சேர்த்து வைக்கத் தெரியணும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 8,417 
 

புத்தகத்துக்கு அட்டை போட பிரவுன் ஷீட் வாங்கவேண்டும் என்று அப்பாவிடம் காசு கேட்டான் ராஜு. பத்தாம் வகுப்பு படிக்கும் பையன்தானே… பணத்தின் அருமை தெரியும் என்று அப்பாவும் பணம் கொடுத்தார். கடைக்குப் போய், மூன்று பிரவுன் ஷீட் வாங்கிக் கொண்டு மீதிப் பணத்தில் பஞ்சு மிட்டாய், குச்சி ஐஸ் என கண்ணில் பட்டதை வாங்கித் தின்றுவிட்டு வீடு திரும்பினான் ராஜு.

வாங்கிய ஷீட் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடப் போதவில்லை. அதனால் மீண்டும் அப்பாவிடம் பணம் கேட்டான். ‘‘இப்பதானே இருபது ரூபாய் தந்தேன், மீதிப் பணத்தை என்ன செய்தாய்?’’ என்று அப்பா கேட்க, தின்பண்டங்கள் வாங்கித் தின்றதை ஒப்புக்கொண்டான். அதைக் கேட்ட அவன் தங்கை அவனை கேலி செய்தாள். அப்பா அவனுக்குத் திரும்பவும் பணம் கொடுத்தார்.

ராஜுவைப் பற்றி அப்பாவுக்குக் கவலை உண்டாயிற்று. ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் இருந்த பழைய பவுடர் டப்பாவை உடைத்து, அதை ஒரு உண்டியல் போலச் செய்தார். அதை ராஜுவிடம் கொடுத்து ‘‘இனி வீண் செலவு செய்யாதே. நான் தர்ற பாக்கெட் மணியில் இருந்து ஒரு பகுதியை சேர்த்து வை. நீ ஒரு வருஷம் சேர்க்கும் பணத்தோட நான் மேலே பணம் போட்டு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித் தருவேன்’’ என்றார். ராஜுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. தனக்குக் கிடைக்கும் பணத்தை உண்டியலில் போட்டு வந்தான். அவ்வப்போது அதைக் குலுக்கிப் பார்த்து மகிழ்வான்.

காலாண்டுத் தேர்வு நெருங்கிக்கொண்டு இருந்தது. ஒருநாள் பள்ளி விட்டு வந்த தங்கை சோகமாக நின்றுகொண்டு இருந்தாள். ‘‘என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஹாரிபாட்டர் புத்தகம் வெச்சிருக்காங்க. எனக்கும் வேணும்’’ என்றாள் சிணுங்கலாக.

‘‘கையில பணம் இல்லை. வேணும்னா அண்ணன் கிட்டே கேட்டுப் பாரு’’ என்றார் அப்பா.

‘‘ஹாங்… ஆசை தோசை அப்பளம் வடை! நான் கம்ப்யூட்டருக்காக ஆசையா நான் சேர்த்து வைக்கிற பணம். யாருக்காகவும் அதைக் கொடுக்க மாட்டேன்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் ராஜு.

ஓரிரு தினங்கள் கழிந்திருக்கும். எங்கிருந்தோ திபுதிபுவென வேகமாக ஓடி வந்தான் ராஜு.

பரபரப்பாக உண்டியல் வைத்திருக்கும் இடத்துக்குப் போனான். உண்டியலைக் கையில் எடுத்துக் குலுக்கிப் பார்த்தான். ராஜுவின் முகத்தில் ஒரு திருப்தி பரவியது. உண்டியலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடியவன் வெறுங்கையோடு திரும்பியதைப் பார்த்தார் ராஜுவின் அப்பா.

‘‘உண்டியல் பணத்தை யாருக்கோ குடுத்துட்டு வர்றே போல இருக்கே…’’ என்றார் ராஜுவிடம்.

ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான் ராஜு.

‘‘அன்னிக்கு உன் தங்கச்சிக்கே தர மாட்டேன்னு சொன்னே. இது யாரு, உன் தங்கச்சியைவிட ஒசத்தியான ஆளா?’’ என்று கேட்டார் அப்பா.

‘‘அப்பா! தங்கச்சி பணம் கேட்டது கதைப் புத்தகம் வாங்க. ஆனா, என் ஃப்ரெண்டு குணா கவலைப்பட்டது பாடப் புத்தகம் வாங்க முடியலையேன்னு. எனக்கு சேர்த்து வைக்கிற பழக்கம் வரணும்னுதானே உண்டியல் தந்தீங்க. சேர்த்து வைக்கிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை சரியா செலவு செய்யறதும்தானே… அதைத்தான் நான் செஞ்சிருக்கேன்’’ என்றன் ராஜு. ஏதோ கம்ப்யூட்டரையே வாங்கிவிட்டவன் போல அவன் முகம் அப்போது மலர்ந்து இருந்தது.

வெளியான தேதி: 01 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *