ஒரு கிராமத்தில், ஒரு சமயம் காலரா நோய் பரவியது. சிலர் மருத்துவமனைக்குச் சென்றனர். சிலர் இறந்து போனார்கள்.
அந்த ஊரில் இருந்த பண்ணையார் பயந்து, பட்டணத்துக்குச் செல்லத் தீர்மானித்தார்.
அதற்காக வண்டிக்காரனை அழைத்து, இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டு வரும்படி சொன்னார்.
வண்டிக்காரன் , சமையல்காரனிடம், “நீயும் வருகிறாயா?” என்று கேட்டான்.
“பண்ணையார் காலராவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்தக் கிராமத்தை விட்டுப் புறப்படுவதை நினைத்தால், அவருடைய கடவுள் கிராமத்தில் வசிக்காமல், பட்டணத்தில் வசிப்பதாகத் தோன்றுகிறது. என்னுடைய கடவுள் இங்கேயே தான் வசிக்கிறார்” என்றான் சமையல்காரன்.
”ஆமாம், உண்மைதான் ! கடவுள் இருப்பாரானால், எல்லா இடங்களிலும் தானே இருப்பார். கிராமத்தில் இருந்தாலும் காப்பாற்றத்தானே செய்வார். ஏழை பணக்காரன், கிராமம், பட்டணம் என்ற பாகுபாடு காட்டினால், அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?” என்றான் வண்டிக்காரன்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்