தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,488 
 
 

முன்னொரு காலத்தில், ஓர் ஊரில் விவசாயி ஒருவன் மனைவியுடன் வசித்து வந்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு பிள்ளை இல்லையே என்ற குறை இருந்தது. விவசாயியும் அவனது மனைவியும் தங்களுக்கு குழந்தை இல்லை என்று கடவுளிடம் முறையிட்டனர்.

கடவுள் அவர்கள் முன் தோன்றினார். “”எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?” என்று கேட்டார். “”கட்டைவிரல் அளவுக்கு ஒரு பிள்ளை இருந்தாலும் போதும்” என்றனர்.

கட்டைவிரல் டாம்கடவுள் அப்படியே அவர்களுக்கு குழந்தை பிறக்க அருளினார். விவசாயி மனைவி அழகான, புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் குழந்தை அவளது கட்டைவிரல் அளவுக்கே இருந்தது. விவசாயி அதற்காக கவலைப்படவில்லை. அவர்களுக்கு ஆசைக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான்.

மாதங்கள் பல உருண்டு ஓடின. வருடங்களும் கடந்தன. ஆனாலும் டாம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருந்தான். அவனும் தனது தந்தையுடன் காட்டுக்குச் செல்வான். விறகு வெட்டியதும் குதிரையில்தான் வீடு திரும்புவார்கள்.

குதிரையின் காது மடலின் அருகே அமர்ந்துகொண்டு, டாம் குதிரைக்கு உத்தரவுகள் கொடுப்பான். ஒருநாள் டாமை இரண்டு வாலிபர்கள் பார்த்தனர். டாமை அழைத்துச் சென்று பொருட்காட்சியில் விட்டால் பணம் கிடைக்கும் என்று அவர்கள் திட்டம் போட்டனர்.

விவசாயியை அணுகி டாமைத் தங்களுக்கு விற்றுவிடும்படி கூறினர். பணமுடிப்பு ஒன்றையும் வழங்கினர். விவசாயி பணத்துக்கு ஆசைப்படவில்லை. டாமை விற்பதற்கு மறுத்துவிட்டான். டாம் தனது தந்தையை வற்புறுத்தினான். விரைவிலேயே தான் திரும்பி விடுவதாக வாக்களித்தான்.

டாமின் தந்தை முடிவில் அவனை விற்பதற்கு சம்மதித்தார். டாம் அந்த இரு வாலிபர்களுடன் சென்றான். அதில் ஒருவன் தலையில் தொப்பி அணிந்திருந்தான். டாம் அந்த தொப்பியில் அமர்ந்து கொண்டான். டாம் வழி எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தான். பிறகு தூங்கிப் போனான்.

டாம் விழித்து எழுந்து பார்த்தபோது அவன் தரையில் கிடந்தான். அவனை அழைத்து வந்த இரு வாலிபர்களையும் காணோம். சத்தம் போட்டு அழைத்தான். பதில் இல்லை. நத்தைக்கூடு ஒன்று அங்கே கிடந்தது. அதில் சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டான்.

தூங்கி எழுந்தபோது இரண்டு திருடர்கள் ஒரு வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டுவதை கேட்டான். அவர்கள் அருகே சென்று, “”நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். என்னால் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சுலபமாகப் புகுந்து வீட்டின் உள்ளே சென்றுவிடமுடியும்” என்றான்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டனர். இரண்டு திருடர்களும் டாமை ஜன்னல் அருகே தூக்கிவிட்டனர். டாம் ஜன்னல் கம்பியினுள் நுழைந்தான்.

அவன் வீட்டின் உள்ளே சென்றதும் “”உங்களுக்கு என்ன பொருள் வேண்டும்” என்றான். வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்து எழுந்து விடுவார்களோ என்று கொள்ளைக்காரர்களுக்கு பயம். அதனால் கொள்ளையர் இருவரும் அவனைச் சத்தம் போடாமல் பேசும்படி கேட்டுக் கொண்டனர்.

“”என்ன சொன்னீர்கள்? என் காதில் விழவில்லை… சத்தமாகச் சொல்லுங்கள்..” என்று டாம் கத்தினான்.

இந்தச் சத்தம் கேட்டு வேலைக்காரி எழுந்தாள். அவளுக்கு கொள்ளையர் திட்டம் புரிந்துவிட்டது. அதனால் அவர்களைப் பிடிப்பதற்கு முயன்றாள். கொள்ளையர்களோ சிதறி ஓடினர்.

டாமும் கீழே குதித்து ஓடினான். ஆனால் அவனால் அதிகம் தூரம் ஓடமுடியவில்லை. அவன் களைப்படைந்து இருந்தான். அதனால் அங்கிருந்த வைக்கோல் போரில் படுத்துத் தூங்கிப்போனான்.

மறுநாள் காலை, மாடு கறக்கும் பெண் அங்கே வந்தாள். டாம் படுத்திருந்த வைக்கோலை அப்படியே அள்ளி மாட்டுக்குப் போட்டாள். அலறிப் புடைத்து எழுந்த டாம், தான் பசுவின் வாயில் இருப்பதை உணர்ந்தான்.

“”வைக்கோல் வேண்டாம்… வைக்கோல் வேண்டாம்..” என்று பசுவின் வயிற்றில் இருந்தபடி சத்தம் போட்டான், டாம்!

மாடு கறக்கும் பெண்ணோ பசு தன்னிடம் பேசுவதாகக் கருதினாள். அவளுக்கு ஆத்திரம். மாட்டுக்கு இரண்டு அடி போட்டாள். கோபமுற்ற பசுவும் தான் தின்ற வைக்கோலை வெளியே துப்பியது. டாம் வெளியே வந்து விழுந்தான்.

அதேநேரம் அங்கே வந்த ஓநாய் டாமை கவ்விக் கொண்டு சென்றது. அப்படியே விழுங்கியும்விட்டது. ஓநாய் வயிற்றினுள் சென்ற டாம் கலங்கவில்லை.

அவன் – ஓநாய் வயிற்றிலிருந்தபடியே அதனிடம் பேசினான். “”வகை வகையான உணவு உனக்கு வேண்டுமா அப்படியானால் நான் சொல்கிறபடி செய்..” என்றான்.

ஓநாயும் அவன் சொன்னபடி டாம் வீட்டு வாயிலில் வந்து நின்றது. அவன் கொல்லைப் புறமாக போகச் சொன்னான். அங்கே ஆட்டுக் குட்டிகளை ஒரு கூடையைப் போட்டு கவிழ்த்து வைத்திருந்தனர். அதில் ஓர் ஆட்டுக்குட்டியை ஓநாய் அடித்துத் தின்றது.

இதர ஆடுகளின் சலசலப்புக் கேட்டு டாமின் தந்தை வெளியே வந்தார். அங்கே ஓநாய், ஆட்டுக்குட்டியை அடித்து திண்பதைக் கண்டார், ஆத்திரமுற்றார்.

ஓசைப்படாமல் உள்ளே சென்று சிறு கோடரி ஒன்றை எடுத்து வந்து ஓநாயைப் பார்த்து ஒரே போடாகப் போட்டார். ஓநாய் வயிற்றில் அடி விழுந்தது. ஓநாய் குடல் சிதறி கீழே சரிந்தது.

அப்போ, “”தந்தையே! இந்த ஓநாயை தொந்தரவு செய்யாதீர்கள். நான் இந்த ஓநாயின் வயிற்றில் இருக்கிறேன்… என்னைக் காப்பாற்றுங்கள்..” என்றான்.

தந்தை உடனே புரிந்து கொண்டார். டாமைப் பக்குவமாக வெளியே எடுத்தார். அவர் சொன்னார்:

“”உலகத்திலுள்ள தங்கம் அனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் உன்னை இனி யாரிடமும் அனுப்ப மாட்டோம்…” என்று கண்ணீர் விட்டு அழுதார். டாம் வழியில் சந்தித்த சோதனைகளை எல்லாம் தன் சாதனைகளாக பெற்றோரிடம் விவரித்தான்.

இது நடந்து அடுத்த சில நாட்களில் டாம் ஆற்றுக்கு சென்றான். பாலத்தில் நின்று ஆற்றின் வேகத்தையும் அதில் ஏற்படும் சுழல்களையும் வேடிக்கைப் பார்த்தான். அப்படியே தவறி ஆற்றில் விழுந்தான். அவனை ஒரு மீன் விழுங்கியது.

மீன் பிடிப்பவன் வலையில் அந்த மீன் சிக்கியது. அது உயர்ந்த வகை மீன் ஆனதால் அது மன்னர் ஆர்தருக்கு பிடிக்கும் என்று அவரிடம் எடுத்துச் சென்றான்.

மன்னரின் சமையல்காரன் மீனை இரண்டு துண்டாக வெட்டினான். டாம் மீனின் வயிற்றிலிருந்து வெளியே குதித்தான். சமையல்காரன் பயந்து சத்தம் போட்டான். ஒவ்வொருவராக வந்து மீன் வயிற்றிலிருந்து வெளியேறிய டாமைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த அதிசயச் சிறுவனைப் பற்றி கேள்விப்பட்ட மன்னரும் மகிழ்ந்தார். அவர் அவனைப் போற்றி “சர் தாமஸ் தம்ப்’ என்று பட்டமளித்து கவுரவித்தார். (தம்ப் என்றால் கட்டைவிரல்) அவனது பெற்றோர்களையும் அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து அவர்களை அங்கேயே தங்கச் செய்தார். விவசாயி, தன் மகன் மனைவியுடன் மன்னரின் மாளிகையிலேயே பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.

இங்கிலாந்து நாட்டுக் கதை
– தமிழில்: கண்மணி (பெப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *