உழைத்து வாழ்வீர்களா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,572 
 
 

கெல்லீசில் பிரபு என்ற தொழிலாளி வசித்தான். அவன் மனைவி பெயர் ஜீவனா. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தான். தினமும் அவன் தவறாமல் வேலைக்குச் செல்வான். வேலை செய்து கிடைக்கும் கூலியுடன் மாலையில் வீடு திரும்புவான்.

அதை அவன் மனைவியிடம் கொடுப்பான். பிரபுவுக்கு குறைந்த கூலியே கிடைக்கும். ஆனால், அவன் மனைவியிடம் அதற்காக மனம் கோணமாட்டாள். அவள் குறைந்த வருமானத்திலும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தினாள். அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர். கூலி மிகக் குறைவாக கிடைக்கிறதே என்று பிரபு அடிக்கடி கவலைப்படுவான்.

http://www.dinamalar.com/siruvarmala…ages/Smr-9.jpg
அவன் மனைவி அவனைத் தேற்றுவாள். ஒரு நாள் பிரபு வேலைக்காக வெளியூர் செல்லத் திட்டமிட்டான். அதை தன் மனைவியிடம் தெரிவித்தான். “”வெளியூர் செல்ல வேண்டாம். இங்கே கிடைக்கும் கூலியை வைத்து சிக்கனமாக வாழலாம்,” என்று கூறிவிட்டாள் மனைவி. ஒரு நாள் பிரபு பக்கத்து ஊரில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு சென்றான். வீடு திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. பிரபு காட்டு வழியாக தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எங்கும் நல்ல இருள் பரவிக் கிடந்தது. காட்டில் நின்ற மரங்கள் எல்லாம் பயங்கரமாக ஆட்டம் போட்டன. நெஞ்சு திடுக்திடுக்கென்று கண்ணனுக்கு அடித்தது. அவன் திகிலோடு நடந்து கொண்டிருந்தான்.

அப்போது பின்னால் யாரோ சிலர் திமுதிமுவென்று ஓடி வரும் சத்தம் கேட்டது. பிரபு மிகவும் பயந்து விட்டான். பிரபு அஞ்சி நடுங்கினான். வேகமாக ஓடிச் சென்று அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டான். மேலே இருந்து யார் வருகிறார்கள் என்று கவனித்தான். அப்போது சில திருடர்கள் அந்த மரத்தின் அடிக்கு வந்தனர். அவர்கள் ஒரு பெரிய மூட்டையில் பணத்தைக் கட்டி வைத்திருந்தனர். அவர்கள் பேசுவதை பிரபு உற்று கவனித்தான்.

“”நாம் எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பணத்தைக் கொள்ளையடித்தோம். இப்போது நேரம் மிகவும் இருட்டாக இருக்கிறது. எனவே, இந்த பணத்தை ஒரு மரப் பொந்தில் மறைத்து வைப்போம். நாளை காலை வந்து பணத்தை பங்கிட்டு எடுத்துக் கொள்ளலாம்,” என்றான்.
மற்ற திருடர்கள் அதை ஆமோதித்தனர். பின்னர் பண மூட்டையை ஒரு மரப் பொந்தில் வைத்து மூடினர். அனைத்து திருடர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

பயம் தெளிந்தது. அவன் மரத்தின் மீது இருந்து திருடர்கள் போய் விட்டார்களா என்பதை கவனித்தான். பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். திருடர்கள் மரப் பொந்தில் ஒளிந்து வைத்த பண முடிப்பை எடுத்தான். பிரபுவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
இதற்கு முன் அவன் இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தது கூட இல்லை. இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டான். பண முடிப்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டை நெருங்க நெருங்க மீண்டும் அவனுக்கு பயம் ஏற்பட்டது. திருட்டுப் பணத்தை எடுத்து வந்ததற்கு அவன் மனைவி திட்டுவாளோ என்று பயந்தான். எனவே, வீட்டுக்கு வெளியே ஒரு மூலையில் பண முடிப்பை புதைத்து வைத்தான். சில நாட்கள் கழித்து மனைவியிடம் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டான். பின்னர் வீட்டுக்குள் போனான். பிரபு வரவுக்காக ஜீவனா கவலையுடன் காத்திருந்தாள். பிரபுவைக் கண்டதும், “”ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டாள்.

“”நண்பனிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் ஆகிவிட்டது,” என்று கூறினான்.
திருட்டு பணமுடிப்பை எடுத்து வந்ததைப் பற்றி புவனாவிடம் அவன் கூறவே இல்லை. பின்னர் சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். ஜீவனா தூங்கிய பின் கண்ணன் மெதுவாக எழுந்தான் வெளியே வந்தான். புதைத்து வைத்திருந்த திருட்டு பண முடிப்பை தோண்டி எடுத்தான். அதை வெளிச்சம் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றான். பண முடிப்பை பிரித்தான். பணத்தை வெளியே எடுத்து எண்ணினான், அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது.

பணத்தை அப்படியே மூட்டை கட்டினான். ஓசைபடாமல் வீட்டுக்குள் சென்றான். பணத்தை ஒரு பானையில் வைத்து மூடினான். பின்னர் சந்தடி செய்யாமல் வந்து படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. பெரும் பணக்காரனாகிவிட்ட மகிழ்ச்சியில் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அந்த பணத்தை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே பொழுதை கழித்தான்.

மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் வேலைக்கு புறப்படவில்லை.
“வேலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டாள் ஜீவனா.
“வேலைக்குப் போகவில்லை,” என்று கூறிவிட்டதைக் கேட்ட ஜீவனா திடுக்கிட்டாள்.
“வேலைக்குப் போகாமல் எப்படி சாப்பிட முடியும். நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்,” என்று கூறினாள்.
“ஒன்றும் சாக வேண்டாம்,” என்று சொன்னான் பிரபு.
“அப்படியெனில் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள். “வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கப் போகிறேன்,” என்று கூறினான்.
“வியாபாரம் செய்ய முன் பணம் வேண்டுமே?” என்றாள்.
பிரபு, “”நான் எங்காவது கடன் வாங்குவேன். அது பற்றி உனக்கு என்ன?” என்று எடுத்தெரிந்து பேசினான்.

கணவனின் போக்கு வியப்பாக இருந்தது. திடீரென்று அவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று அவளுக்கு புலப்படவில்லை. சிறிது நேரத்தில் ஜீவனாவுடன் அவன் சண்டை போட்டான். அவளை அடித்து உதைத்தான். ஜீவனா அழுதுக் கொண்டே தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாள். பிரபு அன்று பகல் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தான்.

பலரை சந்தித்து வியாபாரம் செய்ய யோசனை கேட்டான். வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாயாவது வேண்டும் என்று பலரும் சொல்லிவிட்டனர். பிரபு கவலை அடைந்தான். அவனிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. மீதி ஐந்தாயிரம் பெற என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான்.அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. இனிய இயல்புகள் அவனை விட்டு மறைந்துவிட்டன. பணம் பணம் என்று அவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.

வியாபாரம் செய்ய மேலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்தே பொழுதைக் கழித்தான். ஒருவழியும் தெரியவில்லை. கடைசியாக மீண்டும் ஒரு முறை மரப் பொந்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டான். மறுநாள் இரவு அவன் காட்டுக்குச் சென்றான். முன்பு திருடர்கள் பணம் வைத்திருந்த மரத்தின் அடியில் சென்று சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். பின்னர் ஓசைபடாமல் மரப் பொந்துக்குள் கையை விட்டான்.

அப்போது பின்னால் இருந்து யாரோ “கும் கும்’ என்று அவன் முதுகில் குத்தி “மடேர்’ என மண்டையில் ஓங்கி அடித்தான். பிரபு வலி பொறுக்க முடியாமல் “”அய்யோ அம்மா…” என்று சத்தம் போட்டான். தொடர்ந்து “படார் படார்’ என அடி விழுந்தது. பயத்தில் கண்ணை திறந்து பார்த்தான் பிரபு. அப்போது நான்கு திருடர்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஒரு திருடன் பயங்கர மீசையை முறுக்கி கொண்டு, “”டேய் முட்டாளே! எங்களிடமே திருடப் பார்க்கிறாயா? உன்னை சும்மா விடுவோமா?” என்றபடியே ஓங்கி கன்னத்தில் பளாரென அறைந்தான். பிரபு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தான். தொடர்ந்து கும் கும் குத்துக்கள் விழுந்தன.

“பணத்தை எங்கேடா வைத்திருக்கிறாய்?” என்று கேட்டு உதைத்தனர். “அய்யோ என்னை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள் அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன்!” என்றான். திருடர்கள் அவனை உதைத்து பிரபுவின் வீட்டுக்கு இழுத்துச் சென்றனர். அங்கிருந்த பண முடிப்பை பிரபு திருடர்களிடம் எடுத்துக் கொடுத்தான். திருடர்கள் நன்றாக அடித்து உதைத்து அவன் கையை முறித்தனர். பிரபு “அய்யோ அம்மா’ என்று அலறித் துடித்துக் கொண்டிருந்தான். மறு நாள் அவன் மனைவி ஜீவனா இதைக் கேள்விப்பட்டு ஓடி வந்தாள். அவனது நிலை கண்டு வருந்தினாள். பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள்.

தன் தீய எண்ணத்துக்காக மனம் வருந்தினான் பிரபு. மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். அதன் பின் உழைக்காமல் வரும் செல்வத்தை அவன் விரும்புவதில்லை. தினமும் வேலைக்கு சென்று சம்பாதித்தான். அதில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

குட்டீஸ்… வாழ்வில் அதிக பணம் சேர்க்க முயல்வது தவறல்ல. ஆனால், அதை உழைத்து சேர்க்க வேண்டும். உழைத்து பணத்தை செலவிடுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. உழைக்காமல் கிடைக்கும் பணத்தால் பிரச்னைகள்தான் அதிகமாகும். நீங்கள் உழைத்து வாழ்வீர்களா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *