கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,163 
 

முன்னொரு காலத்தில் ஓர் விவசாயி இருந்தான். அவன் மனைவி, பிரசவத்தின் போது, ஒரு பிள்ளையைப் பெற்று விட்டு இறந்து விட்டாள். தன் குழந்தையை நல்லபடியாக வளர்க்க விவசாயி வேறு ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டான்.

அவளும், விவசாயியின் குழந்தையைத் தன் குழந்தையைப் போல கண்ணும் கருத்துமாகப் பார்த்து அன்போது வளர்த்து வந்தாள். மாற்றாந்தாய் என்ற எண்ணமே இல்லாமல், சொந்தத் தாயாகவே அவள் அந்தக் குழந்தையை வளர்ப்பதைப் பார்த்து ஊரே வியந்தது.

சில வருடங்களில் அவள் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று எடுத்தாள். மூன்று குழந்தைகளும் மிக்க பாசத்தோடு வளர்ந்தனர். அவளது பிள்ளைகள் இருவருக்கும் தனது அண்ணன், அப்பாவின் மூத்த தாரத்திற்குப் பிறந்தவன் என்ற விஷயமே தெரியாது. அவர்கள் அண்ணனைத் தங்களுக்கு முன் பிறந்தவனாகவே எண்ணி இருந்தனர்.

மூவரும் வளர்ந்து பெரியவர்களாயினர். விவசாயி தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தான். பிள்ளைகள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். வயதாகிய காரணத்தினால் விவசாயி இறந்து போனான்.

சில வருடங்கள் சென்றன.

மூத்தபிள்ளை வயலுக்கு செல்வான், ஆட்களை அடக்கி நன்றாக வேலை வாங்குவான். தங்கள் நிலம், வீடு ஆகியவற்றை கண் போல பார்த்துக் கொள்வான். அதனால் அவர்களுக்கு விளைச்சல் பெருகியது. மேலும் மேலும் செல்வம் பெருகியது. இதைக் கண்ட அவர்களது பக்கத்து வீட்டுக்காரன் பொறாமை கொண்டான்.

எப்படியாவது இந்தக் குடும்பத்தைப் பிரித்து விட வேண்டும். அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருப்பதால்தான் இவ்வளவு செல்வம் பெருகுகிறது என நினைத்தான்.

கடைசி சகோதரனைத் தனியாக அழைத்து, நீயும் உன் அண்ணனும் எப்படியெல்லாம் பாடுபடுகிறீர்கள். இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். ஆனால், இதை எல்லாம் அந்த அநாதைப் பயலுக்கும் அல்லவா பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது,” என்று பற்ற வைத்தான்.

“”அவன் என் அண்ணன்… அவனை ஏன் அநாதை என்கிறீர்கள்?” என்றான் கடைசி சகோதரன்.

வீட்டுக்காரன் விஷயத்தைத் தெளிவாகச் சொல்லி, பிரிவினையைத் தூண்டி விட்டான். இதனால் கடைசி சகோதரனின் மனம் சற்றே மாறிவிட்டது. அம்மாவிடம் வந்து, “”இந்தச் செய்தி உண்மையா?” என்று கேட்டான்.

“”ஆமாம் என்று ஒப்புக் கொண்டாள். அவன் எனக்குப் பிறக்கவில்லை, மூத்தவளுக்கு பிறந்தவன்தான்,” என்றாள்.

அவளுக்கு மூத்த பிள்ளையின் மீது பாசம் இருந்தது. எனவே, மூன்று சகோதரர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.

இரவு நேரம், கிழவி திடீரென்று “”பாம்பு பாம்பு,” என்று கத்தினாள். உடனே பிள்ளைகள் அலறி அடித்துக் கொண்டு வந்து, “”எங்கே அம்மா பாம்பு?” என்று கேட்டனர்.

மருமகள் ஒருத்தி, கை விளக்கை ஏற்றிக் கொண்டு வந்தாள்.

“”சின்னதாகப் பாம்பு ஒன்று வந்தது, அது நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, மூத்தவன் வாயை திறந்து கொண்டு தூங்கினான். அவனது வயிற்றுக்குள் நுழைந்து விட்டது,” என்றாள் கிழவி. இதைக் கேட்டதும் மூத்தவனுக்குத் திக்கென்று இருந்தது. வயிற்றுக்குள் சென்ற பாம்பை எப்படி வரவழைப்பது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அம்மா பொய் சொல்லமாட்டாள். அவள் சொல்கிறாள் வயிற்றுக்குள் பாம்பு நுழைந்துவிட்டது என்று, என்ன செய்வது? புரியாமல் தவித்தான் அவன்.

மறுநாள் காலை அவன் உடல் காய்ச்சல் கண்டு கொதித்தது. பயம் தொற்றிக் கொண்டது. உடல் சோர்வாக இருந்தது. அவன் வயலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டான்.

இப்படியாக ஒரு வாரம் சென்றது. மூத்தவன் பயத்தினால் பாதியாக இளைத்துவிட்டான். அவனால் முன்போல சாப்பிட முடியவில்லை. அதனால் வயல் வேலைகளைப் பார்க்கவோ, மற்ற வேலைகளைச் செய்யவோ முடியவில்லை.

வயிற்றுக்குள் நுழைந்த பாம்பு, அவனைப் படாதபாடுபடுத்தி எடுப்பதாக கிழவி தினமும் நூறு முறையாவது புலம்பினாள். ஒரு மாதம் ஓடிவிட்டது. மூத்தவன் இப்போது படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

இது தான் சமயம் என்று அவர்களது பக்கத்து வீட்டுக்காரன், தனது வரப்பைத் தள்ளிக்கட்டி அவர்களது நிலத்தில் பாதியைத் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டான்.

“”இது என்ன அநியாயம்?” என்று நியாயம் கேட்ட இளையவனை கத்தியைக் காட்டி மிரட்டினான்.

“”அண்ணன் இருந்தவரை அடங்கிக் கிடந்த இவன், இப்போது எப்படித் துள்ளுகிறான் பார்த்தாயா?” என்றான் மற்றொருவன்.

சில வாரங்களுக்குப் பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களது தோட்டத்திற்குள் சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்து தேவையான காய்கறிகளை எடுத்துச் சென்றனர். வாழைக்குலை காணாமல் போனது. தேங்காய்களும், இளநீர் குலைகளும் மாயமாய் மறைந்தன. வேலைக்காரர்கள் தங்களை கண்காணிக்க முதலாளி இல்லாததால் ஏமாற்ற ஆரம்பித்தனர்.

இந்த அக்கிரமங்களைத் தட்டிக்கேட்க முடியாமல் இரண்டு சகோதரர்களும் மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தனர்.

சின்னவர்களான இருவருக்கும் இவர்களை சமாளிக்கும் அனுபவம் போதவில்லை. அன்று இரவு தன் தாயிடம் இளையவன், “”பெரிய அண்ணன் மட்டும் முன்னமாதிரி நல்லா இருந்தால் இந்த அக்கிரமம் எல்லாம் நடக்காது. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க அவருக்குப் பயந்து, வாலைச் சுருட்டிக்கிட்டு இருந்தாங்க. எங்களை சின்ன பசங்களாக நினைத்து ஏமாத்தறாங்க,” என்று சொல்லி வருத்தப்பட்டான்.

அன்று இரவு நடுநிசியில் கிழவி மறுபடியும், “”பாம்பு பாம்பு,” என்று குரல் கொடுத்தாள்.

எல்லாரும் விளக்கை ஏற்றிக் கொண்டு ஓடி வந்தனர்.

பாம்பைக் காணவில்லை.

“”அம்மா, பாம்பு எங்கே?” என்றனர்.

“”பெரியவன் தூங்கிக்கிட்டு இருந்தான். அவன் வயித்திலே இருந்து அந்த பாம்பு வெளியே வந்து, சாக்கடை வழியா வெளியேப் போயிடுச்சி,” என்றாள்.

இதைக் கேட்ட அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

“”அண்ணா, நீ சரியாயிடுவே, உனக்கு இத்தனை மாதமாகத் தொல்லை கொடுத்த பாம்பு வெளியே போய்விட்டது,” என்று நம்பிக்கை ஊட்டினர்.

சில நாட்களில் மூத்தவன், பழையபடி சரியாகி விட்டான். வேளாவேளைக்குச் சாப்பிட ஆரம்பித்தான்.

முதல் நாள் அவன் வயலுக்குச் சென்றான். தங்கள் நிலத்தையும் பக்கத்து நிலத்துக்காரன் சேர்த்துக் கொண்டிருப்பதை அறிந்து, அவனைச் சத்தம் போட்டான்.

அவன் பயத்தோடு தன் தவறை ஒப்புக் கொண்டு, வரப்பை திருத்தி அமைத்தான். சகோதரர்கள் இரண்டு பேரும் சந்தோஷப்பட்டனர். அது முதல் அவர்களது தோட்டத்தில் திருடுபோவதும் நின்று விட்டது.

சகோதரர் இருவரும், மூத்தவனைத் தங்களிடம் இருந்து பிரித்து, தங்கள் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே பக்கத்து வீட்டுக்காரன் திட்டம் போட்டதை அறிந்து கொண்டனர்.

அது முதல் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து, மேலும் மேலும் செல்வம் சேர்த்தனர். கிழவி தன் தந்திரம் பலித்து, பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்து சந்தோஷம் அடைந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *