ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன
பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டான்.
குருவைச் சந்தித்ததும், அவரை வணங்கினான்.
பிறகு, “”எனக்கு மோட்சம் வேண்டும்! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் குருவே!” என்று கேட்டான்.
“”அது கிடைப்பதற்கு நிறையப் பாடுபட வேண்டும்… அது உன்னால் முடியுமா?” என்று கேட்டார் குரு.
“”முடியும்… என்னால் முடியும்…” என்றான் அவன்.
“”இப்படியே கிளம்பிப் போ… ஏழு மலைகளைப் பார்ப்பாய். அவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஊர் இருக்கும். அந்த ஊரைச் சுற்றி வந்தால், உனக்கு மோட்சம் கிடைக்கும்…” என்றார் குரு.
உடனே, அந்த ராணுவ வீரன் தன் குதிரை மீது ஏறிக் கிளம்பிச் சென்றான். கொஞ்சமும் தயங்காமல் ஏழு மலைகளையும் கடந்தான். அந்த ஊரையும் பார்த்தான். அதையும் ஒரு சுற்று சுற்றினான். பிறகு திரும்பி வந்தான்.
குதிரையை விட்டு இறங்கி, “”குருவே, நீங்கள் சொன்னது போல ஏழு மலைகளையும் கடந்து அந்த ஊரையும் சுற்றி வந்துவிட்டேன்… எனக்கு மோட்சம் கிடைக்க வழி செய்யுங்கள்” என்று கேட்டான்.
குரு சொன்னார் – “”மோட்சம் கிடைக்கும்… ஆனால் உனக்கு அல்ல… உன் குதிரைக்கு கிடைக்கும். குதிரைதானே ஏழு மலைகளைக் கடந்து, அந்த ஊரையும் சுற்றி வந்தது? நீ சும்மா அதன்மீது அமர்ந்துதானே இருந்தாய்…”
குருவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் உண்மை புரிந்தது அந்த ராணுவ வீரனுக்கு!
– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. (மே 2012)