(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தட்சிணேசுவரத்திற்கு அருகில் ஆரியா தஹை என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிருஷ்ணகிசோர் என்ற பெயருடைய பெரியார் ஒருவர் வசித்து வந்தார். அவர் ஓர் அந்தணர். வேதங்களை முற்றும் ஆராய்ந்தவர். எல்லோரும் அவரை ஒரு மகான் என்று போற்றி வந்தனர்.
பெரியார் கிருஷ்ண கிசோர் ஒரு முறை பிருந்தாவனத்திற்குத் தீர்த்த யாத்திரை சென்றார். பிருந்தாவனத்தில் இருக்கும் போது ஒரு நாள் அவர் ஏதோ ஓர் இடத்திற்கு நடந்து சென்றார். செல்லும் வழியில் அவருக்குத் தண்ணீர் தவித்தது. தண்ணீர் குடிப்பதற்காக எங்காவது கிணறு இருக்கிறதா என்று தேடிக் கொண்டு சென்றார்.
வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அந்தக் கிணற்றில் ஒரு மனிதன் தண்ணீர் மொண்டு கொண்டு இருந்தரன். பெரியார் கிருஷ்ண கிசோர் அந்த மனிதனை அணுகி, “ஐயா, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டார்,
அந்த மனிதன் அவரை நிமிர்ந்து பார்த் தான். “சுவாமி, தாங்கள் பிராமணர், நான் தாழ்ந்த சாதிக்காரன். நான் எப்படித் தங்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியும்?” என்று கேட்டான்.
“மகனே கடவுள் பெயரைச் சொல். நீ உயர்ந்தவனாகி விடுவாய். அதன் பிறகு எனக்குத் தண்ணீர் கொடு” என்று சொன்னார்.
அந்த மனிதன் அவ்வாறே செய்தான். கோவிந்தா! கோவிந்தா! என்று கூறிக் கொண்டே அவன் தண்ணீர் மொண்டு கொடுத்தான். உண்மையான வைதிகப் பிராமணரான கிருஷ்ண கிசோர், உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடு நீர் அருந்தினார்.
இறைவன் முன்னால் எல்லா மனிதரும் சமமே.
மக்களில் உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை!
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.