ஓடிப்போனவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 2,521 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கேட்டீங்களா கதையை! எங்கேயானும், எவனாச்சும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வானா? பால்ராஜ் வீட்டில் ஜான் என்கிற பொடியன் இருந்தானில்லே… அவன் இப்படிப் பண்ணுவான்னு யாருக்குத் தெரியும்! இந்தக் காலத்திலே எவனை நம்புறது?” – அந்தோனி அருகிலிருந்தவர்களிடம் அங்கலாய்த்தான்.

“என்ன அந்தோனி? அவன் தான் நல்ல பையனாச்சே! அவனைப் போல் தங்கமான் ஒரு வேலைக்காரப் பையனை எங்கே பார்க்க முடியும்? அப்படி என்னத்தைத்தான் செய்துட்டான்; நடந்ததைச் சொல்லப்பா!” என்று ஆரோக்கியம் வியப்போடு கேட்டான்.

“என்னத்தைச் சொல்றது! பால்ராஜ் வீட்டில் பத்து ரூபாய் பணத்தை எடுத்துட்டு, ஒருத்தருக்கும் தெரியாமெ ஓடிப்போயிட்டான், பாவிப்பயல்” என்று கோபத்தோடு அந்தோனி கூறினான்.

“ஏதோ கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச பையன்… காரணமில்லாமலா பணத்தை எடுத்துட்டுப் போயிருப்பான்? நல்லவேளை! பால்ராஜ் வீட்டுப் பணத்தோடு பழகிய அவன் பத்து ரூபாயோடு போனானே…அது போதாதா?” – பீட்டர் ஆறுதல் கூறினான்.

இவ்வாறு மாதாகோயிலின் ஒருபுறத்தே நாலைந்து பேர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் பாதிரியாரும் உட்கார்ந்திருந்தார். ஜானைப் பற்றிப் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததை அவரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சிந்தனையிலே மூழ்கிய அவரது முகம் ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்தது போல் காட்சியளித்தது.’ஜான் ஓடிவிட்டான்’ என்ற அவர்களின் பேச்சு, பாதிரியாரின் மனத்திரையிலே நிழலிட்டது.

“என்னங்க! என்னமோபோல் பேசாமே இருக்கீங்க?” என்று அந்தோனி கேட்டபோதுதான் பாதிரியாருக்கு உணர்வு வந்தது.

“ஒன்றுமில்லை; ஜானைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

”ஆமாம். குற்றம் புரிந்துவிட்டான்; அவன் வாழ்வில் நிம்மதி ஏது? நல் வாழ்விலிருந்து தவறிட்டான்; இனியா நல்லவன் என்று பெயர் எடுக்கப் போகிறான்? ஓடிப்போனவன் தானே!” – இது அந்தோனியின் மிடுக்கான பதில்.

பாதிரியாரின் மனம் தெளிவடைந்தது. அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார்; அவரது வாயினின்று எழுந்தன.

“அந்தோனி! அறியாது கூறிவிட்டாய்! ஓடிப்போனவன் உலகில் ஒழுங்கான வாழ்வு வாழ முடியாது என்று எண்ணிவிட்டாய்! உலகில் தவறு செய்யாதவன் கூடவா இருக்கிறான்? தவறுதான் மனிதனை உயர்த்தியும் தாழ்த்தியும் விடுகிறது. எத்தகைய உத்தமனும் ஒரு சிறு தவறாவது செய்துவிடுகிறான்; தவறு செய்தவன் தன் பிழையை எண்ணிப் பார்க்கும் போது உண்மையை உணர்ந்து புத்துணர்ச்சி பெற்று, புதிய மனிதனாகிவிடுகிறான். பெரியோர் பலரின் வாழ்க்கையை ஆராய்ந்தால் இதை உணரலாம். ஓடிப்போனவன் உயர்வடைய மாட்டான் என்று நீ எவ்வாறு நிச்சயமாகக் கூற முடியும்? நீ வேண்டுமானால் மறுக்கலாம்; நான் நடந்த கதை ஒன்றைக் கூறுகிறேன்; அதனால் நீ உண்மையை அறிந்து கொள்ளலாம்.” பாதிரியார் தம் பேச்சை முடித்துக் கொண்டார்.

பதிரியார் என்ன கதை சொல்லப் போகிறாரோ என்று அனைவரும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாதிரியார் கதையைக் கூற ஆரம்பித்தார்:

***

சில வருடங்களுக்கு முன் ஜோஸப் என்னும் பையன் ஓர் ஏழைக் குடும்பத்தில் இருந்தான். அவனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். குடும்பம் வறுமையின் பிடியிலே சிக்கித் தவித்தது. கால் வயிற்றுக் கஞ்சியைக் குடிப்பதால் இன்பமா ஏற்படும்? ஜோஸப் அந்த வயதிலேயே சிரமப்பட்டான். எவ்வாறேனும் படித்து முன்னுக்கு வந்தால், வருங்காலத்திலாவது குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற மேன்மையுணர்ச்சி ஜோஸப்பின் பிஞ்சு உள்ளத்திலே அரும்பியது. வீட்டிற்குச் சுமையாயிருப்பத்தை ஜோஸப் விரும்பவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி, எங்கேயாவது ஒரு மாதா கோயிலுக்குச் சென்று பாதிரியாரை ணுக்கியாவது கல்வி கற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

ஒரு நாள் இரவு. ஜோஸப் நிம்மதியற்றிருந்தான். ‘வீட்டை விட்டு வெளியேறு’ என்று அவன் உள்ளம் அலை மோதிக் கொண்டிருந்த்து. வீட்டில் எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஜோஸப் ஓசைப் படாமல் எழுந்து, வெளியே வந்தான். பின்னிலவு அப்பொழுதுதான் பவனி வரத் தொடங்கிற்று. மங்கிய அந்த நிலவொளி நடந்து செல்வதற்கேற்றதாக இருந்தது.

ஏசுநாதரை மனமார நினைத்துவிட்டு, நடையைக் கட்டினான் ஜோஸப். அந்த இரவிலே ஆந்தைகள் கத்திக்கொண்டிருந்தன. வானம்பாடிகள் மேல் நோக்கிக் கீச்சிட்டுப் பறந்து கொண்டிருந்தன. ‘இளங்கன்று பயமறியாது’ என்பதுபோல, ஜோஸப் விறுவிறு என்று முன்னேறிக் கொண்டே சென்றான். அவன் உள்ளம் இருபது மைல்களுக்கு அப்பாலிருந்த மருதம்பட்டி மாதா கோவிலையும்,பாதிரியாரையும் நாடிக் கொண்டிருந்தது.

மாலை ஐந்து மணியிருக்கும். மருதம்பட்டி மாதா கோயில் வராந்தாவில் பாதிரியார் உலாவிக் கொண்டிருந்தார். வாடிய முகத்துடன் தளர்ந்த நடையுடன், ஒரு பையன் பாதிரியாரை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல; ஜோஸப்பே தான். ஜோஸப்பின் தோற்றத்தைக் கண்ட பாதிரியாரின் மனம் இளகியது. அவனை அன்பாக அருகில் அழைத்து விசாரித்தார். ஜோஸப்பின் முழுக் கதையையும், அவன் விருப்பத்தையும், அறிந்த பாதிரியார் மனமகிழ்ச்சி அடைந்தார். வேண்டிய வசதிகளை அளித்து ஜோஸப்பை அங்கேயே தங்கியிருக்குமாறு கூறினார்.

***

நாட்கள் சென்று கொண்டிருந்தன. பாதிரியாரின் முழு அம்பையும் ஜோஸப் பெற்றான். பாதிரியார் மத ஞானத்தைப் போதித்து வந்ததோடு அறிவும் புகட்டி வந்தார். அவரது மாசற்ற போதனையிலே ஜோஸப்பின் களங்கமற்ற உள்ளம் லயித்தது. அவனது பரந்த நோக்கமும் பக்தியும், பண்பும் பெரியோரின் சிந்தையைக் கவர்ந்தன. பாதிரியார் தம் அன்புப் பரிசாக புனித சிலுவை ஒன்றை ஜோஸப்புக்கு அளித்தார். அவரது அன்புப் பிடியிலே ஆழ்ந்திருந்த ஜோஸப் துன்பமெல்லாம் மறந்திருந்தான். ஐந்து வருடங்கள் உருண்டோடியது அவனுக்குத் தெரியவில்லை.

அன்றொரு நாள் ஜோஸப் மாதா கோயில் வாசலில் உட்கார்ந்திருந்தான். பாதிரியார் உள்ளே பக்தி பரவசத்தோடு பைபிளைப் படித்துக் கொண்டிருந்தார்.

“ஏய், தம்பி! எங்கியோ பார்த்தாப்போல் இருக்கே! நீ யாரு, ஜோஸப்பா?” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தான் ஓர் ஆள்.

திடுக்கிட்ட ஜோஸப், திரும்பிப் பார்த்தான். அவனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. தன் ஊரிலிருந்த மரியையா என்பதை அறிந்து கொண்டான்.

“என்ன, மரியையா? எங்கே வந்தே?” என்று ஆவலோடு கேட்டான் ஜோஸப்.

“இங்கே தான் வந்தேன்; நம்ம பாதிரியாருக்குச் சமைச்சுப் போடுதில்லே எம் மச்சான்! அது ஊருக்குப் போகணுமாம்; அது போயிட்டா யார் சமைச்சுப் போடுவா? அதனால் நான் இருக்கணுங்கறதுக்காக வந்திருக்கேன்” என்றான் மரியையா.

அவர்களுக்குள்பல பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்தன.

பேசிக் கொண்டிருந்த மரியையா, திடுமெனப் பேச்சை நிறுத்திவிட்டான். அவனது கண்கள் கலங்கின; பேசாமல் நின்று கொண்டிருந்தான். ஜோஸப் அவனைத் திரும்பிப் பார்த்தான்.

“என்ன, மரியையா? ஏன் பேச்சை நிறுத்திட்டே? என்னவோ போல் நிக்கிறியே! வீட்டு விஷயத்தை இன்னும் சொல்லலியே!” ஜோஸப் ஆசையோடு கேட்டான்.

“ஆமாம், ஜோஸப். பேச மனம் வரவில்லை. துன்பத்தைச் சொல்லி இளம் உள்ளத்தைப் பரிதவிக்கச் செய்ய மனம் இடங்கொடுக்க மறுக்கிறது” என்று நெஞ்சடைக்கப் பதில் சொன்னான்.

“எனக்கு ஒண்ணுமே புரியல்லியே! என்ன விஷயம்? யார் உள்ளத்தை வாட்டறது? விளக்கமாகச் சொல்.” – இது ஜோஸப்பின் படபடக்கும் கேள்வி.

“ஜோஸப், மனத்தைத் திடப்படுத்திக் கொள்; சொல்கிறேன். ஒரு மாதகாலமாக நம் ஊரில் கடுமையான காலராவின் தாக்குதலுக்குப் பலர் பலியாகிவிட்டனர்; உன் குடும்பத்திலுங் கூட…” அவனால பேச முடியவில்லை.

ஜோஸப்பின் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

கண்கள் கனல் கக்கின. நெஞ்சம் குமைந்தது.

“மரியையா, என் மனத்தைத் வாட்டாதே! நிகழ்ந்ததைச் சொல், விரைவில் சொல்!” அவன் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

“உன் தாயைத் தவிர, குடும்பமே காலராவுக்குப் பலியாகிவிட்டது; நான் வரும்போது கூட உன் அன்னையின் நிலை ஆபத்தாகத்தானிருந்தது.” மரியையா பேச்சை நிறுத்திக்கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டான்.

***

காரிருள் செறிந்த அந்த நள்ளிரவிலே, மாதா கோயிலில் நிச்சப்தம் நிலவியிருந்தது. ஆனால் ஜோஸப்பின் மனம் அவனிடம் இல்லை. பெற்ற தாயை நினைத்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. நோயின் தாக்குதலில் இருக்கும் அன்னையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அவன் அகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. “ஊருக்குப் போ… ஓடு. பெற்ற தாயைக் காப்பாற்று” என்ற வார்த்தைகளே அவனைக் குத்திக் கொண்டிருந்தன. ஜோஸப் படுக்கையிலிருந்து எழுந்தான். அன்னையின் நோயைப் போக்க ஏதாவது மருந்து வேண்டுமே! டாக்டரிடம் காட்டினாலும் பணம் வேண்டுமே! அதற்கு எங்கே போவது? தன்னிடம் உயிரினும் மேலான அன்பு வைத்திருந்த பாதிரியாருக்கே மோசம் செய்யத் துணிந்துவிட்டான்.

பாதிரியாரின் பரிசுத்த அறையினுள் புகுந்தான். அவர் நிம்மதியான நித்திரையிலிருந்தார். சட்டை ஸ்டாண்டை நெருங்கினான். சட்டைப் பையில் கையை விட்டுப் பர்ஸைத் திறந்து, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்தான்.

கோயிலிருந்து வெளியேறினான். தாயின்மேல் ஏற்பட்ட பாசத்தில் நடந்தான். ஓரிரு மைல் சென்றிருப்பான்; மணியாகிவிட்டதை உணர்த்தும் கோயில் மணி ஒலித்தது. மணியோசை ஜோஸப்பின் வேகத்தைத் தடைப்படுத்தியது. ‘மணியடிக்குந் தோறெல்லாம் மாசற்ற உள்ளத்தோடு இருப்பாயே, இன்று மட்டும் ஏன் திருடனாய், பராரியாய் ஓடுகிறாய்? உன்னையே எண்ணிப்பார்! அன்னமிட்ட இடத்திலேயே கன்னம் வைத்து விட்டாயே! ஓடுவதற்கா விரும்புகிறாய்?’ மரணப் படுக்கை அவனைக் கலங்க வைத்தது. மற்றொரு புறம், ‘இறப்பின் எல்லையிலே – மரணப் படுக்கையிலே, அன்னை கிடக்கிறாள்; அவளைப் போய்க் காப்பாற்று; பெற்ற தாயைப் பேண்!’ என்று அச்சுறுத்தியது.

ஜோஸப் நடந்து கொண்டே இருந்தான். கண்ணிலிருந்த நீர் வழிந்து முகத்தை நனைத்திருந்தது. முகத்தைத் துடைத்த அவன் கை, கழுத்திலிருந்த சிலுவையின் மேல் பட்டது. சிலுவையைத் தொட்ட மாத்திரத்தில், ஜோஸப்பின் கையில் தேள் கொட்டியது போலிருந்தது. “அன்புப் பரிசாக எனக்கு அளித்தாரே பாதிரியார் அவரை விட்டுவிட்டு, அவருக்கே பங்கம் வருகிறாயே! உனக்கு நன்றியிருக்கிறதா?” என்று சிலுவை கேட்பது போலிருந்தது.

அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு நடந்தான். பொழுது புலர்ந்தது; கதிரவன் தன் வெண் ஊரையடையச்கதிர்களை வீசினான். ஜோஸப் சற்று தூரந்தான் இருந்தது. ஐந்தாறு வருடங்களுக்குமுன் அந்தப் பக்கத்திலிருந்த சோபையெல்லாம் இப்பொழுது அற்று விளங்கின. “ஊருக்குள் நுழையாதே!” என்பது போலிருந்தன. அவன் கண்ட காட்சிகள். ஊரை நெருங்கிவிட்டான். வயலிலிருந்து வந்து கொண்டிருந்த வேதமுத்து ஜோஸப்புக்கு அருகில் வந்தான். ஜோஸப்பைப் பார்த்த அவனுக்கு ஆத்திரமும் அநுதாபமும் வரத்தான் செய்தன.

“பெற்றோரைப் பார்க்க முடியாத பாவியாகி விட்டாயே! இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?” என்று அவன் கேட்டான்.

’தாயும் இறந்துவிட்டாள்’ என்று அறிந்த ஜோஸப், அனலில் வாடும் புழுப்போல் துடித்தான்.

“இவ்வளவு பாடுபட்டு வந்து அன்னையின் முகத்தைக் காணவில்லையே! ஐயோ! இனிமேல் அநாதை யாக இவ்வுலகில் வாழ்ந்து என்ன பயன்? குடும்பம் சென்ற வழியிலேயே நானும் போயிருக்கக் கூடாத? அன்பாகப் பேணிய பாதிரியாருக்கே துரோகம் செய்து விட்டு வந்தேனே! கண்ட பலன் தான் என்ன? கர்த்தர் என்னை இவ்வாறெல்லாம் சோதிக்கிறார். எல்லாம் விதியின் விளையாட்டு” – ஜோஸப் பலவாறு நொந்து கொண்டான்.

அந்த இடத்தில் நிற்பதற்கே தோன்றாமல் கால்போன போக்கிலே நடந்தான்! பாதிரியாரின் முகத்தில் மறுமுறை விழிக்க அவன்மனம் கூசி்ற்று. திருடிக் கொண்டு வந்த ரூபாய் நோட்டு சவக்குழியில் வைத்த பிணம் போலிருந்தது. தான் செய்த குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக ஒரு ‘மன்னிப்புக் கடிதம் எழுதி, பத்து ரூபாய் பணத்தையும் அவருக்கே அனுப்பிவிட்டான் அநாதை ஜோஸப்.

ஜோஸப்புக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதி ஏற்பட்டது. கிறிஸ்துவ ஞானபோதனை அளிக்கும் பள்ளியொன்று இருப்பதாக எப்பொழுதோ பாதிரியார் கேட்டிருக்கிறான். ஆகவே, அங்கே சென்றாவது கவலையை மறந்து கடமையைச் செய்து கொண்டிருக்கலாம் என ஜோஸப் எண்ணினான்.

ஜோஸப்  கிறிஸ்துவப் பள்ளியையும் அடைந்து விட்டான். பள்ளித் தலைவர் கேட்ட கேள்விக்குக் எல்லாம் ஜோஸப் திறமையாகப் பதில் சொன்னான். ஜோஸப்பின் அறிவைப் பாராட்டித் தலைவர் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

சில வருடங்களில் சமயத்திற்கான கல்வியிலும் பொதுக்கல்வியிலும் ஜோஸப் தேர்ச்சி பெற்றான். ஜோஸப் வாலிபனாகிவிட்டான். குடும்பத்தினரை இழந்த மனக் கசப்பு ஜோஸப்பை இல்வாழ்க்கையில் புகா வண்ணம் தடுத்துவிட்டது. ஜோஸப் மக்களின் அன்பைப் பெற்று, பாதிரியாராக இப்பொழுது பணியாற்றி வருகிறான்.

***

பாதிரியார் கதையை முடித்தார். கூடியிருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தால் பாதிரியாரைப் பார்த்து, “உணர்ச்சிமிக்க கதையைக் கூறி, உண்மையை விளக்கிவிட்டீர்களே! அந்த அர்ச் ஜோஸப், இப்பொழுது எங்கே இருக்கிறார்?” என ஆவலோடு கேட்டனர்.

பாதிரியாருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவர் அனைவரையும் உற்றுப் பார்த்தார்;

“தோழர்களே! அந்த அநாதை ஜோஸப் இங்கே தான் இருக்கிறான்! உங்கள் அருகில்தானிருக்கிறான்!”

உணர்ச்சிமேலிட தம் நெஞ்சைச் சுட்டிக் காட்டினார்.

அங்கிருந்த அனைவரும் அவரை வாயார வாழ்த்தினார்கள். ‘ஓடிப்போனவர்களில் எல்லோருமே கெட்டுப்போக மாட்டார்கள்’ என்று அந்தோனி அப்போதுதான் உணர்ந்தான்.

– 1956 – கண்ணன் இதழில் இடம்பெற்ற சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *