உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார்.
வழக்கத்துக்கு மாறாக அன்று அவரது கையில் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது.
மாணவர்களிடம் சிறு சலசலப்பு. தமிழய்யா ஏன் இந்தக் கண்ணாடி ஜாடியைக் கொண்டு வந்துள்ளார்? ஒருவர் ஒருவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
அந்த வகுப்பு மாணவன் மகேஷ். குறும்புக்காரன். “ஒரு கதை சொல்லுங்கள் ஐயா… அறிவியல் பாடம் ஏதாவது நடத்தி அறுத்துவிடாதீர்கள்…’ என்றான்.
ஆசிரியர் பொறுமையுடன், முன் பெஞ்சில் இருந்த மாணவனிடம், “வராண்டாவில் இருக்கும் தண்ணீர்ப் பானையிலிருந்து, இந்த ஜாடியில் பாதியளவுக்கு மட்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு வா…’ என்றார்.
அவனும் அவ்வாறே கொண்டு வந்து மேசை மீது வைத்தான். ஆசிரியர், மகேஷிடம் கேட்டார்- “உனக்கு, இந்த ஜாடி எவ்வாறு தெரிகிறது?’
அவன் வேகமாகச் சொன்னான் – “இந்த ஜாடி, அரைவாசி வெற்றிடமாக உள்ளது. மேல் மாடி காலி…’
மாணவர்கள் கொல்லென்று சிரித்தனர்.
மற்றொரு மாணவன், மணிகண்டன். அவன் நன்றாகப் படிப்பான். நல்லவன்.
அவனிடம் அதே கேள்வியைக் கேட்டார் ஆசிரியர்.
“ஐயா, இந்த ஜாடியில் பாதியளவு நீர் இருக்கிறது. அது யாருக்காவது தாகம் தீர்க்க உதவும்…’ என்றான் மணிகண்டன்.
ஆசிரியர் கூறினார்: “மகேஷ், இல்லாததைப் பார்த்தான்; மணிகண்டன் இருப்பதைப் பார்த்தான். அதுவே அவனது உயர்வுக்குக் காரணம். உங்களிடம் உள்ள நல்ல திறமைகளை அறிந்துகொண்டால், நீங்கள் மேலும் மேலும் உயர்வது உறுதி!’
மாணவர்கள் ஒன்றாகக் கைதட்டி மகிழ்ந்தனர்.
– செ.சத்தியசீலன், கிழவன்ஏரி (டிசம்பர் 2012)