கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,396 
 
 

தாய் சொல்லைத் தட்டாத சிறுவன். “”மகனே! கூடத்திலிருக்கும் பானையிலிருந்து சிறிது கோதுமை மாவு எடுத்து வா… உனக்கு ரொட்டி சுட்டுத் தருகிறேன்,” என்றாள். பையன் கூடத்திற்கு ஓடி பானையைத் திறந்து கோதுமை மாவை எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டு வந்தான்.

அப்போது பலத்த காற்று வீசியது. அவன் தட்டில் கொண்டுவந்த கோதுமை மாவு அனைத்தும் காற்றில் பறந்து போய்விட்டது. பையன் காற்றைச் சபித்தான்.
மறுபடியும் கூடத்திற்கு ஓடித் தட்டில் மாவு எடுத்தான். வெளியில் பார்த்தான், மரங்கள் அசையவில்லை, காற்று இல்லை. தட்டுடன் வீட்டிற்குள் நுழையும்போது, முதலில் வீசியது போலவே பலமான காற்று! இம்முறையும், மாவைக் காற்று அடித்துக்கொண்டு போய்விட்டது. பையனுக்குக் கடுங்கோபம், அம்மா திட்டுவாளே என்ற பயம் வேறு.

KaatrinParisuமூன்றாம் முறையாக, காற்று இல்லாத நேரத்தில் மிகக் கவனமாக மாவை எடுத்துக்கொண்டு வந்தான். அந்த சின்னபுத்தியுள்ள காற்று, அவன் சிறுவன் என்றும் பார்க்காமல், அடாவடித்தனமாய் மாவைச் சிதறவிட்டுப் போனது.

இதனால் வெகுண்ட பையன், “”காற்றே! உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று சவால்விட்டு, அதனுடன் ஓடினான்.

மூச்சிரைக்க வெகுதூரம் வரை ஓடிவந்த பையனிடம், “”தம்பி, ஏன் என்னைத் துரத்துகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று காற்று கேட்டது.

“”நீ பறித்த மாவு அனைத்தும் எனக்கு வேண்டும். இல்லாவிட்டால் என் அம்மா திட்டுவாள்,” என்றான்.

“”புத்தி இல்லாத சிறுவனே! நான் அடித்துச் சென்ற மாவு, தூசியாய் எங்கும் பரவிக் காணாமல் போயிருக்குமே! அதை எப்படித் திருப்பித் தர முடியும்?”

“”பின் ஏன் வேண்டுமென்றே மூன்று முறை என் மாவைச் சிதறடித்தாய்?”

“”காற்றாகிய நான் வேண்டுமென்று செய்வதில்லை. மனிதர்களாகிய நீங்கள்தான் பக்குவமாய் நடந்துகொள்ள வேண்டும்.”

பையன் அழ ஆரம்பித்தான்.

“”அழாதே தம்பி! உனக்கு ஒரு மேசை விரிப்பைத் தருகிறேன்.”

“”மேசையே எனக்கில்லாதபோது, விரிப்பு எதற்கு?”

“”இது சாதாரண விரிப்பில்லை. ஒரு மாயாஜால விரிப்பு. இந்த மேசை விரிப்பைத் தரையில் விரித்து, நீ என்ன உணவுப் பொருட்களைக் கேட்டாலும் அது கொடுக்கும்.”

“”ஆச்சரியமாக இருக்கிறதே! எனக்கு மட்டும்தான் உணவு தருமா?”

“”இல்லை. நீ கேட்கும் அளவிற்கு உணவு தரும்.”

“”நன்றி காற்றே! நான் வருகிறேன்.”

மேசை விரிப்பைச் சுற்றி எடுத்துக்கொண்டு, தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

இரவு நேரம் வந்துவிடவே, எங்காவது தங்கிவிட்டுப் போகலாம் என்று யோசித்தான். வழியில் ஒரு சத்திரம் இருந்தது. அங்கே சென்றான். சத்திரக்காரனும், அவன் மனைவியும், “”தம்பி உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர்.

“”இன்று இரவு எனக்கு இங்கே தங்க இடம் கொடுக்க வேண்டும்.”

“”அதற்கென்ன? தாராளமாய் தங்கிக்கொள்.” அனுமதி கொடுத்தனர்.
சிறுவனுக்குப் பசித்தது.

“”மேசை விரிப்பே, மேசை விரிப்பே… எனக்கு பசிக்கிறது; உணவு வேண்டும்,” என்றான்.

தானாக விரித்துக்கொண்ட மேசை விரிப்பில், வெள்ளிப் பாத்திரங்களில், மீன், முட்டை, மாமிசம், ரொட்டி, பழங்கள் வந்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பயணிகளுக்கும், சத்திரக்காரனுக்கும், அவனது மனைவிக்கும், பெருத்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

பையன், அங்கிருந்த அனைவருக்கும் உணவு கொடுத்துவிட்டுத் தானும் உண்டான்.
சத்திரக்காரனின் மனைவி பேராசைக்காரி. எப்படியும் அந்த மேசை விரிப்பை அபகரித்துவிட நினைத்தாள். பையன் தூங்கும்வரை காத்திருந்தாள்.

நடுச்சாமத்தில், பையன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் தலைமாட்டில் வைத்திருந்த அந்த மேசை விரிப்பை எடுத்துக்கொண்டு, அதைப் போன்ற மற்றொரு மேசை விரிப்பை வைத்துவிட்டுச் சென்றாள்.

விவரம் தெரியாத சிறுவன், அந்தச் சத்திரக்காரியின் மேசை விரிப்பை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் பயணமானான்.

“”சொல்லாமல் எங்கே சென்றாய்?”

அம்மா கடிந்துகொண்டாள்.

“”அம்மா! இனி கவலையை விடு. இனி நமக்கு உணவிற்குப் பஞ்சமே இல்லை. அனைத்து உணவையும் தரும் அற்புத மேசை விரிப்பொன்றை காற்று எனக்குப் பரிசாக அளித்திருக்கிறது. இப்போது பார் அதன் மகிமையை,” என்றவாறே மேசை விரிப்பைத் தரையில் வைத்து, “”மேசை விரிப்பே, மேசை விரிப்பே! எனக்கு உணவு வேண்டும்,” என்றான்.

மேசை விரிப்பு விரியவும் இல்லை, அவனுக்கு உணவு தரவும் இல்லை.

காற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த சிறுவன், முதலில் காற்றை எங்கே சந்தித்தானோ, அதே இடத்திற்கு வந்தான்.

“”வா தம்பி! சவுக்கியமா?” என்று காற்று கேட்டது.

“”என்னை நலம் விசாரித்தது இருக்கட்டும். என்னை நீ ஏமாற்றிவிட்டாய். இதோ உன் மேசை விரிப்பு… எடுத்துக்கொள். என் மாவை எனக்குக் கொடு.”

“”மேசை விரிப்பை ஏன் திருப்பித் தருகிறாய்?”

“”நீயும், உன் மேசை விரிப்பும்! ஒரு முறைக்கு மேல் உணவு வரவில்லை.”
ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று காற்று உணர்ந்துகொண்டது.

“”கவலைப்படாதே தம்பி! இந்த முறை, சேவல் ஒன்றை உனக்குத் தருகிறேன். “சேவலே கூவு’ என்று சொன்னால் அது கூவும். அது கூவுவதற்கு வாயைத் திறந்தவுடன், அதன் வாயிலிருந்து பொற்காசுகள் கொட்டும்.”

“”இதுவும் மேசை விரிப்பைப் போல் மோசம் செய்துவிடாதே!”

“”நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் எடுத்துச் செல்.”

மிக்க மகிழ்ச்சியுடன் சேவலைப் பெற்றுக்கொண்டு நடந்தான் சிறுவன்.

சூது தெரியாத சிறுவன், அன்று இரவு அதே சத்திரத்தில் தங்கினான். இம்முறை, சேவல் ஒன்றைப் பையன் கொண்டுவந்திருப்பதைக் கண்ட சத்திரக்காரனின் மனைவி, இச்சேவலிலும் மகிமை இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“”தம்பி! மேசை விரிப்பைப் போல் இந்தச் சேவலும் உணவைத் தருமா?”

“இது உணவைத் தராது. ஆனால், இது கூவும்போது பொற்காசுகள் விழும்.”

“”இதை நான் நம்பமாட்டேன்.”

“”இதோ பாருங்கள்,” என்ற சிறுவன், “”சேவலே கூவு,” என்றான். சேவல் கூவியது.
என்ன ஆச்சரியம்! பொற்காசுகள் அதன் வாயில் இருந்து பொலபொலவெனக் கொட்டின.

சத்திரக்காரனின் மனைவிக்கு மெத்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

பேராசைக்காரியான அவள், இம்முறையும் அதை அபகரிக்க நினைத்தாள்.
மேசை விரிப்பைத் திருடியதுபோல, இரவு நடுநிசியில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோது, அருகில் கட்டியிருந்த சேவலைக் கவர்ந்துகொண்டு, அதேபோன்ற மற்றொரு சேவலைக் கட்டி வைத்துவிட்டாள்.

பையன் வீடு வந்து சேர்ந்தான். அன்னையிடம் அதிசய சேவல் பற்றி பெருமையுடன் கூறினான்.

“”சேவலே கூவு,” என்றான்.

அவன் பலமுறை கூறியும் சேவல் கூவவில்லை. மறுபடியும் காற்றிடம் வந்தான்.

“”ஏய் காற்றே! உன் ஏமாற்று வேலை இனியும் வேண்டாம். பிடி உன் சேவலை; எடு என் மாவை!”

வெட்டொன்று துண்டு இரண்டெனக் கேட்டான்.

“”தம்பி! கடைசியாக உனக்கு ஒரு தடியைத் தருகிறேன். நான் கொடுத்த சேவலையும், மேசை விரிப்பையும் அது உனக்குப் பெற்றுத் தரும். நீ அந்த சத்திரத்தில் தங்கியபோது தான் தவறு நடந்திருக்கிறது. தடியை யார் தொடுகின்றனரோ, அப்போது, “அடி’ என்று சொல். பிறகு பார் வேடிக்கையை.”
மூன்றாம் முறையாக பையனைப் பார்த்த சத்திரக்காரனின் மனைவியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

“”இது மந்திரத்தடியாக இருக்கும். இதுவும் நமக்குத்தான்,” என்று கற்பனை சுகத்தில் மிதந்தாள்.

நடு இரவு. பையன் அதே இடத்தில் படுத்திருந்தான். இப்போது, மனைவியுடன், சத்திரக்காரனும் சேர்ந்துகொண்டான். இருவரும் தவழ்ந்து தவழ்ந்து வந்தனர். சத்திரக்காரிதான், தடியை முதலில் தொட்டாள்.

இதுவரை தூங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்த சிறுவன், அவள் தொட்டவுடன், “அடி’ என்று கூவினான். தடி, “நொட், நொட்’டென்று சத்திரக்காரனையும், அவள் மனைவியையும் அடிக்க ஆரம்பித்தது; அவர்கள் ஓடினர்.

“”விடாதே அடி,” என்று கட்டளையிட்டான் சிறுவன்.

அந்த மாயத்தடி, இருவரையும் அடியோ அடியென அடித்தது. சுழற்றிச் சுழற்றி அடித்தது. அவர்கள் உடம்பெல்லாம் காயம். “”ஐயோ செத்தோம், செத்தோம்,” என ஓலமிட்டனர்.

“”எங்கே என் மேசை விரிப்பு? எங்கே என் சேவல்?”

“”எங்களிடம் தான் இருக்கிறது. இதோ கொண்டு வருகிறோம்.”
கொண்டு வந்து கொடுத்தனர்.

“”தடியே வா,” என்றதும், அது சிறுவனிடம் வந்தது.

அவர்கள் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

மாணவ, மணிகளே! இக்கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் நீதி என்ன?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது புரியுதா குட்டீஸ்!

– ஜூன் 25,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *