உள்ளினும் உள்ளம் சுடும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 12,038 
 

சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக் கட்டிலை விட்டு எழுந்து வாசற்படியில் வந்து உட்கார்ந்தான். அடுத்த வீட்டின் கதவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் அரும்பித் தளும்பியது.

பக்தத்து வீட்டு பாபு சுகுமாரின் நண்பன்தான் என்றாலும் கிரிக்கெட் விளையாட்டு என்று வந்துவிட்டால் வெற்றி-தோல்வியில் சண்டை வந்துவிடும். பாபுவை எப்படியாவது அழவைக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டிருந்தான் சுகுமார். அத்திட்டத்துக்கு தூபம் போட்டவன் எதிரணியில் இருந்த மதன்.

ஐந்து நாள்களுக்கு முன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் சுகுமாரின் ஜுரத்துக்குக் காரணம்.

உள்ளினும்அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை என்பதால் சுகுமார் வீட்டுக்கு எதிரில் உள்ள மைதானம் கிரிக்கெட் களைகட்டியிருந்தது. அம்மா எவ்வளவு சொல்லியும், வீட்டுப் பாடத்தை எழுதாமல், அம்மா பேச்சைக் கேட்காமல் கிரிக்கெட் விளையாடப் போய் ஜுரத்தை வாங்கிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். அன்று கிரிக்கெட் விளையாட பந்து, மட்டை, ஸ்டெம்ப் எல்லாம் எடுத்து வந்தது பக்கத்து வீட்டு பாபுதான். ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவர் கொண்டுவர வேண்டும். இது அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம்.

÷டாஸ் போட்டுப் பார்த்ததில் சுகுமாரும் பாபுவும் எதிரெதிர் அணியினர் ஆயினர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதுவே இரண்டு அணியினருக்குள் சண்டையாகிவிட்டது. ஆட்டம் “டிரா’வில் முடிந்ததால், இரு அணியினரும் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து “சதி’ ஆலோசனை தீட்டிக் கொண்டிருந்தனர்.

÷””டேய் சுகுமார், பாபுவிடம் உள்ள கிரிக்கெட் பந்தை அவனுக்குத் தெரியாமல் நீ எடுத்து வந்துவிட்டால் உனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறேன், உன்னால் முடியுமா?” என்று தீமைக்குத் தூபம் போட்டு ஆசை காட்டினான் மதன்.

“”ஏன் முடியாது? பணத்தை எடுத்து தயாராக வைத்துக்கொள்; நீ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தரத்தான் போகிறாய்” என்ற சுகுமார், சொன்னபடியே பாபு தன் அணியினருடன் ஒதுக்குப்புறமாகச் சென்ற நேரம் பார்த்து பாபுவின் பந்தை எடுத்துவந்து விட்டான். உடனே சுகுமாரும் மதனும் அந்த இடத்தைவிட்டு விலகி ஐஸ்கிரீம் கடை வாசலில் நின்றிருந்தார்கள்.

÷

வீட்டுக்கு வந்த சுகுமார் வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு பாபுவின் அம்மா அவன் பந்தைத் தொலைத்துவிட்டு வந்ததற்காக அவனைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

÷இரவு தொண்டை கரகரக்கத் தொடங்கியது; லேசான வலியும் இருந்தது. மதன் வாங்கிக்கொடுத்த ஐஸ்கீரீம் வேலை செய்யத் தொடங்கியிருந்தது. சோர்வாகப் படுக்கையில் சாய்ந்தவனின் காதில் பாபுவின் குடிகாரத் தந்தையின் உரத்த குரலும், பாபுவின் அழுகையும் கேட்டது. தினமும் குடித்துவிட்டு ஏதாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பாபுவின் தந்தையின் கோபமெல்லாம் இன்று பந்தைத் தொலைத்த பாபுவின் மேல் திரும்பியிருந்தது.

“”அடிக்காதீங்கப்பா.. இனிமேல் பத்திரமா வைச்சுக்கிறேம்பா…” என்று பாபு கெஞ்சினான்.

“”இனிமே உனக்கு வாங்கிக் கொடுத்தாதானே பத்திரமா வெச்சுக்குவே? இனிமேல் கிரிக்கெட் விளையாடப் போனேன்னா உன் காலை ஒடிச்சுப்புடுவேன்” என்ற சொன்னதுடன் இல்லாமல் அடிக்கவும் செய்தார் என்பதை பாபுவின் அலறல் காட்டிக்கொடுத்தது.

÷பாவம் பாபு, என்னால்தானே அடிவாங்குகிறான்… என்ன இருந்தாலும் பாபு என் நண்பன். “ஓடிப்போய் நான்தான் பந்தை எடுத்துவந்தேன் என்று சொல்லிவிடலாமா?’ என்று நினைத்தான் சுகுமார். உடனே கால்கள் வாசலை நோக்கி விரைந்தன. ஆனால், இந்த விஷயம் தன் தந்தைக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று நினைத்தவுடன் கால்கள் வீட்டுக்குள் திரும்பின. வெகுநேரமாக பாபுவின் தந்தை திட்டிக்கொண்டிருந்ததும் பாபு அழுதுகொண்டிருந்ததும் காதில் விழுந்து. என்றாலும், அடிவாங்கும் பாபுவுக்கு ஆறுதல் சொல்லவோ, உண்மையை ஒப்புக்கொள்ளவோ சுகுமாருக்கு மனமில்லை.

÷அன்றிரவு சுகுமாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. “பனிக் காலத்துல ஐஸ்கிரீம் சாப்பிடாதேன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன், கேட்டாத்தானே, ஓசியில கிடைச்சா எதை வேணுமானாலும் சாப்புடுவியா? அஞ்சு ரூபாய்க்கு வாங்கித் தின்னுட்டு ஐநூறு ரூபாய்க்கு செலவு வைக்கிறே…’ அம்மா வெகுநேரம் திட்டிக்கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தாள்.

வாசற்படியில் அமர்ந்திருந்த சுகுமார் அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த வீட்டில் பாபுவின் குடிகாரத் தந்தையின் கடுஞ்சொற்கள் கேட்கவில்லை… பாபுவின் அழுகுரல் ஒலியும் இல்லை… மைதானத்தில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடும் ஆரவார ஒலியும் இல்லை… ஒரு வேளை ஊருக்குப் போயிருப்பார்களோ…? என்று நினைத்துக் கொண்டிருந்த சுகுமார் வாசல் பக்கம் வந்த அம்மாவிடம் “”அம்மா, பக்கத்து வீட்டுல யாரையும் காணோமே, ஊருக்குப் போயிருக்காங்களா?” என்றான்.

“”ஊருக்குப் போகலை; ஊரைவிட்டே போயிட்டாங்க. பாபுவோட அப்பாவுக்கு வேற ஊருக்கு மாற்றலாயிடுச்சாம். அதான் சொல்லிட்டுப்போக வந்தாங்க. நீ உடம்பு சரியில்லாம படுத்திருந்ததைப் பார்த்துட்டு, உன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்னு சொல்லிட்டு இன்னிக்குக் காலையிலதான் கிளம்பினாங்க” அம்மா உள்ளே போய்விட்டாள்.

சுகுமார் தன் உள்ளத்தில் ஒரு நெருடலை உணர்ந்தான்; மனச்சாட்சி உறுத்தத் தொடங்கியது. “பாவம் பாபு, அந்தப் பந்தை நான் எடுத்திருக்கக்கூடாது. அப்பாவிடம் அவன் அடிவாங்கிய அன்றே அதைக் கொண்டுபோய் நான்தான் எடுத்தேன் என்று அவனிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். என்னால்தானே அவன் அடிவாங்கினான். மன்னிப்பு கேட்கலாம் என்றால், அவன் இன்று இல்லையே…’ என்ற ஞானம் சுகுமாருக்குத் தாமதமாக உதித்தது. மனதுக்குள் பாவுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். சுகுமாருக்கு, பாபுவின் பந்தை எடுத்ததற்கு முதல்நாள் ஆசிரியர் வகுப்பில் நடத்திய திருக்குறள் 80-ஆவது அதிகாரமான நட்பாராய்தலில் வரும்

“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்’

என்ற குறள்தான் நினைவுக்கு வந்தது. அவன் கண்கள் கலங்கித் தளும்பியது.

தன் குடும்பத்தோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நண்பன் பாபு, “சுகுமாருக்கு உடல்நிலை விரைவில் குணமாக வேண்டும்’ என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டிருந்தான்.

– இடைமருதூர் கி.மஞ்சுளா (ஜூலை 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *