(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காற்றரசன் வானமண்டலத்திலேயே வேகமாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது, அவன் பார்வை நிலத்தின் பக்கம் திரும்பியது. பயிர்கள் செடி கொடிகளெல்லாம் வாடிக் கிடந்தன. மெல்லக் கீழே இறங்கி வந்தான்.
“நீங்களெல்லாம் ஏன் வாடிக் கிடக்கிறீர்கள்? என்ன நேர்ந்தது ?” என்றான் காற்றரசன்.
“அரசே. ஏரி குளமெல்லாம் நீர் வற்றிப் போய் விட்டன. எங்களுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால்தான் ஒரே வாட்டமாய் வதங்கிக் கிடக்கிறோம்” என்று அவை மறுமொழி கூறின.
அவற்றின் குரல் பரிதாபமாயிருந்தது! அவற்றின் நிலை ஒரே சோகக் காட்சியாயிருந்தது. “விரைவில் உங்கள் துன்பத்தைப் போக்குகிறேன்” என்று சொல்லிவிட்டுக் காற்றரசன் புறப்பட்டான்.
சிறிது தூரம் சென்றவுடன், கீழே ஒரு பெரிய நீர்ப்பரப்பைக் கண்டு இறங்கி வந்தான். கடலரசனைக் கண்டான்.
“நண்பா, உன்னிடம் நீர் நிறைய இருக் கிறதே! சிறிது அளவு பயிர் பச்சைகளுக்குக் கொடுத்து உதவுகிறாயா?” என்று காற்றரசன் கேட்டான்.
கடலரசன் சிரித்துக்கொண்டே, “வேண்டிய அளவு எடுத்துக் கொள்” என்றான். காற்றரசன் சிறிது நீரை அள்ளினான். அள்ளிய வேகத்தில் கீழே கொட்டி விட்டான்.
“ஒரே உப்பாயிருக்கிறதே!…” என்றான். இதைக் கேட்ட கடலரசன் பெருஞ்சிரிப்புச் சிரித்தான். “என்னிடமுள்ள நீர் குறையாமல் இருப்பதற்குத்தான் உப்பிட்டு வைத்திருக்கிறேன். இல்லா விட்டால் உன் மாதிரி ஆட்களுக்குப் பிச்சை போட்டே குறைந்து போய்விடும்” என்றான்.
கடலரசன் பேச்சுக் காற்றரசனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. சீற்றத்துடன் பாய்ந்து சென்று கதிரவனிடம் முறையிட்டான்.
“தம்பி, பயப்படாதே! கடல் அரசனுக்குத் தெரியாமலே நான் கடல்நீரை உறிஞ்சி மேகமாக்கித் தரு கிறேன். மேகங்களைத் தள்ளிக் கொண்டு போய் பயிர் பச்சைகளுக்கு மழையாகப் பொழியச் செய்து விடு. அவற்றின் வாட்டம் தீரும் ; ஏரி, குளங்களும் நிறையும்!தாமாகக் கொடுக்காதவர்கள் செல்வத்தை மறைமுகமாகத்தான் கவர்ந்து நன்மைக்குப் பயன் படுத்த வேண்டும்” என்றான் கதிரவன்.
அது, தான் சொன்ன வண்ணமே கடல்நீரை மேகமாக்கியது. காற்று அம்மேகத்தைப் பயிர்,செடி, கொடிகளுக்கும், ஏரி குளங்களுக்கும் மழையாகப் பொழியச் செய்தது. உலகம் செழித்தது!
கருத்துரை:- தாமாக உதவி செய்ய முன்வராதவர்களின் செல்வத்தை அவர்களும் மனம் நோகாமல் கவர்ந்து, பிறர்க்குதவி செய்வது எல்லோருக்கும் நலம் பயக்கும்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.