ஒரு அரசன் தன்னுடைய நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களும், நடைமுறைகளும் நாகரீகம் இல்லாமல், இருப்பதாக வெறுப்படைந்தான். அவற்றை எல்லாம் மாற்றி அமைத்து, புதுமையான பழக்கங்களை புகுத்த விரும்பினான். அரசன் ஒரு நாள் அமைச்சர்களைக் கூட்டிவைத்து, “ஒரு குழுவினர் முன்னேறிய நாடுகளுக்குச் சென்று அவர்களுடைய பழக்கங்கள், நாகரீகங்கள் முதலானவற்றை அறிந்து வந்து, நம்முடைய நாட்டில், அவற்றை எளிதாக நிறைவேற்றலாம் என்று நினைக்கிறேன் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டான்.
அரசன் கூறியதை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆமோதித்துக் பாராட்டினார்கள்.
அரசன் கூறியதைப் பாராட்டாமலும், பதில் கூறாமலும் ஒரு அமைச்சன் மௌனமாக இருந்தான்.
அவனைப் பார்த்து, “என் திட்டத்தில் உமக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்டான் அரசன்.
ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, அதை இரண்டாக, மூன்றாக மடித்தான். அதைப் பலமுறை விரல்களால் அழுத்தி, பிறகு நகத்தால் தேய்த்து, அதை அரசனிடம் நீட்டினான் அந்த அமைச்சன்.
“அரசே! நீங்கள் எதையும் சாதிக்கக் கூடிய வல்லமை உங்களுக்கு உண்டு. உங்கள் எதிரில் எந்த எதிர்ப்பும் நிற்காமல் மறைந்து விடும் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகையால், நான் காட்டிய தாளில் உள்ள மடிப்பை, அதில் அடையாளமே தெரியாதபடி, செய்ய முடியுமா பாருங்கள்.” என்றான் அந்த அமைச்சன்.
அதைக் கேட்ட அரசன் தாளை வாங்கிப் பார்த்து சிந்திக்கலானான்.
இரத்தத்தில் பரம்பரையாய் ஊறிப்போன , மனத்தில் ஆழப் பதிந்த எதையும் அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. என்பதை உணர்ந்தான்.
படிப்படியாகத்தான் மாற்றம் உண்டாகும்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்