ஒரு ஊரில் குரு ஒருவர் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் சீடர்கள் பலர் பயின்று வந்தனர். அவரிடம் பத்தாண்டுகள் படித்து முடித்தவர்கள் மட்டும்தான் தனியே குருவாக இயங்கலாம். அதுவும் சில தேர்வுகளை முடித்த பிறகுதான் குருவாக முடியும்!
இதேபோல 10 ஆண்டுகள் நிறைவுற்ற சீடர் ஒருவர் குருவைச் சந்திக்க குருவின் அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன் வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு, கையிலிருந்து குடையையும் அங்கேயே வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
உள்ளே நுழைந்ததும் குருவுக்கு வணக்கம் செலுத்தினார். அந்த வணக்கம் ஆழமானது. குருவாக இயங்க அனுமதி கேட்கும் வணக்கம் அது!
அவரைப் புரிந்து கொண்ட குரு, உன்னுடைய செருப்பை வாசலில் எந்தப் பக்கத்தில் வைத்தாய்? இடப்பக்கமா..? வலப்பக்கமா..?
சீடர் குழம்பினார்… இடப்பக்கம் …. இல்லை… இல்லை… வலப்பக்கம்….!
குரு தனது கையால் சைகை செய்தார். அந்தச் சைகைக்கு அந்தச் சீடர் குருவாக இயங்க அனுமதி இல்லை என்று பொருள்.
எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் விழிப்பாக இருப்பவரே குரு!
– ம.கவிப்பிரியா, 11-ம் வகுப்பு,
புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
தெப்பக்குளம், திருச்சி.
டிசம்பர் 2011