உயிரைக் காப்பாற்றிய கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 15,927 
 

ஒரு ஊரில் பள்ளி ஆசிரியையாக இருந்தார் ஒரு பெண்மணி. அவளுடைய வலது கை முழுங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும், கருமையும் கலந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

ஒரு நாள் அந்த ஆசிரியையின் மகள் எட்டு வயதுச் சிறுமி, அம்மா! நீ அழகாக இருக்கிறாய். ஆனால், உன்னுடைய வலதுகை பார்ப்பதற்கு விகாரமாய் இருக்கிறதே என்?” என்று கேட்டாள்.

“அருமை மகளே! ஒரு பொருள் அல்லது உடல் உறுப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதைக் கொண்டே அதன் அழகையும், விகாரத்தையும் மதிப்பிடவேண்டும்” என்றாள் தாய்.

“எனக்குப் புரிய வில்லை; புரியும்படி சொல்” என்று கேட்டாள் சிறுமி.

“நீ கைக் குழந்தையாக இருந்தபோது, தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தாய். திடீரென்று, ஒரு நாள் நம் வீட்டில் தீப்பற்றி எரிந்தது அடுத்த வீட்டுக்காரர்கள் குழந்தை, குழந்தை என்று கத்தினார்களே தவிர, ஒருவரும் வீட்டினுள் சென்று, குழந்தையைக் காப்பாற்றத் துணியவில்லை.

“என் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல், உள்ளே ஓடி, தொட்டியில் கிடந்த உன்னை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது, தீக்கொள்ளி ஒன்று என் வலது கையில் விழுந்துவிட்டது. அது பொக்களமாகி, வெண்மையும், கருமையுமாக இப்படி ஆகிவிட்டது.

“இந்தக் கை ஒரு உயிரைக் காப்பாற்றியதே என்ற நினைப்பில் வெண்மை, கருமை விகாரம் எதுவும் எனக்குத் தோன்ற வில்லை என்றாள் தாய்

“அம்மா ! என்னைக் காப்பாற்றிய இந்தக் கை எப்படி இருந்தால் என்ன?” என்று தாயின் கையை முத்தமிட்டாள் சிறுமி.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *