான்.

அவர்தான் காப்டனோ என்னவோ! ஜக்கு அப்படித்தான் அவரைக் கூப்பிட்டான். அவர் அவனை மேலும் கீழும் பார்த்து, “ஹூ யூ?” என்றார் இங்கிலீஷில்.

“ஜக்கு! ஜகந்நாத்” என்றான் ஜக்கு.

“எங்கே வந்தே?” என்றார் காப்டன். இங்கிலீஷில் தான் பேசினார்; ஜக்குவுக்கு இந்த இங்கிலீஷ் எல்லாம் புரியாதா, என்ன? ‘கப்பல் டெகொரேஷனைப் பார்க்க!” என்றான்,

“ஓ! யார் உங்க அப்பா?”

“கிருஷ்ணமூர்த்தி?”

“விச் கிருஷ்ணமூர்த்தி? போர்ட் போர்மென், கிருஷ்ணமூர்த்தி?”

“எஸ், எஸ்!”

காப்டன் அவன் முதுகைத் தட்டினார். “ஓடு, பாத்துட்டு உடனே திரும்பிடு; இன்னிக்குப் பத்திரிகை நிருபர்கள் வருகிறாங்கோ! அதற்குள்ளே திரும்பிடணும்” என்றார் தமிழில்.

“அடே நந்து, வாடா!” என்று கூப்பிட்டான் ஜச்கு. நந்து அங்கே இருந்தால் தானே? பயந்துபோய் ஒரு மூலையில் நின்று பட்டணத்தில் கொண்டிருந்தான். ஜக்கு கையைக் காட்டிக் கூப்பிட்டும். “நீ பார்த்துவிட்டு வா! நான் இங்கேயே நிற்கிறேன்” என்றான்.

ஜக்கு போனான் போனான், போனது தான். மணி பன்னி ரண்டு ஆகிவிட்டது. நந்துவுக்குப் பசி வயிற்றைக் கிள்ளிற்று. எவ்வளவு நேரம் அவன் தனியாக மொட்டு மொட்டு என்று நிற்பான்! கப்பலைப் பார்த்தபடியே நின்று விழித்துக்கொண் டிருந்தான். திடீரென்று கப்பல் நடுவில் ஒரு வெளிச்சம் தெரிந் தது. ஒரு ஜன்னல் திறந்திருந்தது; அதன் வழியாக ஜக்கு எட்டிப் பார்த்துககொண் டிருந்தான். கையில் ரொட்டியை வைத்துத் தின்றுகொண்டே, “டேய் நந்து! அங்கேயே நிற்கிறாயே, வாடா!” என்று கூப்பிட்டான்.

அந்தச் சமயத்தில் வாசல்புறமிருந்து ஒரு கூட்டம் வந்தது. வெள்ளை வெளேரென்று வேஷ்டி, சட்டை உடுத்துக் கொண்டு சிலரும், தடபுடலாகக் கப்பல் யூனிபாரம் அணிந்த சிலரும், போலீஸ்காரர்கள் சிலருமாக வந்து கொண் டிருந்தார்கள். நந்து ஒரு மூலையில் உடனே பதுங்கிக்கொண்டான். ஜக்கு மட்டும் பயப்படாமல், ‘ஹி, ஹி’ என்று சிரித்தவண்ணம் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது கூட்டத்திலிருந்து காமிரா வைத்துக்கொண் டிருந்த ஒருவர் முன்னால் வந்தார். கப்பலின் மேல்தளத்தில் மாலுமிகள் அணிவகுத்து நின்றதை அவர் போட்டோ பிடிக்க லானார். ஜக்கு அந்த இடத்தை விட்டு அசையவில்லை.

‘கிளிக்!’ போட்டோ எடுத்தாயிற்று. கொடியேற்று விழா முடிந்தது. ஜக்குவும் சிரித்தபடியே போட்டோவில் விழுந்து விட்டான். அது அவனுக்கே தெரியாது.

சற்றுப் பொறுத்து ஜக்குவின் தோள்மேல் யாரோ கை வைத்தார்கள். அவன் திடுக்கிட்டான். பார்த்தால் முதலில் அதட்டிய காவற்காரன்.

“இங்கே என்ன செய்யறே? உம்!” என்று அவன் மறுபடியும் அதட்டினான்.

வாய் முழுவதும் ரொட்டி. ஜக்குவால் பேச முடியவில்லை. அவன் ஜக்குவின் கையைப் பிடித்துப் படிகள்வரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். ஜக்கு திமிறிககொண்டே வந்தான்.

போ, இனிமே இப்படியெல்லாம் வந்து கப்பலுக்குள் உன் இஷ்டப்படி சுத்தினியோ, போலீஸ்காரனகிட்டே உன்னை விட்டு விடுவேன், போ!” என்றான் காவற்காரன். அதற்குள் காப்டன் அங்கே சிரித்துக்கொண்டே வரவே காவற்காரன் போய்விட்டான். அவர் காதில் விழும்படி ஜக்கு, ‘நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இனிமேல் போகத்தான் போறேன். அதற்குள்ளே ரொம்ப விரட்டறயே!” என்றான். காப்டனோ சிரித்தவாறே போய்விட்டார்.

நந்து இவ்வளவையும் பார்த்துவிட்டு, “அடே ஜக்கு, இனிமே போகலாண்டா வாடா” என்று கூப்பிட்டான்.

அடுத்த நிமிஷம் இருவரும் ஆனந்தமாய்க் கைகோத்துக் கொண்டு வெளியில் வந்தார்கள். ‘பார்த்தாயாடா ஜக்குவின் வேலையை! உள்ளே விடமாட்டானாம்! நம்மைக் கண்டு இந்த வாசல் காவற்காரன் அதோ ஸல்யூட் அடிக்கிறான், பார்த்தாயா? எல்லாத்துக்கும் சாமர்த்தியம் வேணும்” என்றான்.

உண்மையாகவே அவர்கள் வெளியில் வரும்போது வாசல் காவற்காரன் யாருக்கோ ஸல்யூட் அடித்துக்கொண்டுதான் இருந்தான்.

வீட்டுக்குப் போய்ச் சட்டையைக் கழற்றி வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஜக்கு மாடியில் படுத்துக் களைப்பாறினான். சாயங்காலம் ஆயிற்று. அப்போது டெலிபோன் மணி பயங்கரமாய்க் கிணுகிணுத்தது.

“டேய், ஜக்கு! ஹார்பர் போயிருந்தாயா?” ஜக்கு பயத்துடன், “ஆமாம்” என்றான். “அடுத்தபடி லைட்ஹவுஸ் போகப் போகிறாய்; இல்லையா?” “ஆமாம்” என்றான் ஜக்கு, தன்னையும் அறியாமல். “ஜாக்கிரதை!” என்றது அந்தக் குரல்.

ஜக்கு வெடவெடவென்று கைகள் நடுங்க டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்துவிட்டான்.

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *