கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,562 
 
 

அன்று பள்ளியில் இரண்டாம் பீரியட். பள்ளியின் அலுவலக உதவியாளர் ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் காண்பித்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டிருந்தார். அந்தச் சுற்றறிக்கையைப் படித்த ஆசிரியர்கள் தன்னையறியாமல் சிரித்தார்கள். சிலர் பதட்டமானார்கள். சிலர் திரும்பி தேதிக் காலண்டரைப் பார்த்தார்கள். அந்தச் சுற்றறிக்கையில் கண்ட வாசகம் இதுதான். வரும் 8-ம் தேதி நம் பள்ளிக்கு மாவட்ட கல்வி அதிகாரி, திடீர் ஆய்வு நடத்தவிருக்கிறார். அவர் வரும் நேரம் ஏதும் குறிப்பிடவில்லை. அன்று அவரை நல்லமுறையில் வரவேற்க பள்ளி தயாராக இருக்க வேண்டும்.

ஓய்வு நேர உலகம்அவர் ஒவ்வொரு வகுப்பினையும் ஆய்வு செய்து, மாணவர்களின் திறனை சோதனையிடுவார் எனத் தெரிகிறது. அதனால், மாணவர்களுக்கு உரிய பயிற்சியை அளிக்கவும். அன்று ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. மாணவர்களும் பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கவும். அன்று, மாவட்ட கல்வி அதிகாரியின் பாராட்டைப் பெறும் ஆசிரியருக்கு சான்றிதழுடன்,பரிசும் மாவட்ட கல்வி அதிகாரியால் அன்று மாலை நடைபெறும் விழாவில் வழங்கப்படும். –

தலைமையாசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகவலை அந்தந்த வகுப்பாசிரியர்கள் தத்தமது வகுப்பு மாணவர்களுக்குத் தெரிவித்து மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் நம் வகுப்பிற்கு வரும்போது, அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து, உரிய மரியாதை அளிக்க வேண்டும். அவர் கேட்கும் கேள்விக்கு டக், டக் என்று பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பதட்டமாகவே இருந்தார்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. அன்று பள்ளியே விழாக் கோலம் பூண்டிருந்தது. பள்ளியின் எதிரே அழகிய வண்ணக் கோலம் பள்ளி மாணவிகளால் வரையப்பட்டு,மாவட்ட கல்வி அதிகாரி அவர்களே,வருக வருக என எழுதப்பட்டு காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்திருந்தது.

தலைமையாசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் அவர் வருகைக்காகக் காத்திருந்தனர். மாவட்ட கல்வி அதிகாரி பள்ளி துவங்கும் நேரத்திலேயே வந்து விட்டார். அவரை அனைவரும் வரவேற்றனர். அவரும் பள்ளியில் இறைவணக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர்,அவர் பள்ளியின் தலைமையாசிரியரின் அறைக்குச் சென்று,ஆசிரியர்களின் விவரங்களையும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறனையும்,பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரத்தையும் கேட்டறிந்தார். பின்னர், ஒவ்வொரு வகுப்பாகச் சென்றார்.

ஒவ்வொரு வகுப்பிலும், தன்னை வரவேற்று வண்ணத்தாள் தோரணங்கள் அலங்கரிப்பும், கரும்பலகையில் தலைவர்களின் பொன்மொழிகளையும், கல்வியின் அவசியத்தை முன்னிட்ட தத்துவ வார்த்தைகளையும் படித்துப் புன்முறுவல் பூத்தார்.

பின்னர், அந்த மாணவர்களிடம், அந்த வகுப்பு ஆசிரியர் நடத்திக் கொண்டிருந்த பாடத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்டார்.

மாணவர்களும் பதில் அளித்தனர். சில மாணவர்கள் திணறினர். ஆசிரியரிடமே சொல்லி, சில கேள்விகளை மாணவர்களிடம் கேட்கச் சொன்னார். பின்னர், அந்த வகுப்பாசிரியர்களுக்குப் பாடம் எடுக்கும்போது கையாள வேண்டிய முறைகளை எடுத்துரைத்தார். அதைக் கேட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ந்தனர்.

பின்னர், மாவட்ட கல்வி அதிகாரி,ஆறாம் வகுப்பு பி பிரிவு வகுப்பறைக்குச் சென்றார். அங்கு சரஸ்வதி டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் வரலாற்றுப் பாட ஆசிரியை.

கல்வி அதிகாரி தம் வகுப்பறைக்கு வருவதைக் கண்ட டீச்சர் அவரை வரவேற்றார். மாணவர்களும் எழுந்து நின்று வரவேற்று கைதட்டினர். அந்த வகுப்பறையைச் சுற்றி நோட்டம் விட்ட அதிகாரி, எல்லா வகுப்பிலும் கேட்டது போன்று அங்கு எந்தப் பாடம் நடத்தப்படுகிறதோ அதைப் பற்றி கேட்காமல், பொது அறிவுக்கேள்விகளைக் கேட்டார். “எது கறுப்புத் தங்கம் அழைக்கப்படுகிறது?’

என்று கேட்டார்.

உடனே நூர்ஜஹான் எழுந்து, “அய்யா. கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது நிலக்கரி’ என்றாள்.

பின்னர், “இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் அணுசக்தி நிலையம் எது? நீ சொல்லுப்பா..’ என்று முருகனைப் பார்த்துக் கேட்டார்.

“அய்யா, இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் அணுசக்தி நிலையம் தாராபூர் அணுமின் நிலையம்’ என்றான்.

இன்னொரு மாணவியிடம், “ஆண்டுதோறும் சிறுவர் திருவிழாவைக் கொண்டாடும் நாடு எது?’ என்று கேட்டார்.

உடனே மேரி எழுந்து, “அய்யா,ஆண்டுதோறும் சிறுவர் தின விழாவைக் கொண்டாடும் நாடு ஐப்பான்’ என்றாள்.

அதன்பிறகு, ஆசிரியரை விட்டே பல பொது அறிவுக் கேள்விகளைக் கேட்கச் சொன்னார். மாணவர்கள் அனைவரும் தயக்கமின்றிப் பதில் சொல்லியதைப் பார்த்த மாவட்ட கல்வி அதிகாரி மிகவும் மகிழ்ந்து, “உங்கள் வகுப்புப் பிள்ளைகள் பொது அறிவில் சிறந்து விளங்குவதற்கான காரணம் என்ன?’ என்று கேட்டார்.

அதற்கான காரணத்தை ஆசிரியர் கூறியதும், அதிகாரியும், “நான் நினைச்சேன்..’ என்று கூறிவிட்டு அடுத்த வகுப்புக்குச் சென்றார்.

பின்னர், அன்று மாலை நடைபெற்ற விழாவில் “இந்த ஆண்டிற்கான பள்ளியின் சிறந்த ஆசிரியர் யார் என்பதை மாவட்டக் கல்வி அதிகாரி அறிவிப்பார்..’ என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.

மாவட்ட கல்வி அதிகாரி எழுந்து பேசும்போது, “இப்பள்ளியின் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் சரஸ்வதி டீச்சர். ஏனென்றால் அவர் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமின்றி, நூலகங்களுக்கு சென்று மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குப் பொது அறிவு வளரும் எனத் தெரிவித்துள்ளார். நூலகங்களுக்குச் சென்று பல புத்தகங்களைப் படித்துள்ளதால் அவரது வகுப்பு மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குகிறார்கள். நான் கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, அவ்வகுப்பு மாணவர்கள் அனைவரும் தயங்காமல் பதில் கூறினர். இது அவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் எழுதும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நூலகம் என்பது நமக்கு ஓய்வு நேர உலகம், புத்துலகம் படைக்கப் புத்தகம் படிப்போம். அறிவால் உயர்ந்து, அரியாசனம் அமர்வோம். நூலகம் என்பது இயக்ககம் அல்ல, அது ஒரு இயக்கம், எனவே மாணவர்கள் அனைவரும் நூலகத்திற்குச் சென்று தம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நூலகத்தின் இன்றியமையாமையை, தம் மாணவர்களுக்குப் போதித்த சரஸ்வதி டீச்சரை நான் பாராட்டுகிறேன். சிறந்த வகுப்பு ஆறாம் வகுப்பு பி பிரிவு’ என்றார்.

அடுத்து, நன்றி நவில வந்த சரஸ்வதி டீச்சர் பேசும் போது, “என் மாணவர்களை நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று கூறுவேன். அதனாலேயே அவர்கள் பொது அறிவுக் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறினார்கள். மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சியைக் கண்டு நேரத்தை வீணே கழிக்காமல் நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். அவைகள் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நம்மை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், அவர்கள் வாழ்கையின் வெற்றி இரகசியத்தை நமக்கு எடுத்துச் சொல்லும்.

அவர்கள் என்றும் நம்மோடு பேசத் தயாராக இருக்கிறார்கள். சாதித்து மறைந்தேரை சந்திக்க வைக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. உடல் பசியை உணவாற்றும், செவிப் பசியை நல்ல இசையாற்றும், அறிவுப் பசியை ஆற்றுவது நல்ல நூல்களே. புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம். புதியதோர் உலகம் உருவாக்குவோம்’ என்றார்.

அதைக் கேட்ட மாணவர்கள் ஆசிரியரின் சொல்லை ஆமோதிப்பது போல கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். அப்பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் சரஸ்வதி டீச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

– பா.இராதாகிருஷ்ணன் (பெப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *