(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டு மாம்பழக் குருவிகளும் கருவேல மரக்கிளையில் வந்து உட்கார்ந்தன. “கூடுகட்ட இந்த மரம் ஏற்றதுன்னு எப்படிச் சொல்றே?” கேட்டது பெண் குருவி.
“ஏன்னா, இந்த மரத்துல கரிச்சான் இருக்கு. இது இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இருக்கும். போன தடவை சப்போட்டா மரத்துல கூடு கட்டினோம். அணில் வந்து கூட்டைப் பிரிச்சு, முட்டைகளை எல்லாம் கீழே.தள்ளி உடைச்சிடுத்து நம்மால எதுவுமே பண்ண முடியலே..”
“அந்த மாதிரி இந்த மரத்துக்கும் அணில் வந்து கூட்டைக் கலைச்சு முட்டைகளைத் தள்ளி உடைக்காதுன்னு என்ன நிச்சயம்?”
“கண்டிப்பாக் கலைக்காது. ஏன்னா இந்த மரத்தில் கரிச்சான் குருவி குடும்பம் நடத்துது. பெரிய பறவைகளின் நாக்கு தலுக்குக் கூட இவை பயப்படாமல் எதிர்க்கும். அதனால் பெரிய பறவைகளும் அஞ்சும், நம்மைப் போன்ற சிறிய பறவைகளெல்லாம் கரிச்சான் வாழும் மரங்களைத் தேடி வந்து கூடு கட்டுவது வழக்கம். நாம் இங்கே நம்பிக்கையோடு கூடு கட்டலாம்” என்றது ஆண் குருவி.
“விர்…” – சத்தத்தோடு இரண்டு கரிச்சான் குருவிகள் எதிர்க் கிளையில் வந்து உட்கார்ந்தன. பார்ப்பதற்குப் பெரிய காக்கையைப் போல் இருந்தன இரண்டும். நீளமான பிளவுபட்ட வால், காகத்திற்குப் பாலீஷ் போட்ட மாதிரி பளபளக்கும். கறுப்பு நிறம். கண்விழிப்படலம் மட்டும் சிவந்த பழுப்பு நிறம். ஒன்றின் அலகில் ஒரு தும்பி. இரண்டாவது, ஒரு கம்பளிப் பூச்சியைப் பிடித்து வந்திருந்தது. இரண்டும் அவசரம் அவசரமாக உணவை முடித்துக் கொண்டன.
உணவை முடித்துக் கொண்ட இரண்டு கரிச்சான்களும் எதிர்க் கிளையில் உட்கார்ந்திருந்த மாம்பழக் குருவிகளை உறுத்துப் பார்த்தன.
“என்ன, கூடுகட்ட நோட்டம் பார்க்க வந்தீங்களா? ஏற்கெனவே மரம் நிறைஞ்சு இருக்கு. எல்லாரும் எங்களை நம்பி வந்து கூடு கட்டறீங்க. வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் நாங்க சண்டை போட்டு சண்டைக்காரப் பறவைன்னு பேரெடுத்தாச்சு. இதுல புதுசா நீங்க வேறயா? இங்க இனிமே யாரும் கூடு கட்டக் கூடாது. வேற மரம் பாருங்க..” என்று கத்திய பெண் கரிச்சான் ‘விருட்’டென்று பறந்து போனது.
மாம்பழக் குருவிகள் இரண்டும் ஏமாற்றத்துடன் ஒன்றை ஒன்று பரிதாபமாகப் பார்த்துக் கொண்டன.
“என் மனைவி கத்தினதை நினைச்சு கவலைப்படாதீங்க. அவள் பொல்லாத சண்டைக்காரிதான் இருந்தாலும் கூட இரக்கமுள்ளவள்! அதிலும் இப்போ முட்டையிடப் போகும் நிலை. அதனால் கோபமும், சண்டைக் குணமும் ரொம்ப அதிகமா இருக்கும். நீங்க பாட்டுக்கு கூடு கட்டுங்க. அவ திரும்பி வந்ததும் கத்தி சண்டைக்கு இழுப்பா. பதிலே பேசாதீங்க. குஞ்சு பொரிச்சதும் இந்தக் கோபம் ஆத்திரம் எல்லாம் பறந்து போயிடும்” என்று தைரியம் கூறிவிட்டுப் பறந்தது ஆண் கரிச்சான்.
மார்கழி மாதப் பனியில் கருவேலமரம் நனைந்து கொண்டிருந்தது. மரத்தில் கூடுகட்டிக் குடும்பம் நடத்திய பறவைகள் எல்லாம் இன்னும் எழவில்லை. ஆனால் கரிச்சான்கள் மட்டும் ‘கீச் கீச்’ என்று கத்தி உதயத்திற்கு வரவேற்பளித்துக் கொண்டிருந்தன.
வீட்டுக்கார அம்மாள் திருப்பாவை பாடும் குரல் கேட்டது.
“கீசு கீசென்று ஆனைச்சாத்தன் கலந்து” – ஆண்டாள் பாசுரத்தை அந்த அம்மாள் பக்தி உணர்வோடு பாடிக் கொண்டிருந்தாள்.
“கேட்டயா பாட்டை! கரிச்சான்னு மனிதங்க நமக்குப் பேர் வைச்சாலும், நம்ம சொந்தப் பெயர் ஆனைச்சாத்தன்தான். ஆண்டாள் திருப்பாவைல், நாம் அதிகாலையில் எழுந்து வருவதைப் பத்தி ரொம்பப் புகழ்ந்து பாடியிருக்கிறாள். வீட்டுக்கார அம்மா அதைத்தான் பாடறாங்க. வா போய்க் கேட்கலாம்” என்று அழைத்தது ஆண் கரிச்சான், ‘நாங்களும்’ என்று முன்வந்தன குஞ்சுகள் இரண்டும். கரிச்சான் குடும்பமே ஜன்னல் வழியாகப் பறந்து பூஜை அறையின் துணிக்கொடியில் உட்கார்ந்தன.
‘கீச்கீசென்று’ பாசுரம் பாதியிலேயே நின்றது. வீட்டுக்கார அம்மாள் கொடிக் கம்பியில் வரிசையாக அமர்ந்த கரிச்சான்களைப் பார்த்தாள் வெறுப்போடு.
“எத்தனை தைரியம் பார்த்தீங்களா இந்தக் கரிச்சான் குருவிகளுக்கு! வீட்டுக்குள்ளேயே வந்துடுத்தே! காலங்கார்த்தால எழுந்ததும் இதுங்க கரிமுகத்துல முழிக்கும்படி இருக்கே!” என்று இரைந்தாள் வீட்டுக்கார அம்மாள் பெரிதாக.
வீட்டுத் தலைவர் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்தார் கரிச்சான் களை விரட்ட.
“பாடறது நம்ம பெருமையைப் பத்தி. ஆனா, அதை நாம கேட்கக்கூடாதாம்! என்ன நியாயம்?” என்று ‘கிசுகிசு’வென்று இரைச்சலிட்டது ஆண் கரிச்சான்.
“நாம்தான் ஆண்டாள் பாடியிருக்கும் ஆனைச்சாத்தன்னு அந்த அம்மாவுக்கு எப்படித் தெரியும்? யார்தான் கரிச்சான்னு பேர் வைச்சாங்களோ?” என்றது குஞ்சுகளில் ஒன்று.
“நாம கத்தறது சில சமயங்களில் மனிதர்களை வைவது போல இருக்கிறதாம்! இனிமை இல்லாத குரலில் கரித்துக் கத்துவதால் நமக்குக் கரிச்சான்னு பெயர் வைச்சுட்டாங்க. வலியன், கரிக்குருவி, இரட்டை வால்குருவி, கரிவெட்டுவாலின்னு நமக்குப் பல பெயர் இருக்கு. ஆனால் நிலைச்சது கரிச்சான்தான்” என்றது பெண் குருவி.
ஆண்டாள் பாடிய பெருமைக்குரிய ஆனைச்சாத்தனைத்தான் விரட்டுகிறோம் என்பதை அறியாமல் வீட்டுக்காரர், குச்சியை வீசிக் குருவிகளை விரட்டினார். நான்கு குருவிகளும் “கிசுமுசு கிசுமுசு” என்று வீட்டுக் காரரைத் திட்டுவது போல் குரல் எழுப்பி வெளியே வந்தன.
வேல மரத்தில் மாம்பழக் குருவிக் குஞ்சுகளின் ஓலம் நெஞ்சைப் பிளந்தது. வேல மரத்தில் ஏறிய ஒரு பெரிய ஓணான், மாம்பழக் குருவிகளின் நெருங்கிக் கூட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
“கிஜு கிஜு கிஜு கிஜு!”
“க்கல் க்கல் க்கல்!”
“ட்லி… ட்லி… ட்லி..”
“க்கு… க்கு… குகூகூகூ..”
நான்கு கரிச்சான்களும் விதம்விதமாக சப்தம் எழுப்பி ஓணானை மாற்றி மாற்றிக் கொத்தின. ஓணான் தலையைத் திருப்பி குருவிகளைக் கெளவ எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. சரமாரியாக மின்னல் வேகத்தில் கரிச்சான்கள் கொத்தின. அதோடு அவை போட்ட இரைச்சலால் அந்த மரமே கிடுகிடுத்தது? தன் உயிரைக் காத்துக் கொண்டால் போதும் என்ற நிலை ஓணானுக்கு, பின்வாங்கி இறங்கி ஓடி மறைந்தது ஓணான்.
“எங்கள் நன்றியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை!” என்று தலை தாழ்த்தின மாம்பழக் குருவிகள்.
“எருமையார் புரண்டு படுக்கிறார். மண்ணில் உள்ள பூச்சிகள் எல்லாம் நகரும். நல்ல இரை கிடைக்கும்” என்றது பெண் கரிச்சான்.
நான்கும் மாட்டுக் கொட்டிலை நோக்கி விரைந்தன. புகழுரையைக் கேட்கக் கூட அவைகளுக்கு நேரமில்லை.
– 01 ஜூலை 1997