காட்டுக்குள் வந்த ஒட்டகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 4,642 
 
 

பாலைவனத்திலிருந்து காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தது ஒட்டகம்.

“ஏய், நில்லு. உன் பேர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டது.

“நான்தான் மான்!”

“ஓ… நீ வெறும் மான் அல்ல, கிளை மான்” என்று சிரித்தது ஒட்டகம்.

“எதுக்கு இப்படிச் சிரிக்கிறே?”

“உன் தலையில் மரம், கிளைகள் எல்லாம் இருக்கே! பூ, பிஞ்சு எப்ப வரும்?” என்று கேட்டு மீண்டும் சிரித்தது ஒட்டகம்.

“ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு விதம். நீ ஒட்டகம், நான் மான். எனக்குக் கொம்பு முளைக்கும்” என்று நிதானமாகப் பதில் சொன்னது மான்.

“நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் எனக்குக் கொம்பு இல்லையே” என்ற ஒட்டகம், மானுடன் சேர்ந்து நடந்தது.

அப்போது ஒரு யானை வேகமாகக் கடந்து சென்றது.

“அது யார்? மூக்கு ஏன் சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீண்டிருக்கு?” என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்க ஆரம்பித்தது ஒட்டகம்.

“அது யானை. காட்டிலேயே மிகப் பெரிய விலங்கு” என்றது மான்.

“இந்தக் காட்டில் யாரைப் பார்த்தாலும் விநோதமா இருக்கு. எனக்குச் சிரிப்பா வருது” என்ற ஒட்டகம் அடுத்து யாரைக் கிண்டல் செய்யலாம் என்ற ஆர்வத்தில் நடந்தது.

திடீரென்று ஒட்டகத்தின் முகம் பிரகாசமானது. வேகமாக நடந்தது.

“காட்டிலேயே மிகச் சுமாரான விலங்கு இதுதான் போலிருக்கு! அகல வாய், சின்னக் காது, பெரிய மூக்குன்னு எப்படி இருக்குன்னு பாரு. சரி, இதோட பேரை நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று மீண்டும் சிரித்தது ஒட்டகம்.

“ஆமாம் ஆமாம். நீ கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளத்தான் வேணும்” என்று மானும் சிரித்தது.

“பேரைச் சொல்லிட்டுச் சிரித்தால் நல்லா இருக்கும்!”

“ஒட்டகம்” என்று மான் சொன்னது.

“என் பெயரைக் கேட்கவில்லை, அது பேரைச் சொல்லச் சொன்னேன் மான்” என்று ஒட்டகம் கேட்டது.

“அது பேரும் ஒட்டகம் தான்!”

“இந்த விலங்குக்கு என் பெயரை வைக்க எவ்வளவு தைரியம் உங்களுக்கு எல்லாம்?” என்று கோபப்பட்டது ஒட்டகம்.

“அதுக்கு உன் பெயரை வைக்கலை. அதுவே நீதான்!”

“என்ன, உளறுகிறாய் மான்?”

“இது கண்ணாடி. மனிதர்கள் ஆராய்ச்சிக்காக வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நீ இதுவரை கண்ணாடி பார்த்ததில்லை போலிருக்கு” என்று விளக்கம் அளித்தது மான்.

“நான் நம்ப மாட்டேன்.”

“நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீ தலை ஆட்டினால் அதுவும் ஆட்டும். செய்து பார்” என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தள்ளி நின்றது மான்.

ஒட்டகம் தலையை ஆட்டியது. வேகமாக மூச்சு விட்டது. ஈ என்று பல்லைக் காட்டியது.

“அட, நான்தான்! சே, என்னையே நான் இழிவாகப் பேசிவிட்டேனே! சரி, நான் உன்னைக் கிண்டல் செய்தபோது, நீ ஏன் என்னைக் கிண்டல் செய்யவில்லை ?” என்று பரிதாபமாகக் கேட்டது ஒட்டகம்.

“ஒருவரின் உருவத்தைப் பார்த்துக் கிண்டல் செய்வதற்கு என்ன இருக்கு? யாரையும் அழகு என்றோ, அசிங்கம் என்றோ நான் நினைக்கவே மாட்டேன். ஒவ்வொரு படைப்பையும் அப்படியே ஏற்றுக்கொள்வேன். சரி, நான் வருகிறேன்” என்று கிளம்பியது மான்.

“என்னை மன்னித்துவிடு. இனிமேல் யாரையும் கிண்டல் செய்ய மாட்டேன்” என்று வருந்தியது ஒட்டகம்.

“நண்பர்களுக்குள் எதுக்கு மன்னிப்பு?” என்ற மான் வேகமாக ஓடி மறைந்தது.

– ஏப்ரல் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *