சிங்கத்தின் அச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 3,574 
 

ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது.

அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.

வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது.

பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம்.

கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.

சிங்கம் அதன் மீது பாயத் தயாராக இருந்தது.

நரி குள்ள நரி. நல்ல தந்திரமுள்ள நரி. தெரியாத்தனமாக சிங்கத்தின் எதிரில் வந்துவிட்டது. ஆனால் அதன் மூளை உடனே வேலை செய்தது. சிங்கத்தை ஏமாற்ற முடிவு செய்தது.

“ஏ சிங்கமே! நான் யார் தெரியுமா? நான் இந்தக் காட்டின் அரசன். என்ன துணிச்சல் இருந்தால் என் எதிரில் வருவாய்?” என்று வலுவான குரலில் கேட்டது.

“ஏ அற்ப நரியே உனக்கு என்ன பைத்தியமா? இந்தக் காட்டின் அரசன் நான் தான் என்பதை யறிய மாட்டாயா? உன்னை நீயே அரசன் என்று கூறிக் கொள்ளுகிறாயே! உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று சிங்கம் கேட்டது.

“ஏ மூடச் சிங்கமே! நான் சொல்லுவதை நீ நம்ப வில்லையா? சரி என்னோடு வா. இந்தக் காட்டு விலங்குகள் என்னைக் கண்டு பயத்து ஓடுவதை நீயே உன் கண்ணால் பார்க்கலாம்” என்றது நரி.

சரி அதையும் தான் பார்ப்போமோ என்று கூறிச் சிங்கம் நரியுடன் புறப்பட்டது.

இரண்டும் சேர்ந்து காட்டைச் சுற்றின. சிங்கத்தைக் கண்டு பயந்து எதிர்ப்பட்ட விலங்குகள் ஓடி ஒளிந்தன.

அந்த மூடச் சிங்கம் எல்லா விலங்குகளும் நரியைப் பார்த்துப் பயந்து ஓடுவதாக நினைத்துக் கொண்டது. நரியிடமிருந்து தானும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடி ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டது.

நரி வெற்றி நடை போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது.

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *