கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 17,212 
 
 

சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, “யோகி உண்மை விளம்பி’ என வர்ணித்தனர். “மெய் உயர்வைத் தரும்; பொய் தாழ்வைத் தரும்’ என்பதுதான் அவரின் தாரக மந்திரம். ஆகவே, அதையே உபதேசித்தும் வந்தார்.

UnmaiVilambiஒருசமயம் நதி ஓரத்தில் தன் சிஷ்யர்களோடு செல்லும்போது, ஒருவன் தான் பிடித்த ஆமையைக் கொல்ல அதன் முதுகின் மீது தடியால் அடித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ணுற்ற யோகி உண்மை விளம்பி அவனைப் பார்த்து, “”அன்பனே! ஆமை ஓடு வலுவானது. அதை உடைக்க முடியாது. திருப்பிப் போட்டு அடித்தால் அது உடனே இறந்துவிடும்!” என்றார். அந்த ஆளும் மகிழ்ச்சியோடு செய்து முடித்தான்.

யோகி சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால், ஒரு ஆமையைக் கொன்ற பாவ மூட்டையைச் சுமக்கக் காரணமானார். ஆனால், அதை அவர் உணரத் தவறிவிட்டார்.

மற்றொரு சமயம் உண்மை விளம்பி தன் ஆஸ்ரமத்தின் மேடையில் அமர்ந்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஒருவன் ஓடிச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கு சில காவலர்கள் வேகமாக ஓடிவந்தனர். அங்கு யோகியைக் கண்டதும், “”சுவாமி! இவ்வழியாக சற்று முன் யாராவது ஓடினார்களா?” என்று வினவினர்.

“”ஆம்! சிறிது முன் என் ஆஸ்ரமத்தின் வழியாக ஒருவர் ஓடிச் சென்றார்!” என்றார் யோகி.

“”நன்றி சுவாமி!” எனக் கூறிவிட்டு அந்த ஆளை எப்படியாவது பிடித்து விடலாமென்று வேகமாகப் பறந்தனர். கொஞ்ச தூரம் சென்றதும் அந்த ஆளைப் பிடித்துவந்து அரசனுக்கெதிரில் நிறுத்தினர். அரசனும் ஏதும் விசாரிக்காமல் காவலர்களைப் பாராட்டி விட்டு, அந்த ஆளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மறுதினம் அரசவையில் அவனை விசாரிக்கக் கொண்டு வந்தனர். காவலர்கள் அவனை துன்புறுத்தியும், தான் கள்வன் அல்ல; எதையும் கொள்ள அடிக்கவில்லை என வாதாடினான். அரசனும் அவனிடம், “”உண்மையைச் சொன்னால் உனக்கு விடுதலை; இல்லையேல் தூக்குத் துண்டனைத்தான் புரிந்ததா!” என்றார்.
நிரபராதியான அவன், “”நான் ஓடி வந்தது உண்மைதான். டாக்டர் அறிவுரைப்படி தினந்தோறும் உடற்பயிற்சிக்காக ஓடுவது வழக்கம். தெரியாமல் ஆஸ்ரமத்தின் வழியாக ஓடி வந்ததால் இந்த விபரீதம். கொள்ளை அடித்திருந்தால் மூட்டையோடு ஓடி வந்திருக்க மாட்டேனா? நிரபராதியான என்னைத் துன்புறுத்தியது நியாயமா? ஆனால், உங்களைச் சபிக்க நான் கண்ணகி அல்ல!” எனச் சொல்லி வருந்தினான்.

அப்போது உண்மையான கள்வன் பிடிப்பட்டான் என அரசனுக்கு செய்தி வந்தது. “நான் நீதி தவறி நடந்து விட்டேனே’ என்று வருந்தி இதற்கு காரணமான காவலர்களைக் கோபித்து, “”எக்காரணத்தைக் கொண்டு இவரைக் கைது செய்தீர்கள்?” என்று கேட்டான்.

“”அரசே! எங்களை மன்னித்து விடுங்கள். கள்வனைத் தேடிச் சென்றபோது வழியில் ஆஸ்ரமத்தில் யோகியைக் கண்டு விசாரித்ததில் அவரும், “ஆம் இவ்வழியே ஒருவன் ஓடியதைப் பார்த்தேன்’ என்றார். யோகி உண்மை விளம்பியாச்சே அவர் சொன்னது சரியே என மேலும் வேகமாகச் சென்று இவரைப் பிடித்து வந்தோம்!” என்றனர்.

எல்லாம் அந்த யோகி உண்மை விளம்பியால் நடந்து விட்டதை உணர்ந்த அரசன்
யோகியை அரசவைக்கு கொண்டு வர உத்தரவிட்டான். யோகி அரசவையை அடைந்தார்.

“”தாங்கள் உண்மை விளம்பி என்பது யாவரும் அறிந்ததே. காவலர்கள் கேட்டதற்கு தாங்களும், “ஆம் ஒருவன் இவ்வழியே ஓடினான்’ என்று கூறிவிட்டீர். எல்லாம் அறிந்த நீங்கள் அவன் கையில் ஏதாவது மூட்டை இருந்ததா எனப் பார்த்திருக்கலாம். எதற்காக அவனைத் தேடுகிறீர்கள் என்றுக் கேட்டிருந்தால் இந்த அநீதி நடந்திருக்காது.

“”தாங்கள் சொன்ன யோஜனையற்ற உண்மை நிரபராதியைக் குற்றவாளியாக்கி விட்டதே. உண்மை பகர்வதிலும் சிந்தித்து செயல்பட்டிருந்தால் நன்மை ஏற்படுமா எனத் தாங்கள் ஊகித்திருக்க வேண்டும். இருப்பினும் தங்களால் ஏற்பட்ட இக்குழப்பத்திற்காக ஒருநாள் சிறையில் தியானம் செய்து தங்களைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்!” என்றான்.

தவறு செய்தக் காவலர்களைப் பதவி நீக்கம் செய்தார் மன்னர். தன் அவசர புத்திக்கு அபராதமாக ஆயிரம் பொற்காசுகளை நிரபராதிக்கு அளித்தார் மன்னர்.

– நவம்பர் 26,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *