ஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர் ஆசிரமத்தை அமைத்து தம் சீடர்களுக்குக் கல்வி புகட்டி வந்தார். அவரது சீடர்களில் எல்லாச் சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர் மகிமைதாசன், சந்துரு என்பவர்கள்.
ஒரு நாள் கருணைவேந்தன் அந்த இரு சீடர்களையும் அழைத்து, “”நீங்கள் இருவரும் என் சீடர்களில் சிறந்தவர்களாக விளங்குகிறீர்கள். நீங்கள் என்னிடம் கற்க வேண்டியது எல்லாம் கற்றாகி விட்டது. இனி உங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்,” என்றார்.
“”குரு சிரேஷ்டரே! எங்களுக்கு இப்போது அபூர்வ சக்திகள் கிடைத்துள்ளன. எங்கள் சக்தி கண்டு மற்ற மனிதர்கள் எங்களைச் சீண்டி துன்புறுத்தினால் நாங்கள் கோபம் அடைந்து அவர்களைச் சபித்தாலும் சபித்து விடுவோம். எங்களுக்குச் சாபம் கொடுக்கத்தான் தெரியும். கொடுத்த சாபத்தை விலக்கும் முறை தெரியாது. எனவே, அதையும் நீங்கள் எங்களுக்குக் கற்பித்தால் எல்லாருக்கும் நன்மை உண்டாகுமே!” என்றனர்.
அப்படியானால் தன் ஆசிரமத்தில் மேலும் ஒரு மாதம் தங்கும் படிக் கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின், “”சாபத்தை விலக்கும் முறையை அறிய கடும் உபாசனை மேற்கொள்ள வேண்டும். அது எல்லாராலும் முடியாது. உனக்கு அதனைக் கூறுகிறேன்,” என்றார்.
சந்துரு மிகவும் மகிழ்ந்து போனான். அவன் தன் குரு கூறியபடி உபாசனையை செய்யலானான். அதே சமயம் கருணைவேந்தன் மகிமைதாசனை அழைத்து, “”நீ இனியும் இங்கே இருப்பது வீணே. உன்னால் சாபத்தை விலக்கும் முறையைக் கற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து போயிற்று. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்,” என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.
சந்துரு தன் உபசானையை முடித்துக் கொண்டு குருவிடம் விடை பெற்று தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தான். இதற்குப் பின் ஐந்தாறு ஆண்டுகள் சென்றன.
ஒரு நாள் அந்நாட்டு மன்னன் மாரவர்மன், கருணைவேந்தனை தன் தர்பாருக்கு வரும்படி ஆட்களை அனுப்பினான். மன்னன் அனுப்பிய ரதத்தில் அமர்ந்து அரண்மனையை அடைந்தார் குரு.
“”நான் என் தர்பாரில் தகுதியும் திறமையும் பெற்ற ராஜகுரு ஒருவரை நியமனம் செய்ய விரும்புகிறேன். அப்பதவிக்கு ஏற்றவர்கள் தங்களது சீடர்களான மகிமைதாசனையும், சந்துருவையும் எல்லாரும் பரிந்துரைக்கின்றனர்.
“”சந்துரு நாடெங்கிலும் பயணம் செய்து மிகவும் சக்தி வாய்ந்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறான். அவனைக் கண்டு கொடியவர்கள் நடுங்கி தம்மைத் திருத்திக் கொண்டு நல்லவர்களாக ஆகிவிடுகின்றனர்.
“”அவனுக்குப் பல சீடர்கள் கூட இருக்கின்றனர். அவர்கள் தம்மை “தாச சேனை’ எனக் கூறிக் கொண்டு கொடியவர்களைத் தேடிப் பிடித்து தம் குருவின் முன் கொண்டு போய் நிறுத்துகின்றனர். அக்கொடியவர்கள் எங்கே சந்துரு தங்களை சபித்து விடுவானோ எனப் பயந்து திருந்தி விடுகின்றனர்,” என்றார்.
“”அப்படியா? சரி! மகிமைதாசனைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.
“”அவனுக்கு சந்துருவைப் போல அவ்வளவு புகழ் இல்லை. அவனுக்குச் சீடர்களும் மிகக் குறைவே. அவன் அவ்வப்போது மக்களை நல்வழிப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றி அறிவுரை கூறுகிறான்.”
“”அவனது பேச்சைக் கேட்க ஆவலுடன் மக்கள் கூடுகின்றனர். அவனது அறிவுரைக் கேட்டு பலர் திருந்தியும் உள்ளனர். அவனுக்கு மக்களிடையே உயரிய மதிப்பு உள்ளது. ஆனால், அவனிடம் அரிய சக்திகள் உள்ளனவா என்று யாருக்கும் தெரியாது,” என்றான்.
“”எனக்கு இருவரில் மகிமைதாசனையே பிடிக்கும். அவனே இந்த ராஜகுருப் பதவிக்கு ஏற்றவன்,” என்றார். மன்னனும் குருவின் யோசனையை ஏற்று மகிமைதாசனையே ராஜகுருவாக அமர்த்தி கொண்டான்.
சந்துருவுக்கு தான் சாபத்தை விலக்கும் முறையைக் கற்பித்தார். மகிமைதாசனால் கற்க முடியாது என்று கூறி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், ராஜகுருவை நியமிக்கும் விஷயத்தில் மகிமைதாசனையே அப்பதவியில் அமர்த்தும் படிக் கூறினார்.
இதன் காரணம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
“”உலகில் சிலர் புகழ்பெற விரும்புகின்றனர். வேறு சிலர் அடக்கமாக இருக்கின்றனர். சந்துரு முதல் ரகத்தைச் சேர்ந்தவன். மகிமைதாசன் அடக்கமாக இருந்து தன் சக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்தான். சந்துருவைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். மகிமைதாசனை விரும்பி அவன் சொல்வதைக் கேட்கக் கூடினர்.
“”ஒருவன் கோபம் கொண்டாலே சாபம் கொடுப்பான். பிறகு அதை விலக்குவான். இதனால் கோபம் கொள்பவன் சந்துரு. சாபம் விலக்கத் தெரியாததால் மகிமைதாசன் கோபமே கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்தான். இவற்றை எல்லாம் சீர்துõக்கிப் பார்த்தே அவர் மகிமைதாசனை அப்பதவியில் அமர்த்தும்படிக் கூறினார். அவரது போக்கிலும் முரண்பாடு இல்லை.
சந்துருவுக்கு சாபத்தை விலக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தது அவனால் பிறருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை விலக்கி நன்மை புரிய வேண்டும் என்பதற்காகத்தான். மகிமைதாசனால் அவ்வித ஆபத்து ஏற்படாது என உணர்ந்தே அவர் அவனுக்கு அந்த முறையைக் கற்பிக்கவில்லை,” எனக் கூறினான்.