சிங்காரவனக் காட்டில் இரண்டு ஜோடிப் புறாக்கள் வசித்து வந்தன. அவை நீண்ட காலம் அந்தக் கிளையில் கூடு கட்டி வசித்து வந்தன. ஒரு நாள் பெண் புறா முட்டைகள் இட்டது. உடனே அதற்கு வழக்கமாக வரும் கவலை வந்துவிட்டது. யாராவது வேடன் வந்து தன் முட்டைகளை எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம்தான் அது. சில வருடங்களுக்கு முன் அது பல முட்டைகளை இழந்திருந்தது. ஆகவேதான் இந்த முறையும் அப்படி நடந்து விடுமோ என்ற பயம் வந்தது.
“”அன்பே! இந்த முறையும் எனக்கு நமது முட்டைகளைப் பற்றிய பயம் வந்துவிட்டது. நாம் எத்தனை காலம்தான் இப்படி தனித்தே வாழ்வது? நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் இங்கு உதவிக்கு ஓடி வருவார் யாருமில்லை. ஆகவே இங்கிருந்து யாருடனாவது நட்புக் கொள்வது நல்லது!” என்றது.
“”நீ சொல்வது சரிதான். யாருடனாவது பழகலாமென்றால் நம் இனத்தைச் சேர்ந்த யாருமே இங்கில்லையே!” என்றது. “”நம் இனம் இல்லாவிட்டால் என்ன! இங்க பருந்து, காகம், கிளி, மைனா போன்ற பறவைகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளிடம் நாம் பழகலாமே!” என்றது பெண் புறா.
மறுநாள்—
ஆண் புறா, பருந்துகள் வசிக்கும் மரத்திற்கு சென்றது. அப்பருந்துகள் புறாவை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தன. உபசரிப்பை ஏற்றுக் கொண்ட புறா, தன் எண்ணத்தை வெளிப்படுத்தியது. அதைக் கேட்ட பருந்துகள் மிகவும் சந்தோஷமடைந்தது.
“”அதற்கென்ன புறா சகோதரனே! நம் இரு குடும்பமும் இன்றிலிருந்தே நல்ல நட்புடன் இருப்போம். பிறகு ஒரு விஷயம். அதோ அந்த ஆலமரம் இருக்கிறதே அதனிடம் உள்ள ஒரு பொந்தில் கருநாகம் ஒன்று வசித்து வருகிறது. பார்க்கப் போனால் அதுவும் வேறினம் தான். அதனிடம் நாம் நட்புக் கொண்டால் அதனுடைய உதவியும் நமக்கு சமயத்தில் கிடைக்குமே,” என்று சொல்லிற்று. பிறகு பருந்தும், புறாவும் கருநாகத்திடம் சென்று அதனிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தன. கருநாகமும் அவற்றிடம் உற்ற நண்பனாக இருப்பதாக வாக்களித்தது. அன்றிலிருந்தே புறா, பருந்து, கருநாகம் ஆகிய மூன்றும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டன.
ஒரு நாள்— அந்தக் காட்டிற்கு வந்த வேடனொருவன் பகல் முழுக்க சுற்றி அலைந்து, எதுவும் கிடைக்காது போகவே அவனது கண்கள் தற்செயலாக புறாக்களின் கூட்டைப் பார்த்துவிட்டது.
மரத்தின் மீது எப்படி ஏறலாம் என்று அங்கும், இங்கும் பார்த்தான். மரத்தின் கிளைகள் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் மரத்தில் ஏறுவது மிகவும் சிரமம் என்று நினைத்தான். அப்பொழுது இரை தேடிவிட்டு தங்கள் சிறிய குஞ்சுகளுக்கும் உணவு எடுத்துக் கொண்டு வந்த ஜோடிப் புறாக்கள் வேடனைப் பார்த்துவிட்டன. தங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை அறியாத இளங்குஞ்சுகள் தங்கள் தாய், தந்தையரைப் பார்த்த சந்தோஷத்தில் “கீக்கீ’ என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.
இந்த சப்தத்தை கேட்டுவிட்டு வேடன் பெரிதும் மகிழ்ந்தான். கூட்டில் நிறைய பறவைகள் இருப்பதாக அவன் நினைத்துவிட்டான். உடனே அவன் தனது தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் பறவைக் கூட்டைக் குறிவைத்தான். இதைக் கவனித்துவிட்ட ஜோடிப் புறாக்கள் பதறிவிட்டன. தங்களைப் பற்றிக் கூட அவை கவலைப்படவில்லை. நேற்றுதான் பிறந்த புதிய குஞ்சுகளை அவ்வேடனிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பது புரியாமல் திகைத்தனர் திண்டாடின.
இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு தங்கள் பலங்கொண்ட மட்டும் கத்தின. இந்த சத்தம் சிறிது தூரத்தில் தள்ளி வசித்துவந்த பருந்துகளுக்குக் கேட்டது. உடனே அந்தப் புறாக்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை பருந்துகள் புரிந்து கொண்டன. உடனே அவை தங்களது கூட்டை விட்டு வெளியே வந்து பார்த்தன. வேடன் ஒருவன் துப்பாக்கியால் மரத்தைக் குறி வைத்தபடி நிற்பதைப் பார்த்த பருந்துகள் அந்த வேடனிடம் இருந்து புறாக்களை காப்பாற்ற நினைத்தன. உடனே அவை ஆலமரத்தின் பொந்திற்குச் சென்று கருநாகத்திடம் விஷயத்தைச் சொல்லின. கருநாகம் பொந்தை விட்டு வெளியே வந்து பார்த்து நிலைமையை உணர்ந்துக் கொண்டன.
“கையில் துப்பாக்கி வைத்திருக்கிறானே!’ என்று அது ஒரு வினாடி யோசித்தது. அவனை சமயோஜிதமாகத்தான் அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று அது முடிவு செய்து “கிடுகிடு’வென்று யோசித்தது. “”கவலைப்படாதீர்கள் நண்பர்களே! நம் புறா நண்பர்களை அந்த வேடனிடமிருந்து நான் காப்பாற்றுகிறேன்!” என்ற சொல்லிவிட்டு “சரசர’வென்று ஊர்ந்து சென்று வேடனுக்குப் பின்புறமிருந்த ஒரு மரத்தின் மீது ஏறியது. அடர்ந்த கிளைகளும், இலைகளும் அதற்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்க, மிகவும் கவனமாக கிளைகளினிடையே ஊர்ந்து சென்ற கருநாகம், வேடன் நிற்கும் இடத்திற்கு நேர் மேலே வந்தது.
வேடன் ஒரு கண்ணை மூடி புறாக்கூட்டை இன்னும் குறி பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் சிறிது கூட அசையவே இல்லை. கருநாகம் அவன் மீது எப்போது விழலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டே இருந்தது. திடீரென்று— வேடனின் முகம் மாறியது. சட்டென்று துப்பாக்கியை எடுத்து கீழே ஊன்றி, குனிந்து காலைச் சொறிந்தான். அந்த சமயத்திற்காகவே காத்திருந்த கருநாகம் “தொம்’மென்று அவன் கழுத்தில் விழுந்து சுற்றிக் கொண்டது.
தன் கழுத்தில் ஏதோ விழுந்து இறுக்குவதை உணர்ந்த வேடன் நிலைகுலைந்து துப்பாக்கியின் பிடியை விட்டான். தன் கழுத்தை ஒரு கருநாகம் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ஓ’ என்று அலறினான். கருநாகம் அவன் முன் “புஸ்… புஸ்…” என்று சீறியது.
“”ஐயோ! என்னை ஒன்றும் செய்யாதே. விட்டுடு!” என்று மரண ஓலமிட்டான்.
அதைக் கையெடுத்துக் கும்பிட்டான். பாம்பு அவனைக் கொத்தப் போவது போல் பல முறை பயம் காட்டிவிட்டு மெல்ல அவனை விட்டுக் கீழே இறங்கியது. அது இறங்கியதுதான் தாமதம். வேடன் துப்பாக்கியை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓடினான்.
தங்கள் உயிர் நண்பர்களால் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்த ஜோடிப் புறாக்களும் அதன் குஞ்சுகளும், பருந்துகளுக்கும், கருநாகத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டன. அதன் பிறகு அந்தப் புறாக்களும், பருந்துகளும், கருநாகமும் ஒன்றுக் கொன்று உற்ற தோழர்களாய் நீண்ட காலம் அந்தக் காட்டில் வாழ்ந்தன. புஜ்ஜீஸ்களே… கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப, இப்பறவைகள் போல், நாமும் நட்புடன் வாழ்ந்தால் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சி அடையலாம். நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சண்டைப் போடாம ஒற்றுமையாகதானே இருக்கிறீர்கள்?