குட்டி யானையின் கேள்விகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 9,004 
 
 

“அம்மா! அம்மா! என்னம்மா நீ, பல்லு தேய்க்காம சாப்பிடச் சொல்ற, பல்லு தேய்க்காம சாப்பிட்டா கிருமி உருவாகாதா?’’ எனக் கேட்டது குட்டியானை கூகு.

என்னடா இது! என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு நம்ம குழந்தை இப்படி கேட்குதேன்னு ஆச்சரியப்பட்ட அம்மா யானை, “கூகு! நீ கேட்கிற இந்தக் கேள்வி நம்மைப் போன்ற விலங்குகளுக்குச் சரிப்பட்டு வராதே. இந்தக் கேள்வியே புதுசா இருக்கே. இது மனிதர்களுக்குப் பொருந்துகிற கேள்வியாச்சே’’ என்றது.

“இல்லம்மா… கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைக் குழி தோண்டி வச்சு, பிடிச்சுட்டுப் போனாங்களே அந்த மனிதர்கள், அவங்க எல்லோரும் நாள்தோறும் தூங்கி எழுந்தவுடன் ஒரு நீண்ட குச்சி போல ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு, கொஞ்சம் பசை போன்ற ஒன்றை வைத்து பற்களை நன்றாகத் தேய்த்தார்கள். தேய்த்த கொஞ்ச நேரத்தில் வாய்க்குள் இருந்து நுரை நுரையாக வந்தது. அதனை நீரைக் கொண்டு கொப்பளித்தார்கள். அதற்குப்பிறகு அவர்களின் பற்கள் மிகப் பிரகாசமாக மாறிப் பளிச்சென இருந்தது’’ என்றது குட்டியானை.

“கூகு நீ சொல்வது சரிதான். உன்னைப் பிடித்துபோன பின், நாங்கள் உன்னைத் தேடாத இடமே கிடையாது. ஆனால் எங்களின் அபயக்குரல் கேட்ட வனத்துறையினர், என்ன என்பதைப் புரிந்து கொண்டு உன்னை மீட்டு இங்கேயே கொண்டுவந்து விட்டுவிட்டனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்’’ என்றது அம்மா யானை.

“ஆமாம்மா, நீங்க சொல்றது சரிதான்’’ என்றது குட்டியானை.

“நீ சொன்னாயே.. மனிதர்கள் வைத்திருந்தது குச்சிபோல என்று, அதற்கு பெயர்ப் டூத் பிரஷ். அதாவது பல்துலக்கி. அவர்கள் அந்தப் பிரஷ்சில் பற்பசை (பேஸ்ட்) வைத்துப் பற்களை சுத்தம் செய்வார்கள். அது தேய்க்கத் தேய்க்க நுரையோடு கூடிய அழுக்குகளை வெளியேற்றும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் கிருமிகள் பற்களின் இடுக்குகளில் தங்கிப் பற்சிதைவை உண்டாக்கும். அதுமட்டுமல்ல பற்களும் பலம் இழந்துவிடும். ஆரம்பத்தில் வேம்பு, ஆலமரம் ஆகிய மரக்குச்சிகளைக் கொண்டே பல் துலக்கினர். நாளடைவில் நாகரிகம் என்ற பெயரில் இப்படி மாறிவிட்டார்கள்’’ என்றது அம்மா யானை.

“அப்படியானால் நம்மைப் போன்ற விலங்குகள் ஏன் பற்களைத் தேய்ப்பதில்லை. நமக்கு மட்டும் பற்சிதைவு ஏற்படாதா அம்மா?’’ _ கேட்டது குட்டியானை.

“கூகு! பொதுவாகவே உயிர்களின் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்துமே சுயமாகச் சுத்தம் செய்து கொள்ளக்கூடியவைதான்’’ என்றது அம்மா யானை.

“அம்மா! நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே. புரியும்படி சொல்லுங்க’’

“சரி. புரியும்படியே சொல்றேன். அதாவது கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பி, காதுகளில் உள்ள மெழுகு சுரப்பி, மூக்கில் உள்ள சிறுசிறு ரோமங்கள் மற்றும் கோழை, வாயில் சுரக்கும் உமிழ்நீர் ஆகிவற்றை சொல்லலாம்.’’

“அது சரி! இது மனிதர்களுக்குத்தானே பொருந்தும். நம்மைப் போன்ற விலங்குகளுக்கு நீங்கள் இன்னும் சொல்லவே இல்லையே அம்மா’’ என்றது குட்டியானை.

“ஆமாம். நீ கேட்டது சிறந்த கேள்வி. அதாவது, மனிதர்களின் உணவு பழக்கம் வேறு; நம்மைப் போன்ற விலங்குகளின் உணவு முறை வேறு’’ என சற்றே நிறுத்தியது அம்மா யானை.

“அய்யோ அம்மா! நீ தெளிவாகவே சொல்லமாட்டியா? எனக்குச் சரியாகவே புரியமாட்டுது’’ என்றது சற்றேக் கோபத்துடன் குட்டியானை.

“சரி! சரி! அனைத்துக்கும் கோபப்படக்கூடாது. கோபம்தான் முதல் எதிரி. சரி, புரியும்படியே சொல்கிறேன். இதற்குப் போய் கோபப்படுவார்களா? உன்னைப் போன்ற சிறுவர்களுக்கு கோபப்படுகிற பழக்கம் மிகுந்த ஆபத்தானது’’ என்றது அம்மா யானை.

“சரிம்மா. இனிமேல் கோபப்படமாட்டேன். நீங்கள் சொல்வதைப் பொறுமையாகவே கேட்டு, மனத்தில் வாங்கிக் கொள்கிறேன்’’ என்றது குட்டியானை.

“இப்போதான் நீ சமத்து. அதாவது உணவு பழக்கத்தைச் சொன்னேன் அல்லவா? நம்மைப் போன்ற விலங்குகள் இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்ணுகின்றன. பெரும்பாலும் அதில் நார்ப் பொருள்கள் அதிகமாக இருக்கும். இந்த நார்ப் பொருள்கள் உணவு உண்ணும்போதே பற்களைச் சுத்தப்படுத்தும் வேலையையும் கூடவே செய்யும்.’’

“ஓகோ! அப்படியா?!’’ என ஆச்சரியப்பட்டது குட்டியானை.

“அதுமட்டுமல்ல, நம் உடலுக்கு தேவையானது போக மீதமுள்ள கழிவுகளும் உரமாகப் பயன்படுகின்றன.’’

“ஆனால் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருள்களில் அதிக அளவு சர்க்கரைப் பொருள்கள் இருக்கின்றன. இந்தச் சர்க்கரை அல்லது மாவுப் பொருள்கள்தான் அவர்களுடைய பற்கள் சிதைவதற்கு மூலகாரணமாகின்றன. இதனால் அவர்கள் பற்களைப் பாதுகாக்க நாள்தோறும் இரண்டுமுறை பல்துலக்க வேண்டியது அவசியமாகிறது’’ என்றது அம்மா யானை.

“அம்மா! அப்போ விலங்குகளாகிய நாம் நம்முடைய இயற்கையான உணவு முறையால் பல் துலக்க வேண்டியது அவசியம் இல்லைதானே?’’ என மீண்டும் கேட்டது குட்டியானை.

“ஆமாம் கூகு’’ என்றது அம்மா யானை.

“இயற்கை உணவுகளால் இவ்வளவு நன்மையா? மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..’’ என பெருமகிழ்ச்சியில் உடலை இடதும் வலதுமாக ஆட்டி நடனமாடிக் கொண்டிருந்தது குட்டியானை

“அதனால்தான் நம் முன்னோர்கள் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியை உருவாக்கி வைத்துள்ளனர்’’ என்றது அம்மா யானை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *