ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும் – தவறினால் தண்டனை என்று கூறியிருந்தார்.
அப்படி வேலைக்குச் சேர்ந்த பையன், விடியற்காலையில் ராஜா சோதனைக்கு வந்த நேரத்தில் அசந்துபோய் தூங்கிவிட்டான்.
அப்பொழுது ராஜா, அவனுடைய உடைவாளை உருவி எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
அடுத்த நாள் படை வீரர் அணிவகுப்பு நடந்தது. அதில் அந்தப் பையனும் கலந்து கொண்டான்.
அவனிடம் உடைவாள் இருந்தது! எப்படி? – காலையில் கண்விழித்த பையன் உடைவாளைக் காணாமல் பயந்து போனான். தனது வாள் காணாமல் போனதை மறைக்க, ஒரு மரக் கத்தியைச் செதுக்கி அதை இடுப்பில் மாட்டிக் கொண்டு வந்திருந்தான்.
ராஜா அவனுடைய மரக் கத்தியை சபை அறிய தெரியப்படுத்த நினைத்தார்.
அந்தப் பையனைக் கூப்பிட்டு, வேறொரு படைவீரனைக் காட்டி, “”அதோ, அந்தப் படைவீரன் நேற்று காவல் நேரத்தில் தூங்கிவிட்டான். அவனது கையை உடனே வெட்டு…” என்றார்.
மரக் கத்தி வைத்திருந்த பையன் சற்றே விழித்தான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “”சரி, அரசே! அவன் குற்றவாளியாக இருந்தால்தான் என் வாள் அவனது கையை வெட்டும்…” என்று கூறிவிட்டு மரக்கத்தியை உருவினான். எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“”அரசே, அவன் யதார்த்தமாகத் தூங்கிய நிரபராதி. அதனால்தான் எனது கத்தி மரக்கத்தியாக மாறிவிட்டது. நீங்கள் மனது வைத்து மன்னித்தால் எனது கத்தி மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்துவிடும்…” என்று கூறி சமாளித்தான் அந்தப் பையன்.
ராஜா, அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் புரிந்து கொண்டு சிரித்தார்.
“”உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் தூங்குகிற உனக்குக் காவல் வேலை வேண்டாம். எதையும் சமயோசிதமாகச் சமாளிக்கிற மந்திரி வேலை தருகிறேன்…” என்றார்.
பையன் நிம்மதியடைந்தான்.
– இந்திராணி தங்கவேல், சென்னை. (நவம்பர் 2012)