சோளக்கொல்லை பொம்மை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,819 
 

தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார்.

இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின்சமையலறையில் இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில் கொண்டு இளவரசியின் 17ஆவது பிறந்தநாள் அன்று அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி இளவேனிலுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து வேலையாட்கள், தோழிகள், காவல் வீரர்கள் புடைசூழ, அந்த மாளிகையிலேயே தங்கிக் கொண்டாள். கதிர்கள் விளைந்து முற்றியதும் அறுவடை நடந்தது. முத்து முத்தான வெள்ளைச் சோளத்தைப் பொரித்து இளவரசி ஆசை தீர உண்டாள்.

எவ்வளவு சோளப்பொரியைத்தான் இளவரசியால் உண்டுவிட முடியும்? இளவரசிக்கு ஒரு திட்டம் தோன்றியது. பனை ஓலையில் அழகிய பெட்டிகள் செய்து அவற்றில் சோளப் பொரியை அடைத்துச் சந்தையிலே விற்க ஏற்பாடு செய்தாள். சோளத் தட்டையில் கை வேலைப்பாடுகள் மிகுந்த பொம்மைகளைச் செய்து அவற்றையும் விற்பனைக்கு அனுப்பினாள். இரண்டையும் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.

இவ்வாறாக இளவரசியும் அவளது சோளக் கொல்லையும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப் போனார்கள். அந்த ஆண்டு முழுவதும் விதைப்பது, வளர்ப்பது, அறுப்பது, விற்பது என விதம் விதமாக இளவரசிக்குச் சோளக்கொல்லையால் பொழுது போயிற்று.

சந்தைக்கு வரும் அயல்நாட்டு வணிகர்கள் மூலம் இளவரசியின் சோளப் பொரியும், சோளத் தட்டை பொம்மைகளும் பக்கத்து நாடுகளுக்கும் சென்றன. கூடவே ஓர் இளவரசி இவ்வாறு வணிகம் செய்கிறாள் என்ற விந்தைச் செய்தியும் அந்த நாடுகளுக்குப் பரவியது.

மதுரை நாட்டின் இளவரசன் இளமாறனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். முகம் தெரியாத இளவரசி மேல் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே ஓவியம் வரைவதில் திறமை சாலியான ஒற்றன் ஒருவனை அங்கு அனுப்பி வைத்தான் இளமாறன். அந்த ஒற்றன் வணிகன் வேடமிட்டு இளவரசி இளவேனிலின் மாளிகைக்குச் சென்றான். அவளுடைய அழகிய தோற்றத்தை மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டு ஓர் அழகிய ஓவியமாகத் தீட்டி மதுரைக்குத் திரும்பினான்.

இளவரசியின் 18&ம் பிறந்தநாளன்று, ஒரு பெரிய பெட்டியுடன், அவளது மாளிகைக்குள் தூதுவனாக நுழைந்தான் மதுரை நாட்டு ஒற்றன். இளவரசியை வணங்கிய அவன், ‘‘இளவரசி, எங்கள் மதுரை நாட்டின் இளவரசர் இளமாறன் தம்முடைய நட்பைத் தங்களுக்குத் தெரிவிக்க இந்த அரிய பரிசைத் தங்களுக்கு அனுப்பியிருக்கிறார். சோளக்கொல்லையால் புகழ் பெற்ற தங்களுக்கு ஏற்ற பரிசு இது. இது ஒரு சோளக்கொல்லை பொம்மை. உங்கள் சோளக்கொல்லை மேல் படையெடுக்கும் குருவிகளையும், பறவைகளையும் விரட்டியடிக்கும் பொம்மை இது. அதுவும் சராசரி பொம்மையல்ல. இது ஒரு பேசும் பொம்மை! உங்களுக்காக இது பாட்டுப் பாடும், பழங்கதைகள் கூறும், நகைச்சுவையாகப் பேசும்!’’ என்று சோளக்கொல்லைப் பொம்மையின் புகழை அடுக்கிகொண்டே போனான் அந்தத் தூதன்.

இளவரசிக்கு ஆவல் தாங்க முடியவில்லை. ‘‘ம்ம், சரி சரி, பொம்மையை வெளியே எடுங்கள் முதலில்!’’ என்றாள் பொறுமை இழந்து.

தூதுவன் சிரித்தபடியே பெட்டியைத் திறந்து அந்த ஆறடி உயரச் சோளக்கொல்லைப் பொம்மையை எடுத்து அவையிலே நிறுத்தி வைத்தான். கைகளை அகல விரித்துக் கொண்டு, கந்தல் உடை அணிந்துகொண்டு, ஒரு கூத்தாடியைப் போல் வேடிக்கையாகக் காட்சியளித்தது அந்த பொம்மை. அதைப் பார்த்ததுமே இளவரசிக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை.

தூதுவன், ‘‘ஏய் சோளக்கொல்லைப் பொம்மையே, இளவரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உன் திறமையைக் காட்டு!’’ என்று கூறியவுடன் அந்தப் பொம்மையிலிருந்து ஒரு மிடுக்கான ஆண் குரல் வெளிப்பட்டது.

அந்தக் குரல் இளவரசிக்கு வணக்கம் கூறியது. அவளைப் புகழ்ந்து பாடல்கள் பாடியது. ‘‘ஓய், ஓய் பறவைகளே ஓடிப்போங்கள்!’’ என்று மிரட்டும் குரலில் கூச்சலிட்டது. பிறகு கதை சொன்னது. நகைச்சுவையாக, நையாண்டியாகப் பேசியது.

இளவரசி இளவேனில் விழுந்து விழுந்து சிரித்தாள். அவையே கைதட்டலால் அதிர்ந்தது. இப்படி ஒரு பேசும் பொம்மையை இதுவரை யாருமே பார்த்ததில்லை.

இளவரசி, தான் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைத் தூதுவனுக்குப் பரிசாக அளித்தாள். தன் கைப்பட ஓர் ஓலையில் மதுரை இளவரசனுக்கு நன்றி தெரிவித்து மடல் எழுதி ஓலையைத் தூதுவனிடம் கொடுத்தாள்.

பிறகு இளவரசி அந்தச் சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கிவரச் செய்து தன் சோளக்கொல்லையின் நடுவே நிறுத்தி வைத்தாள். அது கூச்சலிட்டுப் பறவைகளை விரட்டி யடித்தது.

அன்றிலிருந்து இளவரசி இளவேனிலுக்கு அந்தச் சோளக்கொல்லைப் பொம்மை உற்ற தோழனாக மாறிவிட்டது. நாள்தோறும் மணிக்கணக்காக அதோடு பேசி மகிழ்ந்தாள் இளவரசி. ஆனால் அந்தச் சோளக்கொல்லைப் பொம்மை எப்படி இந்த மாதிரி பேசுகிறது என்ற ரகசியத்தை மட்டும் இளவரசியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் சொல்ல மறுத்துவிட்டது. ஆனால் இளவரசன் இளமாறனின் அறிவு, ஆற்றல், அழகைப் பற்றியெல்லாம் பெருமை பொங்க எடுத்துக் கூறியது. இதையெல்லாம் கேட்கக் கேட்க இளவரசிக்கு இளமாறனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.

ஒருநாள் சோளக்கொல்லைப் பொம்மையால் விரட்டியடிக்கப்பட்ட பறவைகளின் தலைவனாகிய சிட்டுக்குருவி சோளக்கொல்லை பொம்மையிடம் வந்தது.

அருகே வந்த சிட்டுக்குருவி, ‘‘வணக்கம் சோளக்கொல்லைப் பொம்மையே! நீ இங்கே வராதவரை எங்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இப்போது எங்கள் குஞ்சுகளெல்லாம் பட்டினி கிடக்கின்றன. எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்!’’ என்று வேண்டியது.

சிட்டுக் குருவியின் வேண்டுகோளால் மனம் இரங்கிய சோளக்கொல்லை பொம்மை இளவரசியோடு பேசி கொல்லையில் கீழே உதிர்ந்து சிதறிக் கிடக்கும் சோள முத்துக்களை மட்டும் பொறுக்கிக் கொள்ள ஏற்பாடு செய்தது. கதிர்களைக் கண்டபடி வேட்டையாடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது. பறவைகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டன.

இதற்கிடையில் தஞ்சை வளநாட்டின் பக்கத்து நாடான கும்பகோணத்தில் ஒரு கொடிய மந்திரவாதி இருந்தான். அவனுக்குத் தலைமட்டும் யானைத் தலைபோல இருக்கும். யானைத் தலை மந்திரவாதி என்றுதான் அவனை எல்லோரும் அழைப் பார்கள்.

அவன் தன் மந்திரக் கண்ணாடியில் இளவரசி இளவேனிலைப் பார்த்து அவளைக் கவர்ந்து செல்ல முடிவு செய்தான். எனவே ஒரு நாள் நள்ளிரவு, பத்து பறக்கும் யானைகளோடு வந்து இளவரசியின் சோளக்கொல்லையில் இறங்கினான்.

இதைக் கண்ட சோளக்கொல்லைப் பொம்மை, ‘‘இளவரசி, இளவரசி ஆபத்து! எதிரிகள் வருகிறார்கள், எச்சரிக்கை!’’ என்று கத்தி அனைவரையும் எழுப்பியது.

விழித்துக் கொண்ட வீரர்கள் வாட்களை உருவிக் கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால் மந்திரவாதியின் யானைப் படைக்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. இளவரசியின் சோளக்கொல்லை யானைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சோளக்கொல்லை பொம்மை பிடுங்கி வீசப்பட்டு மிதித்துத் துவைக்கப்பட்டது. மாளிகைக்குள் நுழைந்த யானைத் தலை மந்திரவாதி இளவரசியைத் தூக்கிச் சென்றான்.

மறுநாள் பொழுது விடிந்தபோது, இரை தேடி வந்த பறவைக் கூட்டம் சோளக்கொல்லையின் அழிவைக் கண்டு திகைத்தது. அப்போது, யானைகளால் மிதிக்கப்பட்டுச் சிதைந்து கிடைந்த சோளக்கொல்லை பொம்மை பறவைகளை அருகே அழைத்தது.

‘‘பறவைகளே நான்தான் மதுரை இளவரசன் இளமாறனின் ஆவி! இளவரசி இளவேனிலின் மனம் கவரவே இந்தப் பொம்மையின் உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, என் உயிரைச் செலுத்தி இங்கே வந்தேன். என் உடல், நாட்டின் எல்லையில் இருக்கும் காட்டிலே என் நண்பனால் பாதுகாக்கப் பட்டுவருகிறது. நீங்கள் பறந்து சென்று அவனிடம் செய்தியைக் கூறி என் உடலோடு அவனை இங்கே அழைத்து வாருங்கள்.’’ என்று வேண்டுகோள் விடுத்தது.

பறவைகள் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளவரசனின் நண்பனாகிய தூதுவன், இளமாறனின் உடலோடு விரைந்து வந்தான். பொம்மையிலிருந்த இளவரசனின் உயிர் அவன் உடலுக்குத் தாவியது.

இதற்குள் பெரும் படை யோடு வந்து சேர்ந்திருந் தார்கள் தஞ்சை அரசரும், மதுரை அரசரும்.

இருநாட்டுப் படைகளுக்கும் தலைமையேற்ற இளவரசன் கும்பகோணம் சென்று யானைத் தலை மந்திரவாதியின் மாளிகையைத் தாக்கினான். பெரும் போருக்குப் பின் மந்திரவாதியைக் கொன்று, இளவரசியை மீட்டு தஞ்சைக்குத் திரும்பினான் இளவரசன்.

இருவருக்கும் திருமணம் நடந்தது.

தஞ்சையில் இளவரசியின் அழிந்துபோன சோளக்கொல்லை மறுபடியும் உயிர் பெற்றது. அதன் நடுவே இப்போது அமைதியாக நின்று கொண்டிருக்கிறது பழுது பார்க்கப்பட்ட ஊமை சோளக்கொல்லைப் பொம்மை.

இப்போதெல்லாம் அது பறவைகளை விரட்டுவதே இல்லை. ஏனென்றால் அந்தச் சோளக்கொல்லை முழுவதையும் பறவைகளுக்கே பரிசாக அளித்துவிட்டாள் இளவரசி.

வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *