எப்படி பிரிப்பது?

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,089 
 

ஒன்னொரு காலத்தில் வைசாலி என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் பெருமாள் நம்பி என்ற பணக்காரர் இருந்தார். அவர் சிறந்த அறிவுடையவர். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. புதிர்களின் மேல் அவருக்கு நிறைய ஈடுபாடு இருந்தது. தன்னைப் பார்க்க வருபவர்களிடம் கடினமான புதிர்களைக் கூறுவார். பிறகு அவைகளுக்குரிய விடைகளைக் கூறி வந்தவர்களை மகிழ்விப்பார்.

எப்படி பிரிப்பதுஒருமுறை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஒருவேளை தான் இறந்துவிட்டால், தான் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழே தோண்டிப் பார்க்குமாறு தன் மகன்களிடம் கூறியிருந்தார்.

ஒருநாள் திடீரென அவர் இறந்துவிட்டார். அவருடைய ஏராளமான சொத்துக்களை அவருடைய மூன்று மகன்களுக்கு எப்படி பிரித்துக் கொடுப்பது என்று யாருக்குமே தெரியவில்லை. அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.
அந்தச் சமயத்தில் கட்டிலுக்குக் கீழே தோண்டிப் பார்க்கச் சொன்னது மூன்று மகன்களுக்கும் ஞாபகத்திற்கு வந்தது. அதன்படி ஊரார் முன்னிலையில் கட்டிலுக்குக் கீழே தோண்ட ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரம் தோண்டியதும் மூன்று பாத்திரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் பாத்திரத்தில் கொஞ்சம் மண் இருந்தது. இரண்டாவது பாத்திரத்தில் கொஞ்சம் சாணம் இருந்தது. மூன்றாவது பாத்திரத்தில் குண்டுமணி அளவு தங்கம் இருந்தது. மூன்றாவது பாத்திரத்திற்குக் கீழே இருபத்தைந்து பொற்காசுகள் இருந்தன.

இதற்கு என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியவில்லை.
அந்த ஊரில் மதிவாணர் என்ற அறிவாளி ஒருவர் இருந்தார். இதுபோன்ற சிக்கலான புதிர்களைத் தீர்ப்பதில் அவர் வல்லவர். மூன்று மகன்களும் அவரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூறினர்.

ஒரு கணம் யோசித்த மதிவாணர், “”முதல் பாத்திரத்தில் மண் இருப்பதால், முதல் மகன் எல்லா நிலங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது பாத்திரத்தில் சாணம் இருப்பதால், இரண்டாவது மகன், எல்லா கால்நடைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது பாத்திரத்தில் தங்கம் இருப்பதால், அனைத்து தங்க நகைகளையும் மூன்றாவது மகன் எடுத்துக் கொள்ள வேண்டும்..” என்று கூறினார்.

“”அதுசரி, அந்த இருபத்தைந்து பொற்காசுகள் எதற்கு?” என்று மூத்த மகன் கேட்க,

“”உங்கள் சொத்துக்களை முறையாகப் பிரித்துக் கொடுத்த எனக்கு அன்பளிப்பாக இருபத்தைந்து பொற்காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார் உங்கள் அப்பா” என்று மதிவாணர் கூறினார்.
மூன்று மகன்களும் மதிவாணருக்கு இருபத்தைந்து பொற்காசுகளை மகிழ்ச்சியுடன் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சந்தோஷத்துடன் சென்றனர்.

– இரா. வசந்தராசன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *