எலுமிச்சம்பழத்தின் ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 7,940 
 
 

ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அந்த தோட்டத்தில் ஏராளமான

காய்கறிகள்,பழங்கள் காய்த்து இருந்தன.

ஒரு பக்கம் கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,தக்காளி, பாகற்காய், போனறவைகளும், மறு புறம் ஆங்கில வகை காய்கறிகளான பீட்ரூட், நூல்கோல்,

காலி பிளவர், போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம்

அன்னாசி, எலுமிச்சை,பிளம்ஸ், போன்ற பழ வகைகளும் பயிரிடப்பட்டிருந்தன.

தினமும் ஆட்கள் அந்த தோட்டத்துக்குள் வந்து காய்கறிகளையும், பழங்களையும்,பறித்து வண்டியில் எடுத்து சந்தைக்கு கொண்டு செல்வர்.

ஒரு நாள் காய்கறிகள் அனைத்தும் ஏற்றப்பட்டு விட்டன. பழ செடிகள் வரிசையில் இருந்த எலுமிச்சை செடிகளில் எலுமிச்சை பழம் நன்கு பழுத்து மஞ்சள் கலராய் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. அதில் இருந்த ஒரு எலுமிச்சை பழம் தானும் வெளியே போக வேண்டும், எப்படியும் தன்னை வண்டியில் ஏற்றுவார்கள் என எதிர்பார்த்திருந்தது. கடைசி வரை வண்டியில் ஏற்றாததால் ஏமாற்றத்தில் அதன் நிறம் கூட மங்கலானது போல தெரிந்தது. வண்டி கிளம்ப போகும்போதுதான் கவனித்தார்கள், அட..எலுமிச்சை பறிக்கவே இல்லையே, பாருங்க எப்படி பழுத்து இருக்குதுன்னு, சொல்லிவிட்டு வண்டியை நிறுத்தி விட்டு எலுமிச்சை பழம் பறிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த எலுமிச்சைக்கு ஒரே சந்தோசம், பார்த்தீர்களா? எப்படியும் என்னை ஏற்றி விடுவார்கள் என்று நினைத்து கொண்டிருந்தேனே, அதே போல ஆகிவிட்டதல்லவா,

மற்ற எலுமிச்சை பழங்களிடம் சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டது.

சந்தையில் அனைத்து காய்கறிகள்,பழங்கள் இறக்கப்பட்டன. எலுமிச்சை பழங்கள் கொண்ட மூட்டை இறக்கப்பட்டவுடன் அந்த எலுமிச்சைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. எவ்வளவு பெரிய சந்தை, எல்லா தோட்டத்துல இருந்தும் பழங்கள் வந்திருந்தது. பக்கத்து மூட்டையில் இருந்த ஒரு எலுமிச்சையுடன் பேச்சு கொடுத்தது.

அண்ணே நீங்க எந்த தோட்டத்துல இருந்து வாறீங்க? நாங்க மேட்டுப்பாளையத்துல இருந்து வாறோம். அப்படியா அந்த ஊரு எங்க இருக்கு? அந்த

எலுமிச்சை கொஞ்சம் யோசித்து எனக்கு சரியா தெரியல, எங்களை இன்னைக்கு காலையிலதான் செடியில இருந்து வண்டியில ஏத்திட்டு வந்தாங்க. அப்படியா, எங்களையும் இன்னைக்குத்தான் ஏத்திட்டு வந்திருக்காங்க..

பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த மூட்டையை ஒரு ஆள் தலை மீது ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த மூட்டையை எடை பார்க்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டு ஐம்பது கிலோ இருக்கு, சொல்லி ஒரு சீட்டை எழுதி கொண்டு வந்த ஆளிடம் கொடுத்தார்கள்.

அவர் அந்த மூட்டையை மீண்டும் தலையில் ஏற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். உள்ளிருந்த அந்த எலுமிச்சைக்கு ஆடி ஆடி செல்வது சந்தோசமாய் இருந்தது.

மற்ற நண்பர்களிடம் பார்த்தீர்களா என்ன ஒரு ஆட்டம். சொல்லிவிட்டு கல கல வென சிரித்தது.. அந்த மூட்டை சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் இறக்கப்பட்டது.

மீண்டும் அந்த மூட்டை பிரிக்கப்பட்டு பழங்கள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டன.

இந்த எலுமிச்சம்பழம் தன்னை எப்படியும் நல்ல இடத்தில் பிரித்து வைப்பார்கள் என எதிர் பார்த்த்து. அதே போல் அந்த பழம் நல்ல ரகமாக சேர்க்கப்பட்டு, கடையில் அனைவரும் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டது. தனக்குள்ளேயே பேசிக்கொண்டது எலுமிச்சை, என்னோட கலரும் உருவத்தையும், பார்த்தாலேயே யாராவது ஒருவர் எடுத்துடுவாங்கன்னு எனக்கு தெரியுமே.

இப்பொழுது ஒரு பெண் தன்னை எடுத்து பார்ப்பதை பார்த்த எலுமிச்சைக்கு

மீண்டும் ஒரு மகிழ்ச்சி, எப்படியும் என்னை எடுத்து தன் பைக்குள் போட்டு கொள்வாள் என்று எதிர் பார்த்தது.

அந்தோ பரிதாபம், இந்த பழம் எவ்வளவு விலைப்பா? ஒரு பழம் அஞ்சு ரூபா

ரொம்ப அதிகமாக சொல்றேப்பா, சொல்லி விட்டு அடுத்த ரகத்தை பார்த்து இது என்ன விலைப்பா? அது ஒரு பழம் இரண்டு ரூபா, சரி அப்படீன்னா அதுலயே இரண்டு கொடுத்துடு., அந்த அம்மாள் சொல்லி விட்டு கையில் இருந்து காசை கொடுத்துவிட்டு அந்த பழங்களை தன் பைக்குள் போட்டுக்கொண்டாள்.

சே. நோஞ்சானாய் இருக்கும் அவனுக்கு வந்த வாழ்க்கையை பார், தனக்குள் அலுத்துக்கொண்டது, அன்று முழுக்க, அந்த எலுமிச்சையை யாரும் எடுக்கவே இல்லை.

மறு நாள் சற்று சுருக்கம் விழுந்து விட்ட தன் உடம்பை பார்த்து மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டது.நேற்று எவ்வளவு அழகாய் இருந்தோம், இன்று இப்படி ஆகி விட்டோமே, என்று வருத்தப்பட்டது. அன்றும் அதனை யாரும் எடுத்து செல்லவில்லை. பேசாமல் நம்மோட செடியிலேயே இருந்திருக்கலாம், இப்படி அநியாயமாய் வெளீயில வந்து வெயிலிலே வாடிப்போயிட்டோமே,அதற்கு கவலை பிடித்து கொண்டது, நாம் இப்படியே இருந்து காஞ்சு போயிடுவோமா?

நான்காம் நாள் அந்த பழத்தை கையில் எடுத்த பெண் ஏம்பா இந்த பழம் என்ன விலை? அம்மா இந்த பழம் இரண்டு ரூபா, சொன்னவரிடம், நாலு நாளைக்கு

முன்னால இந்த பழம் அஞ்சு ரூபாய்ன்னு சொன்னே, ஆமாம்மா, அப்ப நல்லா பக்குவமா இருந்துச்சு, இப்ப வெயிலிலே கொஞ்சம் வாடி போயிடுச்சு, அதுதான்.

சொன்னவரிடம் மறு பேச்சு பேசாமல் அந்த பெண் காசை கொடுத்து விட்டு தன் பையில் போட்டு சென்றாள்.

இப்பொழுது தான் ஏதோ குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் இருப்பது தெரிந்தது.

அந்த வெயிலுக்கு இந்த அறை பரவாயில்லை, நினைத்துக்கொண்ட அடுத்த நிமிடம்

பெண்ணின் கரம் ஒன்று தன்னை எடுத்து பார்த்து கையில் உருட்டுவதை உணர்ந்தது.

ஆஹா..ரொம்ப சந்தோசமாக அனுபவித்தது. சட்டென தன்னை அறுப்பதை உணர்ந்தது, அதற்கு வலி தெரியவில்லை.

ஏதோ குழலுக்குள் வைத்து திருகுவது கூட அதற்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல் இருந்தது. அப்புறம் தன்னை பிழிய பிழிய ஆனந்தமாய் நீரை உதிர்த்தது.

பாட்டி உங்க எலுமிச்சை ஜூஸ் பிரமாதம், நல்லா ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருந்துச்சு, நான்கைந்து குழந்தைகள், தங்கள் வாயை துடைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தது.பிழியப்பட்ட வெற்றுத்தோலான அந்த எலுமிச்சை பழம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *