கண்ணன் செய்த தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 25, 2023
பார்வையிட்டோர்: 3,027 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகத நாட்டைப் பிருகத்ரதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கொடியவன். அவனுக்குப் பல காலம் மகவு ஒன்றும் இன்றி வாடி ஒருமுனிவனைப் பணிந்து பிள்ளை வரம் கேட்டான். அந்த முனிவன் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து – அதை அவன் மனைவிக்கு அளிக்குபடிக் கூறினான். பிருகத்ரதன் அதனைப் பெற்றுச் சென்று தன் மனைவிமார் இருவரிடமும் அளித்தான். இருவரும் பாதிப்பாதியாக உண்டனர். அதனால் குழந்தையின் பாதியை ஒருத்தியும், மற்றொரு பாதியை மற்றொருத்தியும் ஈனவே ‘இது ஏதோ உற்பாதம்’ என்று அஞ்சிய மகத வேந்தன் அந்த இரண்டு பாதிகளையும் தன் நகருக்கு வெளியே எறியுமாறு செய்து விட்டான்.

அன்று இரவு மாமிசம் தின்னும் சரை என்னும் அரக்கி ஒருத்தி மதில் வாபிலிலே உலாவிய போது, அந்தப் பிளவுகளைக் கண்டு இரண்டையும் ஒன்றாகப் பொருத்திப் பார்த்தாள். பொருத்தின மாத்திரத்தில் இரண்டும் ஒன்றுபட்டு உயிரோடு குழந்தையாகி விளையாடத் தொடங்கவே, அரக்கி அதனை அரசனிடம் அளித்து, “சரை என்ற என்னால் பொருத்தப் பட்டமையால் சராசந்தன் என்னும் பெயரிட்டு வழங்குவாயாக” என்று கூறிச் சென்றாள். அது முதல் அந்தக் குழந்தைக்குச் சராசந்தன் என்று வபயரிட்டு வளர்த்தான்.

Kannan

அந்தச் சராசந்தன் என்பவனும் கொடியவன் அவன் உலகத்து அரசர் எண்ணாயிரம் பேரைப்பசு வாகக் கொண்டு நரமேதம் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் கைப்பட்ட அரசர்களை எல்லாம் பற்றிச் சிறை வைத்தான். அதனால் உலகத்தில் உள்ளவர்கள் எவரும் அவன் பேரைச் சொல்லவே அஞ்சுவர்.

ஒரு சமயம் தரும்புத்திரர் இராசசூய யாகம் செய்ய எண்ணிக்கண்ணபிரான் முதலியவர்களோடு ஆலோசனை செய்தார். “உலகத்திலுள்ள மன்னர்களில் பலரைச் சராசந்தன் சிறைப்படுத்தி இருக்கிறான். அவனை முதலில் வெல்ல வேண்டும். அதற்கு வீமனே ஏற்றவன்” என்று கண்ணன் கூறினான்.

சராசந்தனைக் கொல்ல எண்ணி, கண்ணன், அர்ச்சுனன், வீமன், ஆகியோர் அந்தணர்களைப் போல் வேடம் பூண்டு சென்றனர். அவ்வாறு அந்தண வேடம் பூண்ட அந்த மூவரும் மகத, நாட்டுக்குள் சரா சந்தனுடைய நகரத்தை அடைந்தனர். அவர்கள் அரண்மனையை அடைந்து வாயில் காவலரிடம், “மூன்று அந்தணர்கள் உன்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிவிப்பாயாக” என்று கண்ணன் கூறினான். அரசன், ‘அவர்களை அழைத்து வாருங்கள்’ என்று சொல்ல, மூவரும் உள்ளே புகுத்து அவன் இட்ட தவிசில் அமர்ந்து ஆசியும் கூறினார்கள்.

அப்போது மகத மன்னன் அவர்களைக் கூர்ந்து நோக்கி, “உங்களைப் பார்த்தால் அந்தணர் என்று தோன்றவில்லை. உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார்?” என்று கேட்டான்.

“நான் யாதவ குலத்தலைவனாகிய கண்ணன் இந்த இருவரும் தருமபுத்திரனின் தம்பியர்; வீமனும் அர்சுனனும். உன்னுடைய வள நகரைக் காணும் பொருட்டு வந்தோம். அரசர்கள் இதை அணுகுவது அரிதாதலின் மறையவர் உருவத்தைப் புனைந்து புகுந்தோம்” என்றான் கண்ணன்.

சராசந்தன், “அப்படியா? என் தோள்கள் பகைவரைப் பெறாமல் தினவு கொண்டிருக்கின்றன. போர் புரிய வாருங்கள்” என்று ஊக்கத்தோடு கூறி, “மேலும் எனக்கு ஏற்றவன் வீமன்தான்” என்று அறை கூவினான். தன் மந்திரிகளை அழைத்துத் தன் மகனுக்கு முடி சூட்டி விட்டு வீமனுடன் மல்யுத்தம் புரியத் தொடங்கினான்.

அந்த இருவரும் சிங்கமும் சிங்கமும் பொருதாற் போலத் தாங்கினர்; காலாலும் கையாலும், தோளலும், தலையாலும் முட்டி மற்போர் செய்தனர். இவ்வாறு பதினைந்து தினங்கள் பகலும் இரவும் விடாமல் யுத்தம் செய்தார்கள். பூதலம் நடுங்க, திசை எல்லாம் நடுங்க. இருவரும் போர் செய்தனர். பிறகு வீமன் சராசந்தனைக் கிழித்து வெற்றியாரவாரம் செய்து நின்றான்.

இரண்டாகப் பிளந்து வீசிய சராசந்தனுடைய உடல் மீளவும் பொருத்தி ஒன்றாகியது. சராசந்தன் உடனே எழுந்து தோள் கொட்டி ஆர்த்தான். வீமன் அதுகண்டு வியந்து, மறுபடியும் போர் செய்யத் தொடங்கினான். முன்னிலும் ஏழு மடங்கு பலம் கொண்டு அவனை உதைத்துத் துகைத் தான். சராசந்தன் உடல் மீண்டும் இரண்டு பிளவாகியது.

அந்த இரண்டு பிளவுகளும் மறுபடியும் ஒன்று படும் எனத் தோன்றியது. வீமனும் அர்ச்சுனனுப் உண்மையை அறியாதவர்கள். கண்ணனோ அதைச் சேராதவாறு எண்ணி, அருகிலே கிடந்த ஒரு துரும்பை எடுத்து அதை இரண்டாகக்கிழித்து. பிளவுகள் இரண்டையும் தலை மாற்றிக் கீழே போட்டான்.

குறிப்புணரும் அறிவுமிக்க வீமன் அதை உணர்ந்து கொண்டு, சராசந்தனுடைய உடலின் பிளவுகளைத் தலையும் காலும் மாறிக் கிடக்கும் படியாக விடைவிலேயே மாற்றிப் போட்டான். சராசந்தன் மீள வழியில்லாமல் இறந்தான்.

பேசாத பேச்சினால் வீமனுக்கு வெற்றியை வழங்கிய மாய கேபாலனை யாவரும் புகழ்ந்தார்கள்.

– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *